ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கோருவதற்காக இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, கனிமொழி எம்.பி., திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், என்.ஆர். இளங்கோ, பல்லாவரம் இ. கருணாநிதி எம்எல்ஏ உள்ளிட்டோர் வரவேற்றனர். முதல் கட்டமாக இன்று மாலை அண்ணா அறிவாலத்துக்கு சென்று திமுகவின் ஆதரவை அவர் கோரவுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 2-ம் தேதி சென்னை வருகிறார். அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து அவர் ஆதரவு கேட்கவுள்ளார். அன்று புதுச்சேரியிலும் அவர் ஆதரவு திரட்டுகிறார்.
அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 அளிக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்து இருந்தது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இன்றுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், வரும் ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியில் எம்எஸ்எம்இ மிகப்பெரிய தூண்: பிரதமர் மோடி
இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் 2022-ம் ஆண்டுக்கான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவின் தயாரிப்புகள் புதிய சந்தைகளை அடைய நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்(எம்எஸ்எம்இ) துறை வலுவாக இருப்பது மிகவும் முக்கியம். எம்எஸ்எம்இ இந்தியாவின் வளர்ச்சி பயணத்தின் மிகப்பெரிய தூண். இந்த துறையில், புதிய கொள்கைகளை உருவாக்கி முடிவுகளை அரசு எடுத்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை இந்த துறை கொண்டுள்ளது. இந்த துறையை வலுப்படுத்த கடந்த 8 ஆண்டுகளில் அரசாங்கம் 650 சதவீதத்திற்கும் மேலாக பட்ஜெட்டை உயர்த்தி உள்ளது” என்றார்.
இந்திய ஹாக்கி வீரர்களுக்கு கொரோனா
இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் இரண்டு வீரர்கள், மூன்று துணை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் வீரர்கள் மற்றும் குழுவினருக்கு நேற்று காலை ஆடி-பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் தொற்று உறுதியானவர்களில் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக தற்போது வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். இந்த முகாம் ஜூலை 23 அன்று நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து காமன்வெல்த் தொடரில் பங்கேற்ற இந்திய ஆக்கி அணி பர்மிங்ஹாம் செல்கிறது. தற்போது 2 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது.