காங்கிரஸ் கட்சி மீண்டும் திணறிக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி திணறுவது புதிதல்லவே, 2014லில் இருந்து திணறிக் கொண்டுதானே இருக்கிறது என்ற நீங்கள் கேட்கலாம். இந்த முறை திணறுவது தனக்கான தலைவரைத் தேர்ந்தெடுக்க.
2019ல் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஜூலை மாதம் விலகினார் ராகுல் காந்தி. கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு சோனியா காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். 2019லிருந்து சோனியா காந்தியே தலைவராக நீடித்துக் கொண்டிருக்கிறார்.
கட்சி விதிகளின்படி இப்போது மீண்டும் காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டு இந்த மாத இறுதிக்குள் முடிவுகள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தியை தலைமைப் பொறுப்பை ஏற்க கட்சியினர் வேண்டுகோள் விடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர் மறுத்துக் கொண்டே இருக்கிறார்.
கட்சி மோசமான நிலையில் இருக்கிறது. அதன் தலைவராக இருக்கும் சோனியா காந்திக்கு உடல் நலம் சரியில்லை. கட்சிப் பணிகளை தீவிரமாக பார்க்க முடிவதில்லை. கட்சி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதே தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி ஏன் தலைமைப் பொறுப்பு ஏற்க மறுக்கிறார்?
ராகுல் முழு நேர அரசியல்வாதி அல்ல. அடிக்கடி வெளிநாடு பறந்து விடுகிறார். அவருக்கு அரசியல் தெரியவில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும் தலைவர் பதவியை ஏற்க ராகுல் மறுப்பதற்கு சில காரணங்கள் உண்டு.
தலைமுறை இடைவெளி. அவரால் மூத்த தலைவர்களை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. கடந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி மூன்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மீது விமர்சனங்கள் வைத்தார். அந்தத் தலைவர்கள் தங்கள் வாரிசுகளுக்குதான் முக்கியத்துவம் கொடுத்தார்கள், கட்சிக்கல்ல என்ற குற்றச்சாட்டை வைத்தார்.
ப.சிதம்பரம், கமல்நாத், அசோக் கெலாட்தான் அந்தத் தலைவர்கள். இவரே வாரிசு இவர் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் குறித்து பேசலாமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ராகுல் காந்தி ஆதரவாளர்கள், வாரிசாக இருந்தாலும் ராகுல் சொகுசாக ஏசி அறைகளில் உட்கார்ந்து அரசியல் செய்யவில்லை. நாடு முழுவதும் கட்சிக்காக பரப்புரை செய்கிறார். இந்தத் தலைவர்களின் வாரிசுகள் தங்கள் தொகுதிகளுக்கே போகிறார்களா என்று எதிர் விமர்சனம் வைத்தார்கள். உண்மைதான். இதை நாம் தமிழ்நாட்டிலேயே பார்க்கிறோம்.
அதற்கடுத்து ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு, பாஜகவை விமர்சிப்பதில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டவில்லை என்பது. ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டாகட்டும், மோடி மீதான விமர்சனங்களாகட்டும் காங்கிரஸ் தலைவர்கள் பம்மினார்கள். இதை ராகுல் காந்தி நேரடியாகவே குறிப்பிட்டார்.
இளம் தலைமுறையினருக்கு மூத்த தலைவர்கள் வழி கொடுக்கவில்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு.
அந்த செயற்குழு கூட்டத்தில் கடுமையாக பேசிய ராகுல் காந்தி, தன் குடும்பத்தை சாராத யாராவது ஒருவர் தலைவராகட்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். தனது ராஜினாமவை திரும்பப் பெற மறுத்துவிட்டார்.
இது நடந்தது மே 27 2019. அன்றிலிருந்து அவர் தனது நிலைப்பாட்டிலிருந்து இதுவரை மாறவில்லை. அதன் பிறகு நடந்த பல மாநிலத் தேர்தல்களில் காங்கிரசுக்காக தீவிரமாக பரப்புரை செய்தார். ஆனாலும் பொறுப்பை ஏற்க முன் வரவில்லை. தன் தாய் சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தும் அவர் பொறுப்பை ஏற்க மறுக்கிறார்.
இந்த முறை பொறுப்பை ஏற்பாரா? அவருக்கு வேறு வழியில்லையா? காங்கிரசுக்கும் வேறு தலைவர்கள் இல்லையா? காங்கிரஸ் முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன?
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள்தாம் இருக்கின்றன. காங்கிரசுக்கு செயல்படும் தலைமை இருந்தால்தான் ஓரளவு சமாளிக்க முடியும். இதை கட்சி புரிந்து வைத்திருக்கிறது. தலைமைப் பொறுப்பை ஏற்க மறுப்பது, ராகுலுக்கு தலைமைப் பண்பு இல்லை அதனால் அஞ்சுகிறார் என்ற விமர்சனங்களுக்கு வழி வகுக்கலாம். அதனால் காலத்தின் கட்டாயத்தால் ராகுல் தலைமைப் பொறுப்பை ஏற்கலாம், சில நிபந்தனைகளுடன்.
