நோயல் நடேசன்
ஒரங்குட்டான்கள் நமக்குத் தூரத்து உறவினர்கள். அதற்கான ஆதாரங்களை இன்றைய ஓரங்குட்டான்களிடம் பார்க்க முடியும்!
பெண் ஒரங்குட்டான் உடலுறவை விரும்பும்போதுதான் அது நடைபெறும். அது விரும்பாதபோதில் ஆண் ஒரங்குட்டானால் பலவந்தமாக நடைபெறும். பெரும்பாலும் விருப்பத்துடன் நடக்கும்போது பெண் ஒரங்குட்டான் வயதான, பலமான ஆணையே தெரிவு செய்யும். அதே நேரத்தில் நிராகரிக்கப்பட்ட இளம் ஆண் ஒரங்குட்டான்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் என அறியப்படுகிறது.
ஓரங்குட்டான்களுக்கு மனிதர்கள் போல, 96.4 வீதமான நிறமூர்த்த (DNA) ஒற்றுமை உண்டு.
மேலும் காரணம் தேவையா?
ஆண் ஓரங்குட்டான் சண்டையில் ஈடுபட்டு, அதன் முகத்தில் காயம் வந்தபோது, மூலிகை இலையைக் கடித்து அதன் சாறைக் காயத்தில் போட்டு கொண்டதால், அந்தக் காயம் சில நாட்களில் குணமடைந்தது எனச் சமீபத்தில் ஒரு தகவல்… நீங்களும் படித்திருக்கலாம்.
ஓரங்குட்டான் ஆற்றில் கம்பை வைத்து மீன் பிடிப்பதையும் ஒரு புகைப்படமாகப் பார்த்தேன். அதேபோல் புதைகுழியில் விழுந்த புகைப்படக்காரருக்கு அது கை கொடுத்த படமும் உலகெங்கும் பரவலாகியது.
உயிர் வாழ்வதற்காக மனிதன் மட்டுமல்ல ஒவ்வொரு ஜீவராசியும் முயல்கிறது. வட துருவத்து நாடுகளில் வதியும் பறவைகள் குளிரிலிருந்து தங்களையும் தங்கள் இளம் சந்ததியையும் பாதுகாக்க, வெப்ப நாடுகளுக்கு இனப்பெருக்கம் செய்ய இடம் மாறுவதையும், ஆப்பிரிக்காவில் காட்டு மிருகங்கள் நீரையும் உணவையும் தேடி இலட்சக்கணக்கில் இடம் பெயருவதையும் பல ஆவணப்படங்களில் பார்த்திருக்கிறோம்.
எனவே, ஒரங்குட்டான் தன்னைப் பாதுகாக்க மருந்து போடுவது வியப்பல்ல. ஆனால், மனிதர்களாகிய நாம் அவைகளுக்கு என்ன செய்தோம்? பல இன அழிப்புகளை காலம் காலமாக செய்துள்ளோம். செய்து வருகிறோம்.
தென் கிழக்காசியா, ஆசியாவில் இந்தியா எல்லை வரை, வட ஆசியாவில் சீனா வரை பரவியிருந்த ஒரங்குட்டான்கள், இப்பொழுது போர்னியோ, சுமாத்திரா தீவுகளின் காடுகளில் மட்டிலுமே உள்ளது. அங்கும் ஒரங்குட்டான்களை கொன்று, குட்டிகளைச் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்க்கும் முறை பலகாலமாக இருந்தது. சமீபத்திலேதான் அந்த நடைமுறை தடைசெய்யப்பட்டது.
எனது பாடசாலை நண்பர்களுடன் போர்னியோவின் மேற்கு பகுதியான மலேசியாவிற்குரிய சாபா மாநிலத்திற்குச் சென்றிருந்தேன். பல காலமாக நினைத்திருந்த பயணம். போர்னியோ, ஆப்பிரிக்கா போன்று புவியில் உள்ள மற்றைய நாடுகளில் இல்லாத மிருகங்களைக் கொண்ட இடம். பூமத்தியரேகைக்கு அருகில் இருப்பதால், அதிக மழையுடன் நீண்ட ஆறும் வளைந்து நெளிந்து நிலமெங்கும் ஓடுவதால் வளமான காடுகள் உள்ள இடம். இக்காடுகளில் வானுயர்ந்த நெடிய மரங்கள், இலைகளால் நிலத்தில் ஒளி பரவாது தடுக்கும்.
