சென்னையில் நடைபெற்ற ‘செஸ்’ ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். அப்போது பிரதமரின் பாதுகாப்புக்கு போலீசார் செய்திருந்த ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டிருந்ததாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து விளக்கம் அளித்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்த போது பாதுகாப்பில் குளறுபடிகள் ஏற்படவில்லை. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு குழுவினர் எந்த குறையும் சொல்லவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அண்ணாமலை புகார் குறித்து விளக்கம் கேட்டு தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு தலைமைச்செயலாளர் இறையன்பு இன்று விரிவாக விளக்கம் அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி – அமைச்சர் ரகுபதி
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட வரைவு தமிழ்நாடு சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட வரைவை ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால், இந்த சட்ட சட்ட வரைவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை சென்னை ராஜ்பவனில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுநருக்கு நேரில் விளக்கம் அளித்தோம். ஆளுநர் சில சந்தேகங்கள் கேட்டார். அதற்கு பதிலளித்தோம். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் உறுதி அளித்துள்ளார்” என்று கூறினார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்
குஜராத் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக 89 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல்கட்டமாக தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளை உள்ளடக்கிய, 19 மாவட்டங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இன்று தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில், பழங்குடியினருக்கு 14, தலித்களுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 70 பேர் பெண்கள், 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். இதில் நடசத்திர வேட்பாளர்களும் நிறைய பேர் இருக்கின்றனர். குறிப்பாக ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி கம்பாலி தொகுதியில் களம் காண்கிறார்.
வரவேற்பு மேடையில முத்தம் கொடுத்த மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்திய புதுப்பெண்
உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் கடந்த 27-ந்தேதி விவேக் அக்னிகோத்ரி (வயது 26) என்ற வாலிபருக்கும், அப்பகுதியை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மண்டபத்தில் குவிந்திருந்தனர். அப்போது திடீரென மணமகன் விவேக் அக்னிகோத்ரி, மணமகளை முத்தமிட்டார். இதனால் மணமகள் அதிர்ச்சி அடைந்தார். விருந்தினர்கள் அனைவரது முன்னிலையிலும் அவர் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதிய அவர் ஆவேசமடைந்து விழாவை நிறுத்தினார்.
இதனால் மணப்பெண்ணின் குடும்பத்தினர் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மணமகளை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அந்த பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வளவு பேர் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஒருவரின் குணாதிசயங்கள் குறித்து சந்தேகம் இருப்பதாக கூறிய மணப்பெண் திருமணத்தை நிறுத்திய கையோடு இதுபற்றி போலீஸ் நிலையத்திற்கு சென்றும் புகார் அளித்தார்.