No menu items!

இலக்கிய நோபல் பரிசு: யார் இந்த ஜான் பாஸ்?

இலக்கிய நோபல் பரிசு: யார் இந்த ஜான் பாஸ்?

உலகளவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருதாக மதிக்கப்படுவது நோபல் பரிசு. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 2-ம் தேதி முதல் மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து தற்போது இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே எழுத்தாளர் ஜான் பாஸ் இந்த ஆண்டு நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த ஜான் பாஸ்?

நார்வே நாட்டின் ஹாஜேசண்ட் பகுதியில் கடந்த 1959-ம் ஆண்டில் பிறந்தவர், ஜான் பாஸ். 7 வயதில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். ஆனால், அந்த விபத்துதான் அவரது வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி பிற்காலத்தில் எழுத்தாளராக உருவெடுக்கச் செய்தது. இப்போது நோபல் பரிசையும் வென்றுள்ளார்.

நோர்வேஜியன் நிநோர்ஸ்க் மொழியில் எழுதி வரும் ஜான் பாஸின் முதல் நாவல் ‘ரெட்- பிளாக்’ கடந்த 1983ஆம் ஆண்டில் வெளியானது. தொடர்ந்து நாவல், கவிதை, கட்டுரை, நாடகம் என 70-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். உலகளவில் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் ஜான் பாஸின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. முன்னதாக, டெல்லி டெலிகிராப் நாளிதழ் வெளியிட்ட உலகின் 100 அறிவுஜீவிகளில் ஜான் பாஸ் 83ஆவது இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசுக்கு ஜான் பாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக நோபல் விருதை வழங்கும் ஸ்வீடிஷ் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனித உணர்வுகளை தனது படைப்புகளின் மூலம் தத்ரூபமாக வெளிப்படுத்தியவர் ஜான் பாஸ். இதன் காரணமாக அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது” என்று கூறப்பட்டிருக்கிறது.

நோபல் பரிசு கிடைத்திருப்பது பற்றி ஜான் பாஸ் கூறும்போது, “மிகுந்த மகிழ்ச்சி. இது எனக்கான விருது கிடையாது. இலக்கிய உலகத்துக்கான விருது” என்று தெரிவித்துள்ளார்.

நம்மூரில் நாடகத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆனால், உலகளவில் இலக்கிய படைப்புகளுக்கு இணையாக நாடகப் படைப்புகளும் மதிக்கப்படுகின்றன என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது ஜான் பாஸ் நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜோன் போஸ் நாடகத்துக்காக நோபல் பரிசு பெற்றிருந்தாலும் அவரது படைப்புகளில் சிறந்ததாக ‘செப்டோலோஜி’(Septology, 2021) நாவல்தான் குறிப்பிடப்படுகிறது. மூன்று பாகங்களாக வெளிவந்துள்ள இந்த நாவல் மனிதனின் நிலையை, நடத்தையை விளக்கும் அற்புதமான நாவலாக விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது. ‘தி அதர் நேம்’ (2020), ‘ஐ இஸ் அனதர்’ (2020), ‘ஏ நியூ நேம் (2021) ஆகியவையும் ஜோன் போஸ்ஸின் படைப்புகளில் முக்கியமானவை.

நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் தேர்வு பெற்றவர்கள் நோபல் பரிசு பெற அழைக்கப்படுவார்கள். இதில் அமைதிக்கான பரிசு மட்டும் ஆல்பரட் நோபலின் விருப்பப்படி, ஒஸ்லோவில் வைத்து வழங்கப்படும்.

முன்னதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த ஆண்டு அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...