No menu items!

மிஸ் ரகசியா : தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி!

மிஸ் ரகசியா : தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி!

ஆபீஸில் இன்று எடிட்டோரியல் மீட்டிங். தீபாவளி ஸ்பெஷலுக்காக வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் வழக்கமாக துறுதுறுவென்று குறுக்கிட்டு தன் ஐடியாக்களை வாரி இறைக்கும் ரகசியா மட்டும் வரவில்லை.

‘என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு?’ என்று யோசித்துக்கொண்டு இருந்த நேரத்தில் வேர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்தாள் ரகசியா.”

“ஏம்மா இவ்வளவு லேட்? நான் நீ வரமாட்டியோன்னு நினைச்சேன்.”

“அது எப்படி வராம இருப்பேன். முக்கியமான கூட்டத்துல கலந்துக்காம இருக்க நான் என்ன கே.பி.முனுசாமியா?”

“கே.பி.முனுசாமி எந்த கூட்டத்துல கலந்துக்காம இருந்தார்?”

“உங்களுக்கு விஷயம் தெரியாதா? எடப்பாடி கூட்டின அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்துலதான் கே.பி.முனுசாமி கலந்துக்காம இருந்திருக்கார். கட்சியோட துணைப் பொதுச் செயலாளரா இருந்துட்டு அவர் இந்த கூட்டத்துல கலந்துக்காம இருந்தது பலரோட புருவத்தை உயர்த்தி இருக்கு. உடல்நிலை சரியில்லாம இருந்ததால அவர் இந்த கூட்டத்தைப் புறக்கணிச்சதா அதிமுககாரங்க வெளியில சொன்னாலும், ஒரு அதிருப்தியோடதான் இந்த கூட்டத்தை அவர் புறக்கணிச்சு இருக்காருன்னு பேசிக்கிறாங்க.”

“அவருக்கு அப்படி என்ன அதிருப்தி?”

“டெல்லிக்கு தன்னை கூட்டிட்டு போகாம முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை எடப்பாடி கூட்டிட்டு போனதுல வருத்தமாம். சட்டப் பிரச்சினை என்பதால்தான் சி.வி.சண்முகம் வந்தார்னு எடப்பாடி தரப்பு விளக்கம் சொல்லியிருக்கு. ஆனா இந்த விளக்கத்தை எல்லாம் கேக்கற மனநிலையில கே.பி.முனுசாமி இல்லையாம். தன்னை எடப்பாடி புறக்கணிக்கறாரோன்னு கோபமா இருக்காராம். கே.பி.முனுசாமியோட இந்த கோபத்தை புன்னகையோட பார்த்து ரசிச்சுட்டு இருக்காங்க ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.”

“நீ சொன்னபடியே கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஸ்டாலின் கொடுத்துட்டாரே?”

“ஆமாம். ஆரம்பத்துல இந்த பதவி மேல கனிமொழிக்கு அவ்வளவா விருப்பம் இல்லையாம். கனிமொழிகிட்ட பேசின ஸ்டாலின், ‘நீதான் கனிமொழியை பார்த்துக்கணும். கட்சியிலயும், ஆட்சியிலயும் அவளுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கணும்னு கலைஞர் என்னிடம் சொல்லியிருந்தார்’ன்னு உருக்கமா சொல்லியிருக்கார். கனிமொழிதான் துணைப் பொதுச்செயலாளர்னு ஸ்டாலின் சொல்ல, அவரும் அவரோட ஆதரவாளர்களும் பூரிச்சு போயிருக்காங்க. இதைத்தொடர்ந்து கனிமொழியோட ஆதரவாளர்கள் ஏற்கெனவே அச்சிட்டு தயாரா வச்சிருந்த நன்றி அறிவிப்பு சுவரொட்டிகளை நகர் முழுக்க ஒட்டி இருக்காங்க. ஆனா அவருக்கு பதவி கொடுத்த பிறகு டெல்லியில இருந்து வந்த ஒரு வாழ்த்து திமுக மேலிடத்தை அப்செட் ஆக்கியிருக்கு” ”

“அப்செட் ஆகுற மாதிரி அப்படி யார் வாழ்த்தினாங்க?”

“பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவிச்சதா அறிவாலயத்துல பேசுறாங்க. திமுகவுல பதவி கொடுத்ததுக்கு அவங்க ஏன் பாராட்டணும்னு திமுக தலைமை எரிச்சலடைஞ்சதாவும் சொன்னாங்க”
“பொதுக்குழுவுல ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு முதல்வர் பேசி இருக்காரே?”
“இதனால மூத்த தலைவர்கள் ரொம்பவே கலங்கிப் போயிட்டாங்களாம். பொதுக்குழு முடிஞ்ச அன்னைக்கு மாலையில டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன் இருவரும் முதல்வர் ஸ்டாலினைச் சந்திச்சு இருக்காங்க. ‘நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் கட்சி உங்கள் பக்கம்தான் இருக்கும். கவலை வேண்டாம். நிர்வாகிகளை மாத்தணும்னாலும், அமைச்சரவையில மாற்றம் செய்யணும்னாலும் உங்க விருப்பப்படி செய்யுங்கன்னு முதல்வர்கிட்ட சொல்லி இருக்காங்க. அதேநேரத்துல முதல்வர் உருக்கமா, கலக்கமா பொதுக்குழு மேடையில பேசிட்டு இருந்தபோது மற்றவர்கள் எல்லாரும் இறுக்கமா இருக்க, பொன்முடி மட்டும் சிரிசிட்டு இருந்ததையும் யாரும் கவனிக்கத் தவறல.”

“இந்த முறை தனக்கும் துணைப் பொதுச் செயலாளர் பதவி கிடைக்கும்னு செந்தில் பாலாஜி எதிர்பார்த்ததா சொல்றாங்களே?”

“சுப்புலட்சுமி ஜெகதீசன் துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததும், அந்தப் பதவிக்கு முதலில் ஆசைப்பட்டது செந்தில் பாலாஜிதான். முதல்வர் குடும்பத்தோட தனக்கு இருக்கிற நெருக்கத்தால இந்த பதவி தனக்கு கிடைக்கும்னு அவர் உறுதியா நம்பி இருக்காரு. இந்த விருப்பத்தை முதல்வர்கிட்ட அவர் சொல்ல, முதல்வர் நாசூக்கா மறுத்திருக்காரு. அவரும் சமாதானம் ஆகிட்டதா சொல்றாங்க. இன்னொருத்தரையும் சமாதானப்படுத்த வேண்டிய வேலை ஸ்டாலினுக்கு இருந்தது.”

“யார் அவர்?”

“எ.வ.வேலு தனக்கு பொருளாளர் பதவி கேட்டிருந்தார். ஆனா ஒரு விஷயத்துல ஸ்டாலின் தெளிவா இருந்தாராம். மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவங்கள்ல யாருக்கும் கட்சியின் மேலிடப் பொறுப்புகள உடனடியா கொடுக்க வேண்டாம்னு சொல்லியிருக்கார். இதுல ஒரிஜினல் திமுககாரங்களுக்கு மகிழ்ச்சி. தயாநிதி மாறனுக்குதான் கொஞ்சம் வருத்தம். கட்சியில தனக்கும் ஏதாவது ஒரு பதவி கிடைக்கும்னு தயாநிதி மாறன் உறுதியா நம்பி இருந்தாரு. ஆனா எந்தப் பதவியும் கொடுக்கல. கட்சிக்காக என் அப்பா எவ்வளவோ செஞ்சிருக்கார். ஆனா அதுக்கு கைமாறா கட்சி தங்களுக்கு எதையும் செய்யலன்னு அவர் வருத்தப்பட்டிருக்கிறார்”

”அவங்களுக்குதான் சன் டிவினு ஒண்ணு கிடைச்சிருகே. அது போதாதா?”

