காரை ஏற்றி ஒருவரைக் கொலை செய்தால் என்ன தண்டனை கொடுப்பார்கள்? குறைந்தபட்சம் 7 ஆண்டுகளாவது சிறை தண்டனை கொடுப்பார்கள் என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும். ஆனால் புனே நகரில் நடந்தது என்ன தெரியுமா?
வினோதமான தண்டனைகள்
போதையில் சொகுசுக் காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கிய 17 வயது இளைஞருக்கு, சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும் என்று தண்டனை விதித்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல…
போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும்.
மனநல சிகிச்சை பெற வேண்டும்.
போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும்.
எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று சில வினோதமான தண்டனை (!)களையும் அறிவித்திருந்தார்கள்.
போதையில் நடந்த விபத்து
புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரபல கட்டுமான நிறுவனரான விஷால் அகர்வாலின் 17 வயது மகன், மது போதையில் நள்ளிரவு 150 கிலோமீட்டர் வேகத்தில் தனது சொகுசுக் காரை (Porsche) ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இருவர் பலியாகி இருக்கிறார்கள்.
போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய அந்த இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆனால் அவரை சிறையில் அடைக்காமல் வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீனில் விடுவித்திருக்கிறார்கள் போலீஸார். சிறைத் தண்டனைக்கு பதிலாகத்தான் மேலே குறிப்பிட்டுள்ள லேசான சில தண்டனைகளை அவருக்கு வழங்கி இருக்கிறார்கள்.
உறவினர்கள் குற்றச்சாட்டு
குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மைனர் என்பதால் கடுமையான தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை என்று போலீஸார் கூறினாலும், அவரது அப்பாவின் செல்வாக்கால்தான் அவர் விடுவிக்கப்பட்டதாக விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 14 மணி நேரத்தில் அந்த இளைஞருக்குப் பிடித்த பீட்சா, பர்கர் மற்றும் பிரியாணியை போலீஸார் அவருக்கு வாங்கித் தந்ததாகவும் அவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு இப்படி பீட்சா, பர்க்கர் போன்றவற்றை வாங்கித் தந்த்தற்காக புனே நகர கமிஷனர் அமிதேஷ் குமாரை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று சினசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின்போது அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு துணையாக காவல் நிலையத்தில் இருந்த்தாக அவர் தெரிவித்துள்ளார்.
பார் உரிமையாளர்கள் கைது
ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் பொதுமக்களும், மறுபக்கம் அரசியல் தலைவர்களும் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்த்தைத் தொடர்ந்து போலீஸார் இந்த வழக்கில் தீவிரம் காட்டினர். அந்த இளைஞரின் அப்பாவான கட்டுமான நிறுவன உரிமையாளர் விஷால் அகர்வாலை கைது செய்திருப்பதாக புனே காவல் துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார். 75 மற்றும் 77 ஆகிய சட்டப் பிரிவுகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அந்த இளைஞருக்கு மது வழங்கிய 2 பார்களின் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கார் முறையாக ரெஜிஸ்டர் செய்யப்படாமல் கடந்த பல மாதங்களாக இயக்கப்பட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் அந்த காருக்கு முறையான நம்பர் பிளேட் இல்லை. இதைப் பற்றியும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.