அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தைப் பொங்கலையொட்டி, தமிழக மக்களுக்கு செங்கரும்பு வழங்காமல் கரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசைக் கண்டித்து, கழக விவசாயப் பிரிவின் சார்பில் 2-ந்தேதி திருவண்ணாமலையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தேன். கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதேபோல், இன்றைய முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கோரிக்கை வைத்த பொங்கல் பரிசுத் தொகையான ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும், விவசாயிகள் கோரிக்கை தலைவலி தீருவதற்குள் வயிற்றுவலி வந்த கதையாக, கரும்பு பிரச்சினை முடிவதற்குள், விலையில்லா வேட்டி-சேலை பிரச்சனை பூதாகரமாக வடிவெடுத்து உள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. வரும் தைப் பொங்கலுக்கு ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் உடுக்க உடை என்ற, எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டம் பாழாகும் சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. 2023-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று திமுக அரசை எச்சரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி பாதுகாப்பில் குறை இல்லை: துணை ராணுவம் விளக்கம்
ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நடை பயணம்’ என்ற பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது அவரது நடை பயணம் டெல்லிக்கு வந்துள்ளது.இதனிடையே, ராகுல் காந்தியின் பயணத்தில் பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதற்கு பதிலளித்துள்ள துணை ராணுவம், ராகுல் காந்தியின் பாதுகப்பில் எந்த குறைபாடும் இல்லை என்றும் ராகுல் காந்தி பல சந்தர்ப்பங்க்ளில் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாகவும் இது தொடர்பாக அவ்வப்போது ராகுல் காந்தி தரப்பிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 8 பேர் பலி
ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஆந்திராவின் கந்துகுருவில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் தெலுங்கு தேசம் கட்சியினர் என கூறப்படும் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாகவும், சிலர் படுகாயமடைந்ததாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். சந்திரபாபு நாயுடு, நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அத்துடன், காயமடைந்தோரை மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
உஸ்பெக்கிஸ்தானில் காய்ச்சல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி: இந்திய நிறுவனம் மீது குற்றச்சாட்டு
உஸ்பெக்கிஸ்தானில் காய்ச்சல் மற்றும் சளிக்காக குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட டானிக் குடித்த 18 குழந்தைகள் இறந்துள்ளனர். குழந்தைகள் உயிரிழப்புக்கு அவர்கள் குடித்த டானிக் தான் காரணமா? அல்லது வேறு காரணங்களால் குழந்தைகள் இறந்தார்களா? என்பது பற்றி மருத்துவத்துறையினர் விசாரிக்க உள்ளனர். இதனிடையே, உஸ்பெக்கிஸ்தான் நாட்டின் தூதரகம், இந்தியாவை சேர்ந்த குழந்தைகள் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது புகார் கூறியுள்ளது.
அந்த புகாரில், குழந்தைகளின் சாவுக்கு இந்திய தயாரிப்பு நிறுவன மருந்துதான் காரணம் என்று கூறியுள்ளது. இந்த பிரச்சினை குறித்து உஸ்பெக்கிஸ்தானுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு முன்வந்துள்ளது.