ஆதிக்குடிகள் மட்டும் வாழ்ந்ததால் பல காலமாக அழிவிலிருந்து பாதுகாப்பாக இருந்தது. ஆங்கிலேயரும் ஓல்லாந்தரும் போர்னியோவை கைப்பற்றி ஆண்டுவிட்டு, அந்த பகுதியின் பெரும்பகுதியை இந்தோனீசியாவிற்கும், சிறிய பகுதியைச் சபா, சரவாக் என மலேசியாவிற்கும் புரூணை என்ற சிறிய நாட்டையும் அந்த ஒரே தீவில் உருவாக்கினார்கள். பிற்காலத்தில் செம்பனை எனப்படும் பாம் ஒயில் மரங்கள் பயிரிடக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. ஆதிக்குடிகள் இடம் மாறியும் உள்ளார்கள். ஆனால், தற்பொழுது ஒரு அளவுக்காவது காடுகளும் மிருகங்களும் பேணப்படுவதும் அதைப் பார்க்க உல்லாசப் பிராணிகள் வருவதும் ஒரு நன்மையான விடயமாகும்.
ஆப்பிரிக்காவிலுள்ள மனிதக் குரங்குகள் எனப்படும் இரண்டு காலில் நடக்கும் கொரில்லா, சிம்பான்சி என்பவற்றிற்கு இணையானது போர்னியோவில் உள்ள ஒரங்குட்டான். மரத்தின் மிக உச்சிக் கிளையில் வீடமைத்து வாழுகின்றன. ஒவ்வொரு நாளும் இலைகளாலும் கிளைகளாலும் கூடுகள் அமைக்கும் இவை, மனிதர்களது நிறையில் உள்ளதால் இவற்றிற்கு அதிக உணவு தேவை.
96.4 வீதமான நிறமூர்த்தங்கள் நம்மைப் போன்றது. 12-16 மில்லியன் வருடங்கள் முன்பாக பரிணாமத்தில் நடந்த பிரிவு நம்மை மனிதனாக்கியது. போர்னியோவை விட சுமாத்திராவிலும் உள்ள ஓரங்குட்டான் சிறிய வித்தியாசத்தில் வாழ்கிறது.
மலாய் மொழியில் ஒரங் என்பது மனிதன், குட்டன் என்றால் வனம். இப்படியாகக் காட்டில் வாழும் மனிதனாகக் கருதினாலும் அவைகள் பல கொடுமைகளுக்கும் ஆளாகுகின்றன.
நாங்கள் ஆரம்பத்தில் சடங்கான் நகரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, அனாதையாக விடப்பட்ட ஓரங்குட்டான் குட்டிகளைப் பராமரிக்கும் (Sepilok Orangutan Rehabilitation Centre) இடத்திற்குச் சென்றோம். மனிதர்களால் தாய் கொல்லப்பட்டோ அல்லது வளர்ப்பு பிராணியாக வளர்க்கப்பட்டோ, பின்னர் நிறுவனத்தால் பொறுப்பேற்கப்பட்ட குட்டிகளை, உணவைக் கொடுத்து மீண்டும் காட்டில் வாழப் பயிற்சி கொடுக்கும் இடமே இது.
இங்கு தற்போது தனியார் ஒரங்குட்டான்களை வளர்ப்பதோ வேட்டையாடுவதோ சட்டபடி தடை செய்யப்பட்டுள்ளது. 1960இல் இந்த ஓரங்குட்டான் குட்டிகளைப் பராமரிக்கும் நிலையம் வனத்தின் நடுவே ஆரம்பிக்கப்பட்டது.
இங்கு மற்றைய குரங்குகளுடன் ஒரங்குட்டான் குட்டிகள் ஒற்றுமையாக வாழ்வதைக் கண்ணாடியூடாக கண்டேன். ஐந்து வயது வரையில் தாயின் பராமரிப்பில் இருக்க வேண்டியவை. இந்த ஒரங்குட்டான் குட்டிகளைப் பார்த்த போது அந்த இடம் குழந்தைகள் பராமரிப்பு நிலையமாக எனக்குத் தெரிந்தது. சுற்றியிருந்த வானுயர்ந்த மரக்காட்டினூடாக நாங்கள் நடந்தபோது மரங்களின் உச்சிக் கிளையில் இலைகள் சலசலத்தன.
