சத்யமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக நான்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்க கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. அதில் வருகிற 24 ஆம் தேதி (இன்று) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டது.
அதன்படி, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால், ரூபி மனோகரன் இக்கூட்டத்தில் ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டும், மோதல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தும், ரூபி மனோகரன் கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கின் விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நேரம் இல்லாததால் இந்த மனுக்கள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதன்படி உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பில் இருந்தும் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டத்தை இயற்றிய சட்டப்பேரவையின் அதிகாரம் குறித்து மட்டுமே அக்கறை செலுத்த உள்ளோம் என்று தெரிவித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும்29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மின்சார அலுவலகங்களில் ஆதாரை இணைக்க சிறப்பு கவுன்ட்டர்கள் திறப்பு
மின்சார அலுவலகங்களில் ஆதாரை இணைக்க பொதுமக்களுக்கு உதவுவதற்காக சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதுதொடர்பாக மின்நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியது. ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற பயத்தில் பலர் இணைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கம்ப்யூட்டர் சேவை மையங்களை நாடி ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். பாமர மக்களுக்கு உதவ மின்சார அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள மின்சார அலுவலகங்களில் இதற்காக பிரத்தியேக கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
நடிகர் கமல்ஹாசனுக்கு நேற்று இரவு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், ‘காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் உடல் நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்’ என போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாணவனின் பிறப்புறுப்பில் தாக்கிய சக மாணவர்கள்: சென்னையில் கொடூரம்
சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், கே.கே நகரில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாண்டிச்சேரியில் படித்து வந்த இந்த சிறுவன் கடந்த 5 மாதத்திற்கு முன்புதான் சென்னைக்கு குடிப்பெயர்ந்து இந்த பள்ளியில் சேர்ந்துள்ளார். சிறுவனின் மொழி மற்றும் பாவனையை 10க்கும் மேற்பட்ட சக மாணவர்கள் கிண்டல் செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், சிறுவனுக்கும் சக மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சிறுவனை சக மாணவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து சிறுவன் அளித்த தகவலின் பேரில் சிறுவனின் தந்தை ஆசிரியர்களிடம் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில், ஆசிரியர்களிடம் புகார் செய்தது குறித்து ஆத்திரமடைந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 21ஆம் தேதி பள்ளி முடிந்ததும், சிறுவன் வெளியே வந்தபிறகு அவனை தாக்கி அரை நிர்வாணமாக்கி உள்ளனர். பின்னர் அவனது பிறப்புறுப்பில் தாக்கி கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தொந்தரவில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.