No menu items!

தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நடைபெற இருந்த அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாட்டில் நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘தமிழ்நாட்டில் தற்போது பல இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளது. ஆர்.எஸ்.எஸ். தரப்பினர் மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டில் 8-ம் தேதி வரை மழை தொடரும்: 9-ம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தென் தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 8ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 8ஆம் தேதி தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், ‘இலங்கையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 9-ம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது 10, 11ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். எனவே, மீனவர்கள் 8, 9-ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’ என்று கூறினார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது நடிகை கல்யாணி போலீஸில் புகார்

பிரபல தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி ஐதராபாத் நகரில் உள்ள சைராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்,’ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ எனும் இந்து சிலோகங்களை, அவர் சமீபத்தில் வெளியிட்ட தனிப்பட்ட பாடலில் பயன்படுத்தியுள்ளார். இதனால், தானும், தான் சார்ந்த இந்து சமூகம் புண்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்துக்களின் புனித கடவுளான ராமரை வணங்கும்போது பயன்படுத்தும் அந்த சுலோகத்தை ஆபாசமான காட்சிகள் நிறைந்த பாடலில், பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பயன்படுத்தியுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்துகளை புண்படுத்தியதற்காக தேவி ஸ்ரீ பிரசாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கரோத்தே கல்யாணி வலியுறுத்தியுள்ளார்.

எம்.எல்..க்களை இழுக்க பாஜக ரூ.100 கோடி பேரம்: வீடியோ ஆதாரம் வெளியிட்ட சந்திரசேகர ராவ்

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பைலட் ரோகித் ரெட்டி, ரேகா காந்தாராவ், பால ராஜு, ஹர்ஷவர்த்தன் ஆகியோரை கடந்த வாரம் மொய்னாபாத் அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்திர பாரதி, ஐதராபாதத்தை சேர்ந்த நந்தகுமார், திருப்பதியை சேர்ந்த சின்மலயா ஜி ஆகியோர் சந்தித்ததாகவும், அப்போது டிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தால் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடி பேரம் பேசியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிக்கொண்டு இருந்த ராமச்சந்திர பாலாஜி, சின்மையாஜி நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரத்தை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளார். அதை உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்துள்ள சந்திரசேகர ராவ், இது தொடர்பாக, ‘அந்த வீடியோவை பார்த்தால் இந்த நாடு எப்படி உள்ளது? எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக புரியும். இந்த நாட்டை பாஜக சர்வ நாசம் செய்ய முயற்சி செய்து வருகிறது. இந்த வீடியோ ஆதாரம் குறித்து பெரிய அளவில் விசாரணை நடத்த வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...