திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் இன்று மாலை நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம், சின்னாளப் பட்டி, அம்பாத்துரை பகுதிகள் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உட்பட 6 பேரும் விடுதலை
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மே.18ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிசந்திரன், ஹரிகரன் ஆகியோர் தங்களை சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளித்தனர். அதில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்டட தீர்ப்பு இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் என்று கூறி நளினி உட்பட ஆறுபேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சென்னை – மைசூரு இடையே நாட்டின் அதிவேக வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார். கர்நாடகா மாநிலம் பெங்களூரு கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடியுடன் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்கள் தவார்சந்த் கெலாட், பிரகலாத் ஜோஷி, அஸ்வினி வைஷ்னவ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
வந்தே பாரத் ரயில் வரிசையில் இயங்கும் 5ஆவது ரயில் இதுவாகும். இந்த ரயில் சென்னை, பெங்களூரு, மைசூரு வழித்தடத்தில் புதன்கிழமை தவிர மற்ற நாள்களில் இயக்கப்படும். இதில் மொத்தம் 16 பெட்டிகளும் 1,128 இருக்கைகளும் உள்ளன. சென்னையில் இருந்த மைசூரு செல்லும் வந்தே பாரத் ரயிலின் எண் 20607 என்றும் மைசூரில் இருந்து சென்னை செல்லும் ரயிலின் எண் 20608 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் விரைவில் டைடல் பார்க் – தங்கம் தென்னரசு தகவல்
நீலகிரி மாவட்டம் உதகையில் மினி டைடல் பார்க் அமைக்கத் தேவையான இடத்தை தேர்வு செய்ய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோர் உதகையில் உள்ள இடங்களை நேற்று ஆய்வு செய்தனர். உதகை ஹெச்.பி.எஃப் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடம், பட்பயரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நிலம், கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமான மேய்ச்சல் நிலம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
பின்னர் தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் டைடல் பூங்கா மிக விரைவில் கட்டப்படும். எங்களுடைய பார்வையில் ஹெச்பிஎஃப் பகுதியில் 90 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடம் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறோம். நீலகிரியில் மாஸ்டர் பிளான் உள்ளதால், அதற்கு பிரத்யேகமாக வடிவமைப்பு தேவை. அதன்படி டைடல் பார்க் கட்டுமானங்கள் அமைக்கப்படும். டைடல் பார்க் மூலம் நீலகிரி மாவட்டத்தில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கு, ரூ.100 கோடி அளவுக்கு நிறுவனங்கள் முதலீடு செய்யும் வாய்ப்புள்ளது” என்று கூறினார்.