“இன்னொரு விஷயமும் கவனிச்சிங்களா? பொதுக்குழு முடிந்த மறுநாள் வந்த முரசொலில ஸ்டாலினை வாழ்த்தி வந்த விளம்பரங்கள் எதுலயும் உதயநிதி படம் இல்லை. அது மட்டுமல்ல, அன்னைக்கு முரசொலில ஒரே ஒரு இடத்துலதான்…அதுவும் தூரமா நிக்கிற மாதிரி…உதயநிதி படம் வந்தது. அதற்கு அடுத்த நாள் வந்த முரசொலி விளம்பரங்கள்லயும் உதயநிதி படம் இல்ல. எல்லாத்துலயும் உதயநிதி படம் வைக்கிறவங்க. கட்சிப் பத்திரிகைல வர்ற விளம்பரங்கள்ல ஏன் தவிர்க்கிறாங்கனு தெரியல”

”ரொம்ப புகழ்றாங்கனு உதயநிதியே வெட்கப்பட்டு வேண்டாம்னு சொல்லியிருப்பாரு”

”முரசொலில இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கு. ஸ்டாலின் தலைவர் பொறுப்பேற்றப் பிறகு பல கட்சித் தலைவர்கள் வாழ்த்து சொல்லியிருந்தாங்க. அன்னைக்கு வந்த முரசொலில கே.எஸ்.அழகிரி, வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர்கள்… ஏன் பாமக ராமதாஸ் வாழ்த்துகூட வந்தது. ஆனா, விசிக திருமாவளவன் வாழ்த்து வரவில்லை. அதுமட்டுமில்ல, திருமாவளவன் நேர்ல போய் ஸ்டாலினை வாழ்த்திட்டு வந்தார். மறுநாள் முரசொலில அந்த செய்தியோ படமோ இல்லை. இது ஏதோ செய்தி சொல்லுதுனு சொல்றாங்க”

“கூட்டணி மாறப் போகுது போல….சரி, தேவர் குருபூஜைல கலந்துக்க பிரதமர் மோடி வருகிறாராமே?”

“ஆமாம். ஏற்பாடு பண்ணவர் எடப்பாடியால் நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் மைத்ரேயன். பிரதமர் மோடி வரவேண்டும் என்று திட்டமிட்டது ஓபிஎஸ் என்கிறார்கள். தேவர் குருபூஜைக்கு மோடி வந்தால் முக்குலத்தோர் வாக்குகளை முழுவதுமாக எடுத்துவிடலாம் என்று ஓபிஎஸ் தரப்பிலிருந்து பாஜக டெல்லி மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதை முன்னின்று நடத்தியவர் மைத்ரேயன். இந்தக் கடுப்பினால்தான் எடப்பாடி அவரை அதிமுகவிலிருந்து நீக்கினார் என்கிறார்கள்”

“தேவர் குருபூஜையின்போது தங்கக் கவசத்தை யாரிடம் கொடுப்பார்கள்.

ஜெயலலிதா வழங்கிய கவசத்தை அதிமுக உடைஞ்சி இருக்கிற நிலையில யார்கிட்ட கொடுப்பாங்க?”

“ஜெயலலிதா கொடுத்த தங்கக் கவசம் குருபூஜையின்போது மட்டும் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு மற்ற நாட்களில் மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும். இந்த முறை அதை அதிமுக சார்பா ஓபிஎஸ் வாங்கிடுவார்னு சொல்றாங்க. அவர்தான் பொருளாளர்னு அவர்கிட்ட கொடுத்துருவாங்கனு பேச்சு இருக்கு. ஆனா இப்ப அவருக்குப் பதில் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக எடப்பாடி பழனிசாமி நியமிச்சிருக்கார். 2017ல இப்படிதான் ஒரு சிக்கல் வந்தது. ஓபிஎஸ்ஸும் தினகரனும் தங்க கவசத்தை வாங்க போட்டிப் போட்டாங்க. ஆனா ரெண்டு பேருக்கும் கொடுக்காம குருபூஜை நடத்தும் பொறுப்பாளரிடம் கொடுக்கப்பட்டது. அதே மாதிரியும் இப்போது நடக்கலாம்”

