No menu items!

Rupees Vs Dollar – சீனாவுக்குப் போன ரஷ்யா!

Rupees Vs Dollar – சீனாவுக்குப் போன ரஷ்யா!

அமெரிக்க டாலருக்கு பதிலாக மற்ற நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகம் என்ற இந்தியாவின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரூபாயில் வர்த்தகம் செய்வது தொடர்பான இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை ரஷ்யா திடீரென நிறுத்தியுள்ளது. இதனால், ரஷ்யாவிடம் இருந்து சீனாவின் யுவான் நாணயம் மூலம் கச்சா எண்ணெய் வாங்கும் நிலைக்கு இந்திய நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம்? ரஷ்யா பின்வாங்கியது ஏன்?

ரூபாயில் வர்த்தகம் செய்யும் இந்தியா முயற்சி

ரஷ்யா – உக்ரேன் போர் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்தியாவும் அந்நாடுகளில் ஒன்று. இன்னொரு பக்கம் சர்வதேச வர்த்தகச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது.  இந்த இரண்டு சிக்கல்களையும் தீர்க்க ‘ரூபாயில் வர்த்தகம்’ என்ற புதிய முயற்சியில் இறங்கியது இந்தியா.

இதே காலகட்டத்தில் இந்தியாவின் முயற்சிக்கு கை கொடுப்பது போல் ரஷ்யாவும் ஒரு முடிவு எடுத்திருந்தது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்த தடை காரணமாக ரஷ்யாவுக்கு டாலரில் வர்த்தகம் மேற்கொள்வது பாதிக்கப்பட்டது. மேலும், ரஷ்யாவின் ரூபிளும் டாலருக்கு எதிராக வீழ்ச்சியடைந்து வந்தது. உக்ரேன் போர் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்தும் விதமாக ‘ஸ்விஃப்ட் வங்கி’ நடைமுறையிலிருந்து ரஷ்யாவின் முக்கிய வங்கிகள் நீக்கப்பட்டன. இதனால் ரஷ்யாவின் ரூபிள் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்ய ரூபிள் மதிப்பு ஒரே வாரத்தில் 80இல் இருந்து 119 ஆக சரிந்தது. கிட்டத்தட்ட 29% சரிவு.

ரூபிள் சரிவை தடுத்து நிறுத்தவும், மேற்கு நாடுகளின் பொருளாதார தடையை எதிர்கொள்ளவும் ரஷ்ய அதிபர் புதின் ஒரு புதிய திட்டத்தை கையில் எடுத்தார். அதுதான் டாலரல்லாத வர்த்தகம்!

மேலும், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்ததால் மலிவு விலையில் கச்சா எண்ணெய் கொடுப்பதாகவும் புதின் அறிவித்தார்.

புதினின் இந்த முடிவை இந்தியா மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அளவை பல மடங்கு உயர்த்தியது.

ரஷ்யாவைத் தொடர்ந்து ஃபீஜி, ஜெர்மனி, கயானா, இஸ்‌ரேல், கென்யா, மொரீஷியஸ், மியன்மார், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, செஷல்ஸ், போஸ்வானா, இலங்கை, தான்சானியா, உகாண்டா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா ஆகிய 18 நாடுகளும் இந்தியாவுடன் ‘ரூபாய்’ மூலம் வர்த்தகம் மேற்கொள்ள முன்வந்தன.

டாலரல்லாத இந்த வர்த்தகம் சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்குமே லாபமானது; ஆனால், அமெரிக்காவுக்கு பெரிய அடி…

எப்படி எனப் பார்ப்போம்

டாலர் மூலம் வர்த்தகம் யாருக்கு லாபம்?

பல காலமாகவே சர்வதேச வர்த்தகம் அமெரிக்க டாலரில்தான் நடந்து வருகிறது. இதனால், ஒரு நாடு எந்த இன்னொரு நாட்டிடம் இருந்து பொருள் வாங்கினாலும் அதற்கு டாலரைத்தான் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, மலேசியாவுக்கான தொகையை அதன் நாணயமான ரிங்கிட் மூலம் செலுத்தாமல் டாலர் மூலம் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். முதலில் இந்திய ரூபாயை அமெரிக்க டாலராக மாற்ற வேண்டும். பிறகு டாலரை, மலேசிய ரிங்கிட்டாக மாற்ற வேண்டும். இதனால் இருமுறை டாலருக்குரிய நாணய மாற்றுத் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

இப்படி இரண்டு முறை டாலர் மாற்றப்படுவதால் அதற்கான கமிஷனாக அமெரிக்கா கொள்ளை லாபம் பார்த்து வந்தது. சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கம் குறைந்தால் அமெரிக்காவின் இந்த லாபம் பாதிக்கப்படும். அமெரிக்காவுக்கு குறையும் இந்த லாபம் சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கு அவைகளின் சக்திக்கு ஏற்ப கிடைக்கும்.