எல்லோருடனும் ஒன்றாக நானும் நிமிர்ந்து பார்த்தபோது, உடல் மறைந்து சிவப்பு ரோமம் கொண்ட கை மட்டும் உறுதியாகக் கிளையொன்றைப் பற்றி இருப்பது தெரிந்து. அந்தக் கைகளால் முற்றிய தேங்காயை இலகுவாக இரண்டாக பிரிக்க முடியும். அத்துடன் அதற்கு ஏழு மனிதர்களின் பலம் உள்ளது என்றார் எமது வழிகாட்டி. ஒரங்குட்டானுக்கு துரியான்கள் மிகவும் விருப்பமான உணவு. பழங்கள் இல்லாத காலத்தில் பறவைகளின் முட்டைகள் மற்றும் தேனை அருந்தும். அடர்த்தியான வனத்தின் மரவுச்சிக் கிளைகளில் வாழும் இவை, மனிதர்களிடமிருந்து விலகி இருக்கின்றன. மிகவும் தேவையான போது மட்டுமே தரைக்கு வருகின்றன.
நாங்கள் சென்ற இடத்தில் மரத்தின் கீழ் அமைந்த ஒரு திண்ணையில் உணவை வைத்தார்கள். பார்வையாளர்களுக்காக மேடைபோல் கட்டப்பட்ட ஒரு இடத்திலிருந்தே எங்களால் அவற்றைப் பார்க்க முடியும்.
ஒரங்குட்டான்கள் தனிமையை விரும்புவன. கற்களை மனிதர்களை நோக்கி எறிந்த சம்பவங்களும் நடந்துள்ளது. அதை விட மனிதர்களது நோய்கள் அவைக்குத் தொற்றலாம் என்பதால் இந்த பாதுகாப்பு. பத்து மீட்டர்கள் தொலைவிலிருந்தே பார்க்க முடியும்.
கிட்டத்தட்ட நூறு பேர் நின்ற அந்த மேடையில் நானும் கெமராவுடன நின்றேன். அந்த நேரத்தில் எனக்கு இருமல் வந்தது. கையை வைத்து இருமியபோது, ஒரு வயதான பெண், கொஞ்சம் முன்னுக்குப் போக முடியுமா? எனக்கு நுரையீரல் மாற்றியிருக்கிறார்கள் என்றார்
எனக்கு ஜலதோசம் இல்லை, ஆஸ்துமா இருமல் எனச் சொல்ல நினைத்தாலும் மவுனமாக இடம் மாறினேன்.
உணவாக பப்பாளி, வத்தகப்பழம் எனப் பல பழங்களைக் கூடையில் வைத்துத் தூக்கியபடி சாரமணிந்த ஒருவர் வரவும் நானும் உசாரானேன். அவர் ஒரு சிறிய மேடையில் அவற்றைக் குவியலாக கொட்டினார். சில நிமிடங்கள் அமைதி நிலவியது. கெமராவை வைத்துக்கொண்டு, அங்கு வேலை செய்பவரிடம் கேட்டேன்.
‘இன்று ஒரங்குட்டான் வருமா?’
‘வரும், வராது’ என ரஜனிகாந்த் பாணியில் அவர் பதில் சொன்னார்.
அவரில் கடுப்பு ஏற்பட்டாலும், அது உண்மைதான். பல இடங்களில் காட்டு விலங்குகளை பார்க்கப்போனபோது ஏமாற்றமே காத்திருந்தது. அதிலும் வேட்டையாடும் சிங்கம், புலி என்பனவற்றைக் காணுவது தனிப்பட்ட அதிர்ஸ்டத்தைப் பொறுத்த விடயம்.
சிறிது நேரத்தில் பெரிய சிவப்பு ரோமம், பெரிய கரிய மயிரற்ற முன் முகமும் செந்நிற லெனின் தாடியும் கொண்ட ஆண் ஒரங்குட்டான், அங்கிருந்த கயிறு வழியாக ஆங்கிலத் திரைப்படங்களில் வரும் டார்சனாக வழுக்கியபடி வந்தது, உண்மையில் அதிசயமான ஒரு காட்சியாக இருந்தது.
எந்தத் தயக்கமும் அற்று அது கூடையிலிருந்த பழங்களை எடுத்துத் தின்றது. அப்பொழுது பெண் ஒரங்குட்டான் பிள்ளையை முதுகில் காவியபடி வந்தது. அதை விட இன்னும் ஒரு பெண் ஒரங்குட்டானும் வந்தது. அவைகள் அவசரமாக உணவை எடுத்து தின்றபோதிலும் ஆண் ஒரங்குட்டான் எங்களூரில் கள்ளுக் கொட்டிலில் இருந்து கருவாட்டைக் கடித்து ருசித்தபடி கள்ளை குடிப்பவர்கள்போல் வெகு சுவாரசியமாக உணவை உண்டது.
ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதான் பெண் ஒரங்குட்டான் பிள்ளை பெறுவதால், ஆண் ஓரங்குட்டான் தனிமையாகக் காலங் கழிக்கும். உணவுத் தேவைக்காக அதிக தூரம் சென்று உணவு தேடும். பாலியல் ஏமாற்றத்தால் பலாத்காரம் – குழந்தையைக் கொலை செய்தல் போன்ற விடயங்கள் அவற்றிடம் உண்டு.
ஒரங்குட்டான்களுக்கு எங்களைப்போல் 32 பற்களும், கைகளில் ரேகையும் உள்ளன. ஒன்பது மாதங்கள் கர்ப்ப காலம் என எல்லாம் உள்ளது. குட்டி பிறந்தபின் குட்டியை உயர்த்தி தொப்புள் கொடியை கடித்து அறுத்ததை கண்டதாக எமது வழிகாட்டி சொன்னார்
ஒரங்குட்டானின் விரல்கள், கைகளைப்போல் கால்களிலும் எதிர்த்திசையில் இருப்பதால், கால்களால் கிளைகளை இறுக்கமாக பற்றிக்கொள்ளும். இடுப்பு எலும்புகள் சுழலும் வகையில் அமைந்த விதத்தால் வேகமாக மரங்களிடையே பாய்வதுடன் உச்சிக் கிளைகளிலே சீவிக்கும்.
பெண் 40 கிலோவும் ஆண் 70 கிலோவும் சராசரியான நிறையாகும். ஆண் – பெண் இனப்பெருக்கம் தாமதமாகும். 15 வயதுக்குப் பின்பே ஆண் உடலுறவுக்கு தகுதியாகும். ஆனாலும் பெண் பலமான ஆணைத் தெரிந்தெடுப்பதால் பல காலம் உடலுறவு அற்று இளமையான ஒரங்குட்டான்கள் தனிமையில் வாழும்.
குட்டிகள் 3 வருடங்கள் பால் குடித்தும் மேலும் இரு வருடங்கள் தாயின் கவனிப்பில் வளரும். ஒரங்குட்டான்களின் தொகை அதிகமற்று இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். குரங்குகள் போல் கூட்டமாக வசிப்பனவல்ல. உடலுறவு மற்றும் உணவு உண்ணும் நேரத்திலே மட்டும் ஒன்றாக இருப்பதைக் காண முடியும். மற்றும்படி ஆண் பெரும்பாலும் தனியாகவே வாழும்.
அத்திப்பழங்களே போர்னியோவில் ஒரங்குட்டானின் முக்கிய உணவாகும். அதைவிட ரம்புட்டான், மாம்பழம் விருப்பமானவை. பழங்கள் கிடையாத காலத்தில் இலைகள், தேன், பறவைகளின் முட்டை மற்றும் சிறிய மிருகங்களைப் பிடித்து உண்ணும். படுப்பதற்கு நாங்கள் கூடாரம் அமைப்பதுபோல் இலைகளாலும் கிளைகளாலும் வீடு கட்டுவதோடு அங்கு தலையணை மற்றும் போர்வை போன்று இலைகளால் தினமும் அமைக்கும்.
சில பழங்களிலிருந்து முள்ளை நீக்குவது, தடிகளால் மீன்பிடிப்பது, தேன் எடுப்பது போன்ற சிக்கலான செயல்களில் அவை ஈடுபட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆரம்பத்தில் தரையில் வாழ்ந்த நிறை கூடிய ஒரங்குட்டான்கள் ஆசியாவின் பல இடங்களில் வேட்டையாடப்பட்டிருக்கலாம். அதுவே அவை பிற்காலங்களில் மர உச்சியில் வசிப்பதற்கு ஏற்ப இடுப்பு எலும்புகளும் விரல் எலும்புகளும் இசைவாக்கமடைந்து தற்பொழுது மர உச்சியிலே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கவேண்டுமென விஞ்ஞானிகள் கருதுகிறர்கள். மிருகக்காட்சி சாலைகளில் 59 வருடங்கள் வாழ்ந்த போதிலும், சாபா வனங்களில் சராசரியாக 35 வருடங்கள் வாழ்கின்றன.
இலங்கையில் மிருகக்காட்சி சாலையில் தொடர்ச்சியாக தலையை ஆட்டியபடி நின்ற யானையை கண்ட பின்பு மிருகக்காட்சி சாலைகளின் பக்கமே நான் போவதில்லை. அவற்றை, அவை வாழும் வனத்திற்கு நாம் சென்று பார்ப்பதே அவைகளுக்கு நாம் செய்யும் மரியாதை என்ற நினைப்பில் ஒரங்குட்டான்களைப் பார்த்த பயணம் மனதிற்கு நிறைவாக இருந்தது.