இளையராஜாவின் சுயசரிதைப் படம் வெளியாக இருக்கிறது. இதற்காக தனுஷ் இளையராஜாவை இரண்டு முறை சந்தித்து பேசியும் விட்டார். தனுஷ் அப்படத்தை இயக்குவதோடு, இளையராஜாவாகவும் நடிக்க இருக்கிறார் என்பதால், இளையராஜாவும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.
இளையராஜாவின் இளமைக் காலம் முதல் தற்போது வரையிலான சம்பவங்களை எடுக்கவேண்டும் என்பதால், திரைக்கதைக்கு அதிக காலம் பிடிக்கிறதாம். இதில் எதைக் காட்டுவது எதை விடுப்பது என்ற குழப்பம் அதிகமிருப்பதால்தான் இந்த தாமதம்.
இந்தப் படத்தை கனெக்ட் மீடியா என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்திருக்கிறது. இந்த வருடம் எழுத்து வேலைகளை அதிகாரப்பூர்வமாக தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எவ்வளவு விரைவாக ஷூட்டிங்கை தொடங்க முடியுமோ அவ்வளவு துரிதமாக ஷூட்டிங்கை முடித்து 2025-ல் படத்தை வெளியிடும் திட்டமிருக்கிறதாம்.
இந்நிலையில் இளையராஜா தனது வாழ்க்கை நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார். அன்னக்கிளியில் ஆரம்பித்த இவரது இசை சாம்ராஜ்ஜியத்தில் 1000-க்கும் அதிகமான படங்கள், 7000-க்கும் அதிகமான பாடல்கள் இருக்கின்றன. இந்த மாதிரி இசையமைக்கும் போது இளையராஜா எழுதிய பல மியூசிக் நோட்ஸ் யாருக்கும் தெரியாமல் காணாமல் போயிருக்கிறதாம். அந்த மியூசிக் நோட்ஸை யார் திருடியது, எப்படி திருடினார்கள் என்பது குறித்து இதுவரையில் இளையராஜாவால் கண்டுபிடிக்கவே முடியவில்லையாம்.