தமிழகத்தில் காவி பெரியது, வலியது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
கோவையில் உள்ள தமிழ் கல்லூரியில் இன்று நடந்த நிகழ்ழ்சியில் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழின்றி ஆன்மீகம் கிடையாது. ஆன்மீகமின்றி தமிழ் கிடையாது என்பதை மடங்கள் போதிக்கின்றன. அந்தந்த மடங்களின் விதிகளை மதிக்கிறேன். நான் சென்றாலே சிலவற்றை மாற்றி மாற்றி எழுதுகிறார்கள். