நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சுக்காக அவையில் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஆளும் பாஜகவும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த 13, 14, 15, 16ஆம் தேதிகளில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின.
இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசியதற்கு ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க கோரி ஆளும் கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பதிலுக்கு அதானி குழும முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இருஅவைகளும் வரும் திங்கள் காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தமிழ்நாட்டை சேர்ந்த விமானி உயிரிழப்பு
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாசலபிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டம், சாங்க் கிராமத்தில் இருந்து புறப்பட்டது. ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி ஆகியோர் அந்த ஹெலிகாப்டரில் அசாமின் மிஸ்ஸாமாரி பகுதிக்கு செல்ல இருந்தனர். அவர்களே விமானிகளாக ஹெலிகாப்டரை இயக்கி சென்றனர். காலை 9 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் 9.15 மணிக்கு கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. மேற்கு பூம்டிலா மாவட்டம் மன்டலா பகுதியில் பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர், விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதையடுத்து கடைசியாக தகவல் வந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் விழுந்து கிடந்த இடம் கண்டறியப்பட்டபோது, ஹெலிகாப்டர் எரிந்து புகைந்து கொண்டிருந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ அதிகாரிகளும் கருகி இறந்தனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களின் பெயர்கள் லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெயந்த் என்று தெரியவந்தது. உயிரிழந்த விமானி ஜெயந்த் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மேஜர் ஜெயந்தின் உடல், சொந்த ஊரான தேனி ஜெயமங்கலம் பகுதிக்கு இன்று கொண்டு வரப்படுகிறது.
சென்னையில் திடீர் மழை: தமிழகத்தில் மார்ச் 19 வரை மழை வாய்ப்பு
தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. சென்னையிலுள்ள அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், கொளத்தூர், பாடி, வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு வட உள்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 17.03.2023 முதல் 19.03.2023 வரை, தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுமக்கள், மின்னல் தாக்கத்தின்போது திறந்தவெளியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்கக் கூடாது. நீச்சல் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நர்சிங் மாணவி கழுத்தை அறுத்து கொலை: காதலன் வெறிச்செயல்
இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு ராதாபுரம் கிராமத்திற்கு அவர் வந்தார். அப்போது தரணி வீட்டிற்கு வெளியே இருந்த கழிவறைக்கு சென்று விட்டு திரும்பினார். அங்கு மறைந்து நின்று கொண்டிருந்த கணேசன் தரணியை வழிமறித்து, தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தினார். இதற்கு தரணி மறுத்ததால், கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியால் தரணியை கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கத்தி வெட்டில் பலத்த காயம் அடைந்த தரணி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் தரணி (வயது 19). இவர் இவரும், மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கணேசனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தரணி காதலிக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் கணேசன் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
இந்த கொலை சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட விக்கிரவாண்டி போலீசார் கொலையாளி கணேசனை கைது செய்தனர்.