No menu items!

அதிமுக 10 ஆண்டுகளில் சீரழித்ததை ஒன்றரை ஆண்டுகளில் சரி செய்வோம் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதிமுக 10 ஆண்டுகளில் சீரழித்ததை ஒன்றரை ஆண்டுகளில் சரி செய்வோம் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக வரும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது சென்னை, எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வந்த வீடியோ கால் அழைப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், “வட சென்னையில் தண்ணீர் தேங்கி இருப்பதாக புகார் வந்திருக்கிறது. தொடர்ந்து அதனை அப்புறப்படுத்தி வருகிறோம். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சென்னையை மட்டுமல்லாது தமிழ்நாட்டையை சீரழித்துள்ளனர். அனைத்தையும் சரி செய்ய வேண்டுமென்றால் பல ஆண்டுகள் ஆகும். ஆனால், நாங்கள் ஒன்றரை வருடங்களுக்குள்ளேயே முடித்துவிடுவோம் என நம்பிக்கையுள்ளது” என்றார்.

மழைநீர் வடிந்துவிட்டதாக மாயபிம்பத்தை உருவாக்குகின்றனர் – ஜெயக்குமார்

சென்னை புளியந்தோப்பில் வீடு இடிந்த விபத்தில் பலியான பெண் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மழை நீர் வடிந்துவிட்டதாக மாயபிம்பத்தை உருவாக்குகின்றனர். முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரிலேயே தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடாத ஊடக நிறுவனங்களை திமுக அரசு மிரட்டுகிறது” என்றார்.

மேலும், “அதிமுகவை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. பாஜகவுடன் தேர்தல் சமயத்தில் மட்டுமே கூட்டணி. திமுகவுடன் அண்ணன் தம்பி உறவு எல்லாம் 1972ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. திமுக தான் எங்கள் பகையாளி” என்றும் ஜெயக்குமார் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு: விசாரணை நவம்பர் 4ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு

ஆர்.எஸ்.எஸ்., அக்டோபர் 2-ம் நடத்த திட்டமிட்டிருந்த அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்ததை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் நவம்பர் 6-ம் தேதி ஊர்வலத்தை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால், அவ்வாறு அனுமதி வழங்கப்படவில்லை என்று காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில், ‘ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நாளில் இருந்த சூழல் வேறு, தற்போது உள்ளது வேறு. தற்போதைய சூழலை கருத்து கொண்டு 3 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அதற்கு அனுமதி வழங்க தயார். மீதம் உள்ள 24 இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அந்த பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதனால், தற்போது அனுமதி வழங்க இயலாது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்த பிறகு 47 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி வழங்கலாமா வேண்டாமா  என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

மோர்பி பாலத்தின் கேபிள் சீரமைக்கப்படவில்லை: அதிர்ச்சித் தகவல்

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 140 பேர் உயிரிழந்தனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த தொங்கு பாலத்தை, புதுப்பிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் பாலம் மூடப்பட்டது. புதுப்பிப்பு பணிகள் முடிக்கப்பட்டு இப்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்ட 4-வது நாளில் தொங்குபாலம் அறுந்து மச்சு ஆற்றில் விழுந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் ஆஜரான எச்.எஸ். பஞ்சால், “பாலத்தின் தரைப்பகுதி மட்டுமே மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கேபிள் சீரமைக்கப்படவில்லை. அதனாலேயே சுமையை தாங்க முடியாமல் கேபிள் அறுந்துவிழுந்துள்ளது. பால சீரமைப்பில் இரண்டு ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டனர். இரு நிறுவனங்களுக்குமே இதை மேற்கொள்ளும் தகுதியில்லை. ஒப்பந்ததாரர்களை காவலில் எடுத்து விசாரித்தால் தான் எதற்காக அவர்களிடம் ஒப்பந்தம் ஒப்படைக்கப்பட்டது என்பதற்கான பின்னணி தெரியவரும்” என்றார்.

இதனையடுத்து ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எம்ஜே கான், ஓரீவா குழுமத்தின் இரண்டு மேலாளர்களையும், இரண்டு சப் காண்ட்ராக்டர்களையும் சனிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

டுவிட்டரில்புளூ டிக்குக்கு மாதம் ரூ.660 கட்டணம் எலான் மஸ்க் அறிவிப்பு

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி உரிமையாளராகி உள்ளார். அவர் அந்நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக டுவிட்டரில் புளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இக்கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்துக்கு பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டரில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களின் அதிகாரபூர்வ கணக்குகளில் ‘புளூ டிக்’ பயன்படுத்துகிறார்கள். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்குதான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள டுவிட்டர் கணக்கில் உள்ள பெயருக்கு அருகில் நீலநிற டிக் குறியீடு இருக்கும். இதன் மூலம் அந்த பயனாளர்கள் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...