அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சபாநாயகர் அப்பாவுக்கு 2ஆவது முறையாக எழுதியுள்ள கடிதத்தில், சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிமுக கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பையும் இக்கடிதத்தில் ஓபிஎஸ் மேற்கோள் காட்டியுள்ளார்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை புதிய துணை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளனர்.
சட்டப்பேரவை கூட்டம் வரும் 17ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதிமுக தொடர்பாக சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில், திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “அதிமுக கட்சியில் நிறுவனர் எம்ஜிஆர், பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கட்சி முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான சூரிய மூர்த்தி, “ஆங்கிலத்தில் உள்ள சில தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து படிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீண்ட அவகாசம் கேட்கக்கூடாது என மனுதாரருக்கு அறிவுறுத்தி, விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
அலுவல் மொழி விவகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பாஜக பதில்
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக்குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கியுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்மையாக கண்டித்துள்ளார். எதற்காக அவர் கண்டித்துள்ளார்?
மத்திய அரசு கல்வி நிலையங்களில் இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் இடம்பெற வேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளது. அதாவது, இனி தமிழகத்தில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழே பயிற்று மொழியாக வருவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்பது ஏன்? தமிழைப் பயிற்று மொழியாக கொண்டு வருவது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றா?
இந்தியை கட்டாயமாக்கவில்லை. மாறாக அனைத்து இந்திய மொழிகளையும் கட்டாயமாக்கும் முயற்சியின் முதல்படியே இது. அதை ஏன் திமுக எதிர்க்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டம் உதவி மையம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்ததால் அந்த நபர் தீக்குளித்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தீக்குளித்த நபர் படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என தெரியவந்துள்ளது.
கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பெண்கள் நரபலி
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்பவர், கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி விற்று வந்துள்ளார். அதேபோல், காலடியை சேர்ந்த ரோஸ்லின் என்பவரும் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக இடைத்தரகர் ஒருவர் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் பத்மாவின் உறவினர்கள், அவரது தொலைபேசிக்கு அழைத்துள்ளனர். ஆனால், பத்மாவின் தொலைபேசிக்கு தொடர்பு கிடைக்காததால், கொச்சி காவல்துறையில் செப்டம்பர் 27-ல் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பத்மாவின் தொலைபேசி சிக்னலை ஆராய்ந்த போலீசார் கடைசியாக பத்தினம்திட்டா மாவட்டம் திருவலா பகுதியோடு சிக்னல் நின்றதை தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பத்தினம்திட்டாவில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் லைலா – பகவந்த் சிங் தம்பதியினர், இவர்கள் இருவரையும் விரைவில் பணக்காரர்கள் ஆகும் நோக்கில் நரபலி கொடுத்துள்ள சம்பவத்தை போலீசார் கண்டுபிடித்தனர். பத்மாவும் நோஸ்லினும் நரபலி கொடுக்கப்பட்டு அவர்கள் வீட்டிலேயே புதைக்கப்பட்ட சம்பவம் அம்பலமானது.
நரபலி கொடுத்த தம்பதி மற்றும் இடைத்தரகர் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், நரபலி கொடுக்கப்பட்டு துண்டு துண்டாக வெட்டி திருவாழா நகரின் வெவ்வேறு இடங்களில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டும் பணியை தொடங்கியுள்ளனர்.
பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது
சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பள்ளி சீருடையில் இருக்கு மாணவி ஒருவருக்கு பாலிடெக்னிக் படிக்கும் மாணவர் ஒருவர் தாலி கட்டி உள்ளார். சீருடையில் மாணவர்கள் இருவரும் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவன் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இரண்டாவது நாளாக போலீசார் இன்று மாணவனிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மாணவனை பண்ருட்டியில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
இதனிடையே சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை வெளியிட்ட சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி கணேஷ் என்பவரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.