No menu items!

உம்மன் சாண்டி! – தமிழ் எழுத்தாளர்கள் பார்வையில்

உம்மன் சாண்டி! – தமிழ் எழுத்தாளர்கள் பார்வையில்

கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி நேற்று காலமானார். அவரைப் பற்றி தமிழ் எழுத்தாளர்களின் நினைவுக் குறிப்புகள் இங்கே…

உண்மையான எங்க வீட்டுப் பிள்ளை

எழுத்தாளர் ரமணன்

1980களின் தொடக்கத்தில் நான் திருவனந்தபுரத்தில் பணியிலிருந்த போது அப்போது கேரள அரசில் நிதியமைச்சராக இருந்த உம்மன் சாண்டியை பத்திரிகைக்காக பேட்டி காண விரும்பினேன். அவரது மனைவி மரியம்மா என்னுடன் வங்கியில் பணியிலிருந்தார். அவர் மூலம் சந்திப்பு எளிதானது.

“நாளை காலையில் பிரேக்பாஸ்ட்க்கு வந்துவிடச் சொன்னார்” என்று தகவல் தந்த மரியம்மா, “உங்ககளுக்காக என்ன செய்யட்டும்?” என்றார். “அமைச்சர் வழக்கமாக என்ன சாப்பிடுவாரோ அதுவே போதும்” என்றேன்.

அந்த ஞாயிறு காலை அவர் வீட்டிற்கு போய் பேசிக்கொண்டிருந்தபோது வந்த காலை உணவு புழுங்கலரிசி கஞ்சி, வேகவைத்த ஒரு நேந்திர வாழைப்பழம்.

உணவு மட்டுமில்லை மனிதரே மிக எளிமையானவர். நேர்மையானவர். அரசுக் காரை அவர் மனைவி பயன்படுத்தக்கூடாது; உறவினர் யாரும் வேலை கேட்டு வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள்.

1970 முதல் 2021 வரை, புதுப்பள்ளியிலிருந்து தொடர்ந்து பன்னிரண்டு முறை வெற்றி பெற்றவர். நான் சென்றிருந்தபோது மூன்றாவது முறை வென்றிருந்தார்.

“எப்படி உங்களால் ஒரே தொகுதியிலேயே மூன்று முறை ஜெயிக்க முடிகிறது” என்று கேட்டபோது “நாளை வாருங்களேன். நான் கிராமத்துக்குப் போகிறேன்” என்று அழைத்தார். புதுப்பள்ளி என்பது கோட்டயம் மாவட்டத்தில் இருக்கும் கிராமங்கள் அதிகமுள்ள தொகுதி.

காலை 7 மணியிலிருந்து ஓவ்வொரு வீடாகச் சென்றார். கட்சி தொண்டர்கள் படையெல்லாம் கிடையாது. உள்ளூர் கட்சிகாரர்கள் 5 பேர் பிளஸ் நான் மட்டுமே. எல்லா வீடுகளிலும் நேராக நுழைந்து இருப்பவர்களை பெயர் சொல்லி விசாரித்தார். வெளியூரிலிருக்கும் மகன், வெளிநாட்டிலிருக்கும் மகள் என்று ஒரு உறவினர் போல விசாரித்துப் பேசிக்கொண்டிருந்தார். சில வீட்டில் பெரியவர்கள் இவரை மோனே (மகனே) என்று அழைத்தார்கள். அன்று இரவு 8 மணி வரை பல வீடுகளுக்கு சலிக்காமல் விஜயம். காபி சாப்பாடு, ஓய்வு எல்லாமே அந்தந்த வீட்டு திண்ணைகளில் தான். பலருக்கு என்னை “நம்ம சகா- பத்திரக்காரன்” என்று அறிமுகப்படுத்தினார்.

பல குடும்பத்தினரிடம் அவரைக் குறித்து கேட்டபோது, “மந்திரி நங்களோட மகனனாண்ணு” என்று பெருமிதம் பொங்கச் சொன்னார்கள். (பின்னாளில் தான் எம்ஜிஆர் எங்க வீட்டுப் பிள்ளையாகிறார்) நீண்ட நாட்களுக்கு பின் திருவனந்தபுரத்தில் வீடு கட்டிய போது அழைத்திருந்தார். வீட்டின் பெயர் ‘புதுப் பள்ளி.’

கேரள, ஆந்திர முதல்வர்களைச் சந்தித்து எழுதியிருக்கிறேன். ஆனால், உம்மன் சாண்டி சந்திப்பு மறக்க முடியாதது. அவ்வப்போது தொடர்பிலிருந்த நல்ல நண்பர். பெங்களூரு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது. தொடர்பு கொண்டேன். அவரால் பேச முடியவில்லை என்று அவர் மனைவி மரியம்மா அழுதுகொண்டே சொன்னபோது மிக வருந்தினேன். பதவி, கட்சி, அரசியல் இவைகளையெல்லாம் தாண்டி உம்மன் சாண்டி ஒரு நல்ல மனிதர்.

க்ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ

எழுத்தாளர் இரா. முருகன்

2005 ஜூலை 25இல் நடந்த சம்பவம்…

கேரளத் தலைநகரான பள்ளிகொண்டபுரத்தில் (அதாவது அனந்தையில்) கேரளத்தை ஆளும் ஐக்கிய ஜனாதிபத்ய முன்னணியின் கூட்டத்திற்கு முதல்வர் உம்மன் சாண்டி கொஞ்சம் தாமதமாக வந்தார். அதாவது, மதியச் சாப்பாடு எல்லாம் முடிந்தபிறகு.

“சாண்டி வந்திருக்கேன்” – பசிக் குரல்.

“ஐயோ சேட்டா, உச்சய்க்கு ஊணு எல்லாம் தீர்ந்து போச்சே.”

“சரி, சாப்பாட்டுப் பாத்திரம் எங்கே? அதில் ஏதாவது மிச்ச மீதி இருந்தால் வழிச்சு எடுத்து வந்து போடுங்கப்பா.”

போட்டார்கள்.

படு காஷுவலாக வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நின்றபடியே அந்த மிச்சம் மீதியை உண்டார் முதல்வர்.

அவ்வளவு எளிய மனிதர் சாண்டி சார்.

இந்தச் செய்திக்கு அன்றைய மாத்ருபூமி கொடுத்திருக்கும் பழமொழித் தலைப்பு: ‘க்ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ’ (கோவில் காவல்காரனுக்குச் சோற்றுச் சட்டியைச் சுரண்டித்தான் சாப்பாடு).

ஜெயலலிதாவும் உம்மன் சாண்டியும்

எழுத்தாளர் வீ.ந.சோ

தினத்தந்தி நாளிதழ் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வந்தார். தீவிர சிகிச்சை பிரிவின் உள்ளே நுழைய முயன்ற போது பணியில் இருந்த மருத்துவர் சொன்னார்: “தயவுசெய்து காலணிகளைக் கழற்றி விட்டுச் சொல்லுங்கள்.” முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோபம் வந்தது. ஒன்றும் சொல்லாமல் காலணியைக் கழற்றிவிட்டு உள்ளே சென்றார். அன்று நள்ளிரவு அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு போடப்பட்டது. பிணையில் வருவது அவருக்குப் பெரும்பாடாய் முடிந்தது.

கேரளா முதலமைச்சராக இருந்தவர் உம்மன் சாண்டி… ஒரு ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்கு சென்றார். உள்ளே கூட்டமாக இருந்தது. வாசலில் உட்கார்ந்து கொண்டார். அவரைச் சுற்றி ஏராளமான செருப்புகள். படத்தோடு செய்தி வந்து.

சட்டமன்றத்தில், “மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா” என்று ஒரு உறுப்பினர் கூறிவிட்டார். ஜெயலலிதா பெயரைக் குறிப்பிட்டதால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. அவை குறிப்பில் இருந்து அந்த சொல் நீக்கப்பட்டது.

கேரள முதலமைச்சராக உம்மன் சான்டி இருந்தபோது, ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தார். “உம்மன் சாண்டி” என்று பெயர் சொல்லி அழைத்த குரல் கேட்டது. முதலமைச்சர் திரும்பிப் பார்த்தார். அழைத்தது ஒரு ஏழு வயது சிறுமி. சிறுமியின் அருகில் சென்ற முதலமைச்சர், “என்ட மோளே?” என்று அந்த குழந்தையிடம் கேட்டார். “என்னுடைய நண்பன் அப்புகுட்டன் ரொம்ப ஏழை. அவனுக்கு வீடு இல்ல. ஒரு வீடு கட்டி தாங்க” என்று அந்த பெண் சொல்கிறார். கேட்ட முதல்வர் அப்புகுட்டன் குடும்பத்தாருக்கு ஒரு வீடு கட்டி தந்தார்.

இரண்டு முறை முதலமைச்சர். 51 ஆண்டு காலம் சட்டப்பேரவை உறுப்பினர். பெருவாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...