பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகத்தில் வேலூர், சென்னை ஆகிய நகரங்களில் பிரச்சாரம் செய்கிறார். இதன் ஒரு பகுதியாக சென்னையில் அவர் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதன்படி நாளை மாலை 6 மணிக்கு தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தியாகராய நகரில் ரோடு ஷோ மூலம் மோடி பிரச்சாரம் செய்கிறார். அப்போது பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான பாண்டி பஜார் சாலையில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு ரோடு ஷோ மூலம் பிரதமர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இந்த ரோட் ஷோ மூலம் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் மற்றும் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம் தொகுதி பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் மோடி. இந்த ரோடு ஷோ நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்த பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
பிரதமரின் ரோட் ஷோவுக்கு போலீஸார் 20 நிபந்தைகளை விதித்துள்ளனர். இதில் முக்கியமான சில நிபந்தனைகள் வருமாறு…
ரோட் ஷோவில் பிரதமரைக் காண வருபவர்கள் மரத்தால் ஆன கைப்படியிடன் கூடிய பதாகைகள் எடுத்து வரக்கூடாது
ரோட் ஷோ நடக்கும் பகுதியில் அலங்கார வளைவுகளை அமைக்கக் கூடாது.
பிரதமரின் ரோட் ஷோவின்போது அவர் உரையாற்ற அனுமதியில்லை
மத நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையிலும் வெறுப்புணர்வு தூண்டும் வகையிலும் முழக்கங்கள் எழுப்பக் கூடாது.
பிரதமரின் ரோட் ஷோவின்போது தொண்டர்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பக் கூடாது
குண்டு துளைக்காத வாகனங்களை மட்டுமே பிரதமர் ரோட் ஷோவில் பயன்படுத்த வேண்டும்
ரோட் ஷோ நடக்கும் பகுதியில் பேனர், கட் அவுட்கள் உள்ளிட்டவற்றை வைக்கக் கூடாது
அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே ரோடு ஷோ நடத்த வேண்டும்; வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது