இந்து மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் ஆ. ராசாவை கண்டித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி அமைப்பின் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதில், பீளமேடு புதூர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி பேசும்போது, “ஆ.ராசா தைரியம் இருந்தால் காவல் துறையினர் பாதுகாப்பு இல்லாமல் கோவையில் கால் எடுத்து வைக்கட்டும் பார்க்கிறேன்” என்று பேசினார்.
பாலாஜி உத்தமராமசாமியின் இந்த பகிரங்க மிரட்டல் தொடர்பான பேச்சு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும், தமிழக முதல்வர், தந்தை பெரியார், ஆ.ராசா எம்.பி.,. குறித்து பேசி, மிரட்டல் விடுத்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தபெதிகவினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். மேலும், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாலாஜி உத்தம ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உதவி ஆய்வாளர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பாலாஜி உத்தம ராமசாமி மீது பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிந்து இன்று (செப் 21) காலை அவரை கைது செய்து, பீளமேடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.
அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம்: பாஜக மாவட்ட தலைவர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்
பாஜக மாநகர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டில், ” வெறுப்பை உமிழும் ஆ.ராசாவை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமனை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ஆ.ராசாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இபிஎஸுக்கு ஆதரவு – அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து
அதிமுக கட்சி ஓபிஎஸ், இபிஎஸ் என இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வந்த நிலையில், கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டில் ‘ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாகவும், முழு ஆதரவு அளிப்பதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ‘அபிடவுட்’ ( ஆதரவுக்கான உறுதிமொழி ) பெறப்பட்டு வருகிறது.
நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தில் சோதனை
‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் மக்களிடையே பரிட்சயமானவர் நடிகர் சூரி. இவருக்கு பரோட்டா சூரி என்ற பெயரும் உள்ளது. தற்போது முன்னணி காமெடியனாக நடித்து வருகிறார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த நடிகர் சூரி, மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ் லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன் என்ற பெயரில் உணவகங்கள் நடத்தி வருகிறார். அண்மையில்தான் இந்த ஹோட்டல்கள் தொடங்கப்பட்டன. இந்த ஹோட்டல்களின் தலைமையகம் மதுரை காமராஜர் சால தெப்பக்குளம் அருகே உள்ள அம்மன் உணவகம் ஆகும். இந்நிலையில், இந்த அம்மன் உணவகத்தில் வணிக வரித் துறையினர் நேற்று மாலை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்ததாகவும், இது குறித்து 15 நாட்களுக்குள் நடிகர் சூரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என வணிக வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகர் போண்டாமணியை காப்பாத்துங்க: நடிகர் பெஞ்சமின் கண்ணீர் கோரிக்கை
பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ (1991) படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர், போண்டாமணி. தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சில தொலைக்காட்சி தொடர்களிலும், கேம் ஷோக்களிலும் நடித்துள்ளார். நடிகர் வடிவேலுவுடன் நடித்த காமெடி காட்சிகள் மூலம் புகழ்பெற்றார். இதனிடையே, கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் போண்டாமணி அனுமதிக்கப்பட்டார் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோவில், “அண்ணன் போண்டா மணி அவர்களுக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது. உயிருக்குப் போராடும் அவருக்கு இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் அவரது மேல் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நாடுவிட்டு நாடு வந்து, இலங்கையில் இருந்து தமிழகம் வந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நடிகராகி, திருமணம் செய்தி இரு குழந்தைகளைப் பெற்று தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவருக்கு காப்பாற்ற வேண்டும். இலங்கையிலிருந்து அனாதையாக வந்தவர். அனாதையாகவே போகக் கூடாது. தயவு செய்து உதவி பண்ணுங்க ப்ளீஷ்’ என கேட்டுள்ளார்.
இலவச ரொட்டி இயந்திரம்: துபாய் முழுவதும் பொருத்தம்
ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கட்டட வேலை, கார் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், ‘டெலிவரி’ ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். குடும்பத்தினருக்கு பணத்தை சேமிப்பதற்காக இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்றுவேளை சாப்பிடாமல் பட்டினியுடன் நாட்களை கழிக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையை மாற்ற வேண்டும் என, ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரதமர் ஷேக் முகமது பின் கடந்த ஆண்டு தெரிவித்தார்.
இதன் ஒருபகுதியாக, துபாயில் இலவச உணவு அளிக்கும், ‘வெண்டிங் மிஷின்’ எனப்படும், தானியங்கி இயந்திரங்களை நகரின் பல்வேறு பகுதிகளிலும் அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது. இந்த உணவு இயந்திரங்கள் கடந்த 17ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன. துபாயின், ‘அஸ்வாக்’ மளிகை கடைகளின் வாயிலில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், அரபி ரொட்டி மற்றும், பிங்கர் ரோல் ஆகிய இரண்டு வகை உணவுகள், சுடச்சட தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச உணவு திட்டத்துக்கு தனிநபர்களும் நன்கொடை அளிக்கலாம் என துபாய் அரசு தெரிவித்துள்ளது.