பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், ரூ.1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரூ.1000 வழங்குவதை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதலமைச்சரும் மாவட்டங்களில் அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
98வது பிறந்த நாள்: நல்லக்கண்ணுக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து
இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணுக்கு இன்று 98-வது பிறந்தநாள். இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்திற்கு நேரில் சென்று நல்லக்கண்ணுக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது நல்லக்கண்ணுவை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு நாம் எடுத்திருக்கிற முயற்சிக்கு வழிகாட்டியாக நல்லக்கண்ணு விளங்கிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல இந்த அரசுக்கும் உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியுடைய தி.மு.க. அரசுக்கும் ஒரு பக்கபலமாக இருந்து எப்படி தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கிறாரோ அதேபோல் வழிகாட்டியாக இருந்து பணியாற்றிட வேண்டும்” என்றார்.
வாரிசு இசை வெளியீட்டு விழா: பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்?
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாரிசு’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே, இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்தன. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவின் போது, ரசிகர்கள் சிலர் உற்சாக மிகுதியில் அதிகப்படியான இருக்கைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனால், வாரிசு பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக, நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்திய பின், தயாரிப்பு நிறுவனத்திடம் உரிய அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
சுனாமி நினைவு தினம்: கடற்கரை பகுதிகளில் கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி என்கின்ற பேரலை தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை தாக்கியதில் பலர் உயிரிழந்தனர். இதன் நினைவு தினத்தை மீனவ கிராம மக்கள், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்பினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இன்று அனுசரித்தனர். இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் சுனாமி பேரலையில் இறந்த நபரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் பகுதிக்கு வந்தனர். பின்னர் கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி கடல் அலைகளை பார்த்து கும்பிட்டனர். பின்னர் கடற்கரை ஓரமாகவே கற்பூரம், விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றை ஏற்றி இறந்தவர்களுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.