தமிழ் சினிமாவில் ஒரு சுவாரஸ்யமான சென்டிமெண்ட் இருக்கிறது. அது ரஜினி நடித்தப் படங்களின் டைட்டிலை, வளர்ந்து வரும் நடிகர்கள் தங்களது படங்களுக்கு வைப்பது. அந்தப் படங்கள் வெளியாகி பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், ஒரு மரியாதை நிமித்தமாக தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்கிவிட்டு, பிறகு தங்களது படங்களுக்கு அதே டைட்டிலை வைப்பார்கள். ‘படிக்காதவன்’, ‘பொல்லாதவன்’, ‘மாப்பிள்ளை’ என இப்படி நீள்கிறது இளம் நடிகர்கள் தங்களது படங்களுக்கு கடன் வாங்கிய ரஜினி பட டைட்டில்கள்.
ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே இந்த மயக்கத்தில் இருக்க, லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் இணைந்திருக்கும் படத்திற்கு சரத் குமார் நடித்த ‘கூலி’ படத்தின் டைட்டிலை வைத்திருக்கிறார். இதுதான் ‘தலைவர் 171’ என்று தற்காலிகமாக சொல்லப்பட்ட படத்தின் டைட்டில். ரஜினி – லோகேஷ் இணையும் படத்தின் டைட்டில் என்ன என்ற கிசுகிசு கிளம்பிய போது, ‘கழுகு’ என்று சமூக ஊடகங்களில் செய்தி கசிந்திருந்தது. ஆனால் ’கூலி’ என்று இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
1995-ல் பி. வாசு இயக்கத்தில் சரத்குமார் நடித்தப்படம் ‘கூலி’. ஏறக்குறை 24 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த டைட்டிலை இப்போது ரஜினியின் 171-வது படத்திற்கு வைத்திருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் பழைய படங்களின் பாடல்களை எங்கேயாவது ஒரு காட்சியில் வைப்பதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். இந்த முறை ரஜினி நடித்த ’ரங்கா’ படத்தில் இடம்பெற்ற ‘அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள். போனார்கள். தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு, அடப்பாவி என்பார்கள். தப்பாக நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே’ என்ற வசனத்தை பயன்படுத்தி இருக்கிறார். அதேபோல் 1980-களில் பிரபலமாக இருந்த ’தங்கமகன்’ படத்தின் ’டி ஐ எஸ் சி ஒ டிஸ்கோ டிஸ்கோ’ பாடலின் வரியும் பின்னணியில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் படம் தங்க கடத்தல் பின்னணியில் நடக்கும் கதை என்று சொல்லப்படுகிறது. உண்மையில் ரஜினியின் கதாபாத்திரம் போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னனாக இருந்த புகழ்பெற்ற பாப்லோ எஸ்கோபார் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார்கள். அவர் ஒரு சாதாரண ஆளாக இருந்து போதைப்பொருள் கடத்தி, அரசுக்கே சவால் விடும் அளவிற்கு கெத்து காட்டியவர். இந்த கதாபாத்திரத்தின் ரவுசை அடிப்படையாக கொண்டு போதைப்பொருள் கடத்தலுக்குப் பதிலாக தங்க கடத்தல் பின்னணியில் ரஜினியின் கதாபாத்திரம் இருக்கும் வகையில் திரைக்கதை இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது.
‘கூலி’ பட அறிமுக காணொலி மூன்று நிமிடங்கள் ஓடினாலும், அது முழுவதிலும் ரஜினி இருக்கிறார். இதற்காக அவர்கள் ஷூட் செய்தது வெறும் இரண்டரை மணிநேரம் மட்டும்தானாம். ‘அட.. கொஞ்ச நேரம்தான் எடுத்தாங்க. ஆனால் டீசர் சூப்பரா வந்திருக்கு’ என்று ரஜினி லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டினாராம்.
ஓட்டு சர்ச்சையில் சிக்கிய விஜய்
ரஷ்யாவில் ‘கோட்’ படத்தின் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு, அங்கிருந்து பறந்து வந்து நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்து இருக்கிறார் விஜய்.
அதேநேரம், அரசியல் தலைவராக உருவெடுத்து இருக்கும் விஜயின் படத்தை இயக்கும் வெங்கட்பிரபு தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதுதான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.
இதன் பின்னணி என்ன?
பிப்ரவரி 2-ம் தேதி, விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். ஆனால் தனது அரசியல் பயணம் இப்போதைக்கு இல்லை. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில்தான் என்றும் சொல்லிவிட்டார்.
ஆனால் அதற்காக இந்த நாடாளுமன்ற தேர்தலில் கருத்து கூறாமல் இருக்க முடியுமா…வாக்களிப்பதில் உங்களது கருத்தை சொல்லாமல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழவேதான், ’கோட்’ பட ஷூட்டிங்கை தேர்தல் நெருங்கும் வேளையில் வெளிநாட்டில் வைக்க சொல்லிவிட்டார்.
தேர்தல் பரப்புரை உச்சத்தில் இருக்கும் போது, விஜய் ரஷ்யாவில் நடித்து கொண்டிருந்தார். ஒருவழியாக தேர்தல் நெருங்கவே வாக்களிக்க தேர்தல் நாளன்று சென்னை வந்து சேர்ந்தார். தனது வாக்கையும் பதிவு செய்தார்.
ஆனால், ரஷ்யாவில் விஜயுடன் இருந்த வெங்கட்பிரபு உள்ளிட்ட டெக்னீஷியன்கள் பலர் தேர்தலில் வாக்களிக்கவில்லை. காரணம் தேர்தல் அன்று அவர்கள் ஷூட்டிங்கில் இருந்தார்கள்.
தன்னுடைய வாக்கை பதிவு பண்ண விரும்பிய விஜய், அதற்கேற்றால் போல் தன்னுடன் ரஷ்யாவுக்கு வந்த ‘கோட்’ படக்குழுவினரும் வாக்களிக்கும் வகையில் ஷீட்டிங்கை திட்டமிட சொல்லி இருந்தால் அவர்களும் இந்த தேர்தலில் வாக்களித்து இருப்பார்கள்.
ஆனால் விஜய் தன்னுடைய வேலைகளை மட்டும் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பே முடிக்க சொல்லியிருக்கிறார் என்றும் மற்றவர்களைப் பற்றி அவர் யோசிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.
அரசியல் தலைவராக உருவெடுக்க இருக்கும் விஜயே இப்படி செய்யலாமா என்ற கேள்வி இப்பொழுது கிளம்புகையில், ’தேர்தல் நாளன்று காலையில் சென்னைக்கு வருகிற மாதிரிதான் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் துபாயில் ஏற்பட்ட வெள்ளத்தால் எங்கள் அனைவராலும் வரமுடியாமல் போய்விட்டது’ என கோட் படக்குழு தரப்பில் கூறப்படுகிறதாம்.