கோவாவில் நடைப்பெற்ற கோலாகலமான காதல் திருமணத்தை சமந்தாவும், நாக சைதன்யாவும் முறித்து கொள்கிறோம் என்று சொன்ன போது யாரும் அதை எதிர்பார்க்கவில்லை.
அதற்கு அடுத்து சமந்தா ஆட்டோஇம்யூன் பிரச்சினையான மையோசிடிஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதால். இவர்களது விவாகரத்து பற்றிய பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போனது.
மறுபக்கம், நாக சைதன்யாவுக்கும், ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் நடித்த சோபிதா துலிபாலாவுக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாக கிசுகிசு கிளம்பியது. ஆனால் இது குறித்து நாக சைதன்யாவும், சோபிதாவும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பிரிந்துவிட்ட காதலர்கள் மீண்டும் மறுமணம் செய்வார்களா என்ற கேள்வி அவ்வப்போது எழ ஆரம்பித்திருக்கிறது.
இதற்கு பதில் சொல்லும் வகையில் சமந்தா வெளிப்படையாகவே தனது கருத்தைக் கூறியிருக்கிறார்.
’நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்வது பற்றி யோசிக்கவில்லையா?’ என்ற கேள்விக்குதான் சமந்தா ஒரு புள்ளிவிவர பதிலைக் கூறியிருக்கிறார்.
’2023-ல் முதல் திருமணம் செய்து கொண்டவர்களிடையே விவாகரத்து வாங்கும் சதவீதம் 50%. அதுவே 2-வது, 3-வது திருமணம் செய்து கொள்பவர்களிடையே விவாகரத்து வாங்கும் சதவீதம் முறையே 67% மற்றும் 73% என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இப்படியொரு புள்ளிவிவரத்தை எடுத்துக்காட்டும் சமந்தா, மறுமணம் குறித்து அடுத்து அடித்த கமெண்ட்தான் இதில் ஹைலைட்.
’இதையெல்லாம் தெரிந்து கொண்டு மீண்டும் திருமணம் செய்வது என்பது தேவையில்லாத செலவு. தேவையில்லாத முதலீடு’ என்று இரண்டு வரியில் மறுமணம் குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
தள்ளிப் போகிறதா ’தங்கலான்’!
’மஹான்’ படம் பெரும் தோல்வி. அடுத்து ‘கோப்ரா’வும் படுதோல்வி. இதனால் எப்படியாவது ஒரு மெகா ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார் விக்ரம்.
இதனால் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தையே பெரிதும் நம்பியிருக்கிறார். இந்தப் படம் கோலார் தங்க சுரங்கம் பின்னணியில் நடைப்பெறும் கதை.
’கேஜிஎஃப்’ படத்தில் காட்டப்பட்ட கோலார் தங்க சுரங்கம் ஒரு புனைவு. ஆனால் தங்கலான் என்பது தங்க சுரங்கத்தில் உரிமைக்காகப் போராடிய ஒரு தமிழன் பற்றிய உண்மை கதையாம். இந்த கதைக்காக பா.ரஞ்சித் தனது உதவியாளர்களுடன் சேர்ந்து பெரும் கள ஆய்வுகளை நடத்தியிருக்கிறார்.
காட்சி அமைப்புகளும், அதற்கான நடிப்பும் அதிக நேரம் எடுக்கிறதாம். சில காட்சிகள் எடுப்பதற்கே சிரமமாக இருப்பதால், ஷூட்டிங் அதிக நேரம் பிடிக்கிறதாம்.
வருகிற புத்தாண்டில் ஜனவரி 26-ம் தேதி ‘தங்கலான்’ படத்தை களத்தில் இறக்கிவிடும் வகையில் முதலில் பா.ரஞ்சித் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இப்போது தங்கலான் தள்ளிப் போக அதிக வாய்ப்புகள் உருவாகி இருப்பதாக பேச்சு அடிப்படுகிறது.
பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டாலும், வசூலில் தாக்குப்பிடிக்க வேண்டுமென்பதற்காகவே இப்போது தங்கலான் வெளியீடு தள்ளிப்போட யோசனை இருக்கிறதாம்.