No menu items!

சிஎஸ்கேவின் தோல்விக்கான காரணங்கள்

சிஎஸ்கேவின் தோல்விக்கான காரணங்கள்

குஜராத் ஜெயண்ட்ஸ் அணியிடம் தோற்றதன் மூலம் தனது ரசிகர்களுக்கு பேரிடியைக் கொடுத்திருக்கிறது சிஎஸ்கே. இந்த போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் சிஎஸ்கேவின் ப்ளே ஆஃப் வாய்ப்பே இப்போது மங்கியிருக்கிறது.

ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிரான கடைசி 2 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இப்போது சிஎஸ்கே உள்ளது. நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் சிஎஸ்கே தோற்றதற்கான காரணங்களைப் பார்ப்போம்…

ரஹானே மீது அதீத நம்பிக்கை:

இந்த தொடரில் ஆரம்பம் முதலே ரஹானே மீது அதீத நம்பிக்கையை வைத்திருக்கிறது சிஎஸ்கே. முதலில் சில போட்டிகளில் 3-வது பேட்ஸ்மேனாக அவரை களம் இறக்கிய சிஎஸ்கே அணி அதன்பிறகு அவரை தொடக்க ஆட்டக்காரராக பயன்படுத்தி வருகிறது. ஆனால் தன் மீது அணி வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதைப் பற்றி ரஹானே கொஞ்சம்கூட கவலைப்படாமல் இருக்கிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் டி20 மோடில் ஆட, இவரோ இன்னும் டெஸ்ட் மோடில் இருந்து வெளியில் வராமல் இருக்கிறார்.

சிஎஸ்கேவுக்காக 11 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள ரஹானே எடுத்துள்ள மொத்த ஸ்கோரே 209 ரன்கள்தான். 19 ரன்களை சாராசரியாகக் கொண்டுள்ள இவரது ஸ்டிரைக் ரேட்டும் 120 ரன்களை தாண்டவில்லை. அப்படி இருந்தும் நேற்றைய போட்டியில் ரஹாண்டேவை தொடக்க ஆட்டக்காரராக சிஎஸ்கே பயன்படுத்தியது முதல் தவறு. அவருக்கு பதில் இளம் பேட்ஸ்மேனான சமீர் ரிஸ்வியை பயன்படுத்தி இருக்கலாம்.

கேப்டனின் தவறான முடிவுகள்:

இந்த தொடரில் ஒரு போட்டியைத் தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் டாஸில் தோற்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், நேற்றைய ஆட்டத்தில் அதிசயமாக டாஸில் வென்றார். ஆனால் அதுவே சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. சேஸிங்கில் தொடர்ந்து தோற்றுவரும் குஜராத் டைட்டன்ஸ் அணியை முதலில் பீல்டிங் செய்ய அனுப்புவதை விட்டு, பேட்டிங் செய்ய பணித்தார். முதலில் பேட்டிங் செய்ததால் பிரஷர் இல்லாமல் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, இமாலய ஸ்கோரை அடித்தது. அதேபோல் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சுழற்பந்து வீச்சாளர்களை அவர் பயன்படுத்தாதும் குஜராத் அணி ரன்களைக் குவிக்க உதவியது.

பலவீனமான பந்துவீச்சு:

ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்களில் சிஎஸ்கே வெற்றிகளைக் குவிக்க உதவியது பதிரணா மாற்றும் முஸ்தபிசுரின் பந்துவீச்சு. ஆனால் இப்போது அவர்கள் இருவரும் அணியில் இல்லை. மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான சஹரும் காயத்தில் இருக்கிறார். இதனால் பல் இல்லாத பாம்பு போல சிஎஸ்கேவின் பந்துவீச்சு மாரியிருக்கிறது. இதுவும் நேற்றைய போட்டியில் சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அடுத்த போட்டியில் நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே ஆடுகிறது. முந்தைய போட்டிகளில் செய்த தவறுகளை செய்யாமல், ரஹானே போன்ற சொதப்பும் பேட்ஸ்மேன்களை நீக்கி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தால் இந்த தோல்விகளில் இருந்து சிஎஸ்கே மீளலாம். இல்லாவிட்டால் நாளைய போட்டியே சென்னையில் தோனி ஆடும் கடைசி போட்டியாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...