No menu items!

ரூ.80 ஆயிரம் டூ ரூ.1 கோடி – ஒரே நாளில் உச்சம் தொட்ட நாகல்

ரூ.80 ஆயிரம் டூ ரூ.1 கோடி – ஒரே நாளில் உச்சம் தொட்ட நாகல்

கிரிக்கெட்டைத் தாண்டி டென்னிஸ் நட்சத்திரங்கள் இந்தியாவில் கவனம் பெறுவது கொஞ்சம் கஷ்டமான காரியம். சானியா மிர்சா, லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி என வெகு சிலருக்குத்தான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கிறார் சுமித் நாகல். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை அவர் கவர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றில்தானே வெற்றி பெற்றிருக்கிறார். அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா என்று கேட்கிறீர்களா? டென்னிஸ் விளையாட்டில் இப்போது பின்தங்கி இருக்கும் நாடான இந்தியாவில் இருந்து ஒருவர் கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றின் முதல் சுற்றில் வெற்றி பெறுவது நிச்சயம் பெரிய விஷயம்தான். இந்த சுற்றுக்கு தகுதிபெறவே அவர் 3 தகுதிச் சுற்று போட்டிகளில் ஆடி ஜெயிக்கவேண்டி இருந்தது. அதனால் அவரைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய ஓபனில், இது 4-வது சுற்றிலும். எல்லாவற்றையும்விட இந்த முதல் சுற்றில் அவர் சாதாரண வீர்ரை வீழ்த்தவில்லை. தரவரிசைப் பட்டியலில் 27-வது இடத்தில் உள்ள கஜகஸ்தான் வீர்ரான அலெக்சாண்டர் பப்ளிக்கை அவர் வீழ்த்தி இருக்கிறார்.

இந்த வெற்றியின் மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தரவரிசையில் 32 இடங்களுக்குள் இருக்கும் வீரரை கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் போட்டியில் வென்ற முதல் இந்திய வீர்ர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சுமித் நாகல். இந்த வெற்றியைப் பெற அவர் கடுமையாக போராட வேண்டி இருந்தது.

சுமித் நாகலின் அப்பா சுரேஷ் நாகல் டெல்லியில் ஒரு சாதாரண பள்ளிக்கூட வாத்தியார். அம்மாவும் வேலைக்குச் செல்லவில்லை. இந்த சூழலில் மிகவும் கஷ்டப்பட்டுதான் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கான செலவுகளைச் செய்து வந்தார் சுமித் நாகல். அதிலும் கடந்த 2020-ம் ஆண்டுவரை அவருக்கு ஸ்பான்சர் செய்து வந்த நிறுவனம், கொரோனாவுக்குப் பிறகு கைவிரித்துள்ளது. ஒவ்வொரு போட்டிக்கு செல்லவும், அதற்கான செலவுகளைப் பார்த்துக் கொள்ளவும் ஸ்பான்சரைப் பிடிப்பதற்கே சுமித் நாகல் கடுமையாக போராட வேண்டி இருந்தது. அதெல்லாம் கிடைத்த பிறகு, போட்டியில் வெல்வதற்கான போராட்டம் தொடரும். இந்த பிரச்சினைகள் போதாதென்று 2 முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஒரு அறுவைச் சிகிச்சையும் செய்யவேண்டி இருந்தது. இதனால் அவரது டென்னிஸ் பயணமே அஸ்தமித்து விடுமோ என்ற நிலைகூட ஏற்பட்டது

இந்த தொடர் போராட்டங்களால் வெறுத்துப்போன சுமித் நாகல், கடந்த ஆண்டு ஒரு செய்தியாளர் சந்திப்பில் தனது ஏழ்மையான சூழலைப் பற்றியும், ஸ்பான்சர்கள் கிடைக்காத சூழலைப் பற்றியும் சொல்லியிருந்தார்.

“என்னிடம் இப்போது இருப்பது வெறும் 80 ஆயிரம் ரூபாய்தான். இத்தனை ஆண்டுகள் ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் ஆடி, என்னால் இவ்வளவுதான் சம்பாதிக்க முடிந்தது என்பதே வருத்தமான விஷயம்” என்று அந்த பேட்டியில் சொல்லிருந்தார் நாகல்.

ஆனால் அவரது அந்த கவலை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது என்று சொல்ல்லாம். இந்த போட்டியின் முதல் சுற்றில் ஜெயித்த பிறகு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் சுமித் நாகல். (முதல் சுற்றில் வென்றதற்காக ரூ.66 லட்சம். தகுதிச் சுற்றுகளில் வென்றதற்காக ரூ.36 லட்சம் பரிசு)
டென்னிஸ் உலகில் இப்போது 137-வது இடத்தில் இருக்கும் நாகல், அடுத்த சுற்றில் சீனாவின் ஜன்செங் ஷாங்கை எதிர்த்து ஆடவுள்ளார். அதிலும் வென்றால், இப்போதைக்கு உலகின் 2-வது சிறந்த டென்னிஸ் வீர்ரான கார்லோஸ் அல்காரஸை எதிர்த்து ஆடவுள்ளார். இதில் 2-வது சுற்றுப் போட்டியில் ஜெயித்தாலே தாரவரிசைப் பட்டியலில் 100-வது இடத்துக்குள் அவர் நுழைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதன்பிறகு அவர் எதிர்பார்த்த்தைப்போல் நிறைய ஸ்பான்சர்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

ஜெயித்தவர்களைத்தானே இந்த உலகமும் ஸ்பான்சர்களும் விரும்புகிறார்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...