“மைத்ரேயன் மீண்டும் முன்னணிக்கு வரார் போல”

“ஆமாம். அதுக்கு காரணம் பத்திரிகை நடத்தும் கணக்காளர்தானாம். அதிமுக அரசியலை எப்படி புரிந்துக் கொள்வது என்பதில் டெல்லி பாஜகவுக்கு குழப்பமாக இருக்கிறது. மீண்டும் கணக்காளரை கேட்டிருக்கிறார்கள். அவர் மைத்ரேயனை கைகாட்டி விட்டார் என்கிறார்கள்”

“மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மயிலாப்பூர் மார்க்கெட்ல காய்கறியெல்லாம் வாங்கி இருக்காரே?”

“நாடாளுமன்றத் தேர்தல்ல தென்சென்னை தொகுதியில் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார்னு ஒரு பேச்சு இருக்கு. அதுக்கான முன்னோட்டமா இதை காவிக் கட்சிக்காரங்க பாக்கிறாங்க. இது மட்டும் இல்லாம உள்ளூர் கட்சி பிரமுகர்கள் கிட்ட தென்சென்னை பற்றிய விவரங்களை நிர்மலா சீத்தாராமன் கேட்டிருக்காராம். அதேமாதிரி தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில இதுவரைக்கும் ஜெயிச்சவங்களோட விவரங்களையும் சேகரிச்சுட்டு இருக்காராம். அதே நேரத்துல தெலங்கா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த தொகுதியில போட்டியிட வாய்ப்பு இருக்கறதாவும் சொல்றாங்க.”

”அவர் கவர்னரா இருக்காரே”

”காலங்கள் மாறலாம். கவர்னர்கள் அரசியலுக்கு வரலாம்”

“ஆமா, நம்ம டிஜிபி திடீர்னு ஃபேஸ்புக்ல, ‘இங்கு யாரும் நிரந்தரமில்லை; இதை புரிந்து கொண்டால் நீங்கள் நிம்மதியாவீர்கள் – Nobody is permanent here; if you understand this you are fine.’ என்று போட்டிருந்தாரே..என்ன அர்த்தமாம்? அவர் அதிருப்தில இருக்கிறாரா?”

“விசாரிச்சேன். அப்படிலாம் எதுவும் இல்லை, எப்பவும் மனசை தெம்பா வச்சுக்க ஏதாவது ஒரு வாசகம் எழுதுவார் அதுமாதிரிதான்னு சொல்றாங்க. இன்னொரு விஷயம் சொல்றேன் கேட்டுக்குங்க..ஆனா யாரு என்னனு கேக்காதிங்க”

”என்ன கண்டிஷன்லாம் போடுற”

“வெளிநாடு போன அரசியல் தலைவருக்கு தன் உடல்நிலை பத்தி ரொம்ப கவலை வந்துடுச்சாம். முக்கியமா அவருக்கு பிபி அதிகம் இருக்கிறது. அதுக்கான மாத்திரைகள் சாப்பிட்டுக்கிட்டு இருக்காரு. அலைச்சல் வேற. கம்ப்ளீட்டா செக்கப் பண்ணிக்கலாம்னுதான் அங்க போயிருக்காரு. முழு செக்கப் முடிஞ்சதும் தெம்பா திரும்பி வருவாரு”

“ஆளு யாருனு சொல்ல மாட்டியா…பரவாயில்லை நான் அண்ணாமலையார்கிட்ட வேண்டி கேட்டுக்கிறேன்” என்றதும் சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...