தேனி கண்ணன்
நடிகை ராஷ்மிகாவை சுற்றி அரசியல் புயல் வீசத்தொடங்கியுள்ளது. இதுவரைக்கும் சினிமா உண்டு தான் உண்டு என்று இருந்த அவருக்கு பாலிவுட்டில் புதிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தன. இந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது புஷ்பா படம்தான். படத்தில் அவரது நடிப்பும் நடனமும் பாலிவுட்டில் பலரையும் மயங்க வைத்து விட்டது. பாலிவுட்டிற்கும் தென்னிந்திய நட்சத்திரங்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமாகவே இருக்கும். தென்னிந்திய நடிகர்களை பாலிவுட்டில் அவ்வளவாக வளர விடமாட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக தென்னிந்திய திரைப்படங்கள் அந்த குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. வெளியான எல்லா தென்னிந்திய படங்களும் பெரிய வெற்றியை பெற்றன. வசூல் ரீதியாகவும் பாலிவுட் திரைப்படங்களுக்கு சவால் விட்டன. இதனால் அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் பாலிவுட்டில் வாய்ப்புக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அப்படித்தான் நடிகை ராஷ்மிகாவை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது
ராஷ்மிகா அனிமல் படத்தில் காட்டிய தாராள காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. தெலுங்கு சினிமாவிலும் கவனம் வைத்துக் கொண்டு சில படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா தற்போது பாலிவுட்டில்தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். கைநிறைய திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று அவர் மீது அரசியல் சாயம் படிந்திருக்கிறது. சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடியால் மும்பையில் திறந்து வைக்கப்பட்ட பிரமாண்ட பாலம் பற்றி ராஷ்மிகா பாராட்டி பேசியிருந்தார். அதோடு இந்த நேரத்தில் அனைவரும் வாக்கு செலுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவருடைய இந்தக் கருத்து மும்பை அரசியலிலும், சினிமாவிலும் புயலை கிளப்பியிருக்கிறது.
ராஷ்மிகாவின் உறவினர் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் நிலையில் அவரே இப்படி பேசியிருப்பது சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. அதோடு இணையத்தில் ராஷ்மிகாவை ரசிகர்கள் பலரும் திட்டி வருகிறார்கள். ஏற்கனவே மும்பையில் ஏழை மக்கள் வாழ்ந்த குடியிருப்பு இடிந்து அதில் 14 பேர் உயிரிழந்து போனர்கள். மேலும் அந்த பாலம் காங்கிரஸ் அரசாங்கத்தின் போது தொடங்கப்பட்டது. அதை கண்டுகொள்ளாமல் ராஷ்மிகா இபபடி பேசியிருப்பது அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் இன்னொரு பக்கம் இது எல்லாமே திட்டமிட்டுத்தான் நடக்கிறது என்கிற பேச்சும் எழுந்திருக்கிறது. இதே போல்தான் கங்கனா ரணவத்தும் ஆரம்பத்தில் மெதுவாக அரசியல் பேசி பிறகு ஆளும் தரப்பின் செல்லப் பிள்ளையாக மாறிப் போனார். மெதுவாக அவரை தங்கள் தரப்பின் கருத்துக்களை தெரிவிக்க ஒரு முகமாகவே வைத்து கொண்டார்கள். தாங்கள் எடுக்க இருக்கும் சில திரைப்படங்களை கங்கனாவை வைத்து எடுத்தார்கள். பிறகு மதுரா தொகுதியில் கங்கனாவை வேட்பாளராக நிறுத்தவும் சில நகர்வுகள் நடந்தது. ஆனால் அங்கு ஏற்கனவே ஹேமமாலினி இருப்பதால், கங்கனாவை ஹேமமாலினி நேரடியாகவே திட்டினார் அதனால் கங்கனாவை இமாச்சல் தொகுதியில் நிற்க வைத்தார்கள்.