அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. இரண்டு மூன்று ஷெட்யூல்கள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக மார்ச் 15-ம் தேதி இப்படக்குழு வெளிநாடு கிளம்ப திட்டமிட்டப்பட்டு இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.
என்ன காரணம்?
ஷூட்டிங் கிளம்புவதற்கு முன்பாக, அங்கே ஆக்ஷன் காட்சிகளை எடுக்க இருப்பதால், இன்ஸ்யூரன்ஸ் எடுக்க உடல்நல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாம்.
இந்த மருத்துவ பரிசோதனைகளுக்காகதான் அஜித் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது சோதித்த போதுதான் அஜித்திற்கு காதுக்கு அருகில் சிறு வீக்கம் இருப்பதாகவும், அது இப்போதைக்கு பிரச்சினை இல்லையென்றாலும், பின்னாளில் ஏதாவது ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் அதற்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென மருத்துவர்கள் குழு பரிந்துரைத்தது.
இதனால் அந்த சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டு, இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்த அஜித் பின்னர் வீடு திரும்பினார்.
சிகிச்சை முடிந்த திரும்பிய மறுநாளே தனது மகன் பள்ளிக்கூடத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில்,, மகனை உற்சாகப்படுத்த கலந்து கொண்டார். இதனால் அஜித்தின் உடல்நலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. அப்புறம் ஏன் ஷூட்டிங் கிளம்பவில்லை என்ற கேள்வி எழுந்தது.
ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் ரஜினி சிறப்புத்தோற்றத்தில் நடித்து சமீபத்தில் வெளியான ‘லால் சலாம்’ படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு போட்ட முதலீட்டில் பாதிக்கு பாதி நஷ்டம் என்று கூறுகிறார்கள்.
இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடும் பொருளாதார நெருக்கடி இருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் உடனடியாக பணம் போடுவதில் சிக்கல் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது என்றும் முணுமுணுக்கிறார்கள்.
பொருளாதார சிக்கல்கள் இருக்கிறது என்ற பேச்சு ஒரு புறமிருந்தாலும், வேறு சில சிக்கல்களும் இருப்பதாகவும் கோலிவுட்டில் கூறப்படுகிறது. அதாவது ஷூட்டிங் நடப்பதற்கான லொகேஷன்களைத் தேர்வு செய்வதிலும் தொய்வு ஏற்பட்டு இருக்கிறதாம். சில லொகேஷன்கள் படப்பிடிப்பிற்கு சரியாக இருக்கும் என்றாலும், அங்கே ஷூட்டிங் நடத்துவதற்கு அவசியமான அனுமதி பெற அதிக காலம் பிடிக்கிறதாம். இதனால் திட்டமிட்டப்படி ஷூட்டிங் கிளம்பமுடியவில்லை என்று கூறுகிறார்கள்.
இந்த இரண்டு பஞ்சாயத்துகளையும் தாண்டி ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றும் கோலிவுட்டில் அடிப்படுகிறது. அதாவது ‘லால் சலாம்’ படத்தின் ஷூட் செய்யப்பட்ட காட்சிகள் சேமித்து வைக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது என்று கிளம்பிய பஞ்சாயத்தைப் போலவே, விடாமுயற்சி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கும் காணாமல் போயிருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது. இதைக் கண்டெடுக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் கூறுகிறார்கள்.