ஓ. பன்னீர்செல்வத்துக்கு மற்றொரு அடி! அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றிப் பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாட்களுக்கு இந்தத் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
2019 மக்களவைத் தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கினார் ஓ.பி. ரவீந்திரநாத். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார். சுமார் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திராநாத் வெற்றி பெற்றார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பெற்ற ஒரே வெற்றி இதுதான்.
இந்த வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடுத்தார்.
“தனக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பணப்பட்டுவாடா புகாரின் பேரில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும் தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை” என்று கூறியிருந்தார். ஆனால் இந்தத் தேர்தல் வழகு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே, வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வந்துவிட்டது.
இந்த தீர்ப்பு விவகாரம் அதிமுகவுக்கு தர்மசங்கட நிலையை உருவாக்கியிருக்கிறது. ஓ.பி. ரவீந்திரநாத் எதிரணியில் இருக்கிறார். அவரை அதிமுக உறுப்பினராக அழைக்கக் கூடாது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக.
எதிரணியில் இருந்தாலும் ரவீந்திரநாத் தகுதி இழப்பை அதிமுகவால் கொண்டாட முடியாது. ஏனென்றால், ரவீந்திரநாத் போட்டியிட்டது அதிமுக சார்பாக. அவர் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் அதிமுகவையும் சேரும். அதிலிருந்து இப்போது அதிமுகவினால் விலகி நிற்க முடியாது.
அதனால் இந்த தீர்ப்பு குறித்து மையமாக பேசுகிறார்கள் அதிமுகவினர். மேல் முறையீடு முடியட்டும் என்கிறார்கள்.
ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் ஒரு அடி. ஏற்கனவே கட்சியை இழந்த நிலையில் இப்போது ஒரு எம்.பி.யையும் இழந்து நிற்கிறது. ஒரு மாதத்துக்குள் மேல் முறையீடு. அதன் பின் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை. இதற்கெல்லாம் காலம் எடுக்கும். இன்னும் பத்து மாதங்களில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலே வந்துவிடும். அதற்குள் இந்த வழக்குக்கான இறுதி தீர்ப்பு வருமா என்பதே சந்தேகம்தான்.
இந்தத் தீர்ப்பை பார்த்ததும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அப்பாவு தேர்தல் வழக்குதான். ஐந்தாண்டு கால ஆட்சி முடிந்த பின்னும் இன்று வரை அந்த வழக்கின் முடிவு என்ன என்பது தெரியவில்லை.
அது போல் ஆகாமல் இருந்தால் சரி.