இதனால்தான், எந்த நாடாவது டாலர் வணிகத்தை விட்டு வெளியேறினால் உடனே அமெரிக்கா தலையிட்டு அந்த எண்ணத்தை வேரோடு நீக்கிவிடும். பல வருடங்களுக்கு டாலர் வணிகத்தை விட்டு வெளியேறும் முடிவை சதாம் உசேன், கடாபி உள்ளிட்டோர் எடுத்தனர். அதன்பின் அவர்கள் உலகிலேயே இல்லாமல் ஆக்கப்பட்டது வரலாறு.

இதுபோல் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு இந்தியாவுக்கும் அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. எனினும், அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தது.

சரி, இந்தியா – ரஷ்யா ரூபாய் வர்த்தகம் என்ன ஆனது?

வலுவடையும் சீனா யுவான்

இந்தியாவிடம் இருந்து ரூபாயைப் பெற்றுக்கொண்டு கச்சா எண்ணையை ரஷ்யா ஏற்றமதி செய்து வந்த நிலையில் அதில் ஒரு சிக்கல் வந்தது. கடந்த 2022-23 நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 2.8 பில்லியன் டாலர். இதே காலகட்டத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மேற்கொண்ட இறக்குமதி 41.56 பில்லியன் டாலர். ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருந்ததால் ரஷ்யாவிடம் பல நூறு கோடி இந்திய ரூபாய்கள் சேர்ந்தன. அவை இந்திய வங்கிகளில் உள்ளன.

இப்படி சேர்ந்த ரூபாய்களை பயன்படுத்த முடியாத நிலை ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு கோவாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ், “எங்களுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய்கள் இந்திய வங்கிகளில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த வேண்டுமானால், அவற்றை வேறு நாணயத்துக்கு மாற்ற வேண்டிய தேவை உள்ளது. அதுதான் தற்போதைய பிரச்சினை. அதுகுறித்தே விவாதித்து வருகிறோம்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பொருளாதார தடை விலக்கப்பட்டாலாவது, ரூபாயை டாலரில் மாற்றிக்கொள்ளவும், அதன் மூலம் சர்வதேச வர்த்தகத்திற்கு அவற்றைப் பயன்படுத்தவும் முடியும். அதுவரை என்ன செய்வது என்பதே ரஷ்யாவின் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி.

இந்நிலையில் தான், ரூபாய் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பான இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை ரஷ்யா நிறுத்தியது. மேலும், இந்தியாவின் ரூபாய்க்கு பதிலாக சீனாவின் யூவானைக் கொண்டு பரிவர்த்தனை மேற்கொள்ளவும் ரஷ்யா முடிவெடுத்துள்ளது.

இதனால், இப்போது இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு சீன நாணயமான யுவான் மூலம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இதனால், டாலர் போல் சீனாவின் யுவான் நாணயம் சர்வதேச வர்த்தகத்தில் பலம்பெற தொடங்கியுள்ளது.

சரி, இதனிடையே ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் இந்தியா கச்சா எண்ணெயை வாங்கியதாக பார்த்தோம் இல்லையா? அதனால், இந்திய அரசுக்கு பல மடங்கு லாபம் கிடைத்திருக்கும் இல்லையா?

அதுதான் இல்லை. லாபம் வந்தது உண்மைதான். அந்த லாபம் வழக்கம்போல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குதான் போயுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கி அதை சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் பார்த்துள்ளார்கள். இந்தியாவிலும் விற்றுள்ளார்கள். ஆனால், இந்தியாவில் பெட்ரோல் விலையை குறைக்கவே இல்லை. அதிகரிக்கவில்லையே என்று நாம் மகிழ்ந்துகொள்ள வேண்டியதுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...