வேறு ஒருவரை தலைவராக்கி ராகுல் காந்தி வழிகாட்டியாக முன்னணி பரப்புரையாளராக காங்கிரசுக்கு உழைக்கலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த முறையில் ராகுல் காந்தி சுதந்திரமாக செயல்படலாம். கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக இல்லையென்றாலும் கட்சியை வழிநடத்துவது அவராகதான் இருப்பார். கட்சித் தலைமை பதவிக்கு ப.சிதம்பரம், கமல்நாத் பெயர்கள் கூறப்படுகின்றன. பிரியங்கா காந்தியின் பெயரும் சொல்லப்படுகிறது. காங்கிரசுக்கு தலித் முகம் தேவை என்று மல்லிகார்ஜுனா கார்கே, முகுல் வாஸ்னிக் பெயர்களும் முன்னுக்கு வந்திருக்கின்றன. சுதந்திர தினத்தில் கட்சி தலைமையகத்தில் கொடியேற்றிய அம்பிகா சோனியின் பெயரும் தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.
ஆனால் இவர்கள் யாரும் இந்தியா முழுவதிலும் தெரிந்த முகங்கள் அல்ல. வட இந்தியாவைத் தாண்டினால் ராகுலும் பிரியங்காவும்தான் இந்தப் பகுதி மக்களுக்குத் தெரியும். இந்தத் தலைவர்களால் வாக்குகளைப் பெற்றுத் தர முடியுமா என்பதும் சந்தேகம்தான்.
காங்கிரசின் சமீபத்திய வரலாற்றில் 1991லிருந்து 1998வரை நேரு குடும்பத்தினரை சேராத நரசிம்மராவ், சீதாராம் கேசரி ஆகிய இருவரும் காங்கிரஸ் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். 1998லிருந்து 2017 வரை சோனியா காந்தியும் 2017லிருந்து 2019வரை ராகுல் காந்தியும் பதவியிலிருந்தார். இப்போது சோனியா காந்தி தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.
நேரு குடும்பத்தை சேராதவர் தலைவர் பொறுப்பை ஏற்றாலும் அவர் வலிமை மிக்க தலைவராக இருப்பாரா என்பது சந்தேகம்தான். வலிமையற்றவராக இருப்பதைதான் சோனியா காந்தியும் விரும்புவார்.
காங்கிரசின் தலையாய பிரச்சினை தலைமையில் யார் என்பதில் இல்லை. களத்தில் யார் நிற்கிறார்கள் என்பதுதான் பிரச்சினை.
இன்று இந்தியா முழுவதிலுமே களத்தில் பாஜகவுக்கு சரி சமமாக நின்று போராட்டங்களை நடத்தும் விமர்சனங்களை வைக்கும் காங்கிரஸ்காரர்களை பார்க்க முடியவில்லை.
மக்கள் பிரச்சினைகள் ஏராளம் இருக்க அவற்றை கையிலெடுத்து தீவிரமாய் போராடும் காங்கிரஸ் தலைவர்கள் இப்போது யாரும் இல்லை.
இந்திரா காந்தி இருந்தபோது வலிமை மிக்க மாநிலத் தலைவர்கள் இருந்தார்கள். அவர்களைவிட வலிமையாக கட்சியின் மூளையாக இந்திரா இருந்தார்.
அவருக்குப் பின் வந்த ராஜீவ் காந்தி, ஆரம்பத்தில் அனுதாபத்தில் அடுத்து ஹை டெக்கிலும் மக்கள் ஆதரவைப் பெற்றார். ஆனால் போஃபோர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு அவருடை பிம்பத்தை அசைத்தது. கொடூர படுகொலையில் அவரது பதினொரு ஆண்டு அரசியல் வாழ்வு முற்றுப் பெற்றது.
அவருக்குப் பின் பிரதமரானார் நரசிம்ம ராவ். எதிர்க் கட்சிகளின் பலவீனத்தாலும் அவரது சாதூர்யத்தினாலும் அவரால் ஆட்சியை கொண்டு செல்ல முடிந்தது. 1996வரை அவர் ஆட்சியிலிருந்தார். அவருக்குப் பிறகு 8 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை.
மீண்டும் 2004ல் ஆட்சியைப் பிடித்தது. அடுத்த பத்தாண்டுகள் 2014 வரை ஆட்சியிலிருந்தது.
2024 தேர்தலை சந்திக்கும்போது ஆட்சியிலில்லாமல் காங்கிரஸ் பத்தாண்டுகளை கழித்திருக்கும்.
2004ல் மீண்டு வந்தது போல் 2022ல் மீள முடியுமா?
2004ல் மோடி போன்ற வலிமையான தலைவர் பாஜகவை வழிநடத்தவில்லை. சமூக ஊடகங்கள் பரப்புரை அன்று வலுவாக இல்லை. மத அரசியல் அன்று இத்தனை தீவிரமாக இல்லை. தேச பக்தி அரசியல் அப்போது முன்னிலை வகிக்கவில்லை. மிக முக்கியமாய் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாவிட்டாலும் பல மாநிலங்களில் வலுவாக இருந்தது. ஆனால் இன்றைய நிலை வேறு.
2024 தேர்தலை வலுவுடன் காங்கிரஸ் சந்திக்க வேண்டுமென்றால் ராகுல் காந்தி போன்ற நாட்டில் அனைவருக்கும் தெரிந்த முகம் தேவை. ராகுல் காந்தி போன்று களைப்பில்லாமல் பரப்புரை செய்யும் தலைவர் தேவை. ராகுல் காந்தி போன்று மோடியை தீவிரமாக எதிர்க்கும் தலைவர் தேவை. ராகுல் காந்தி போன்று நவீன தொழில் நுட்பங்கள் தெரிந்த தலைவர் தேவை. ராகுல் காந்தி போன்று இளைய தலைமுறையுடன் எளிதில் பழகக் கூடிய தலைவர் தேவை.
அது யார்?
ஒருவர் கண்ணுக்குத் தெரிகிறார். அவர் பெயர் பிரியங்கா காந்தி.
அவர் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வாரா?
பார்ப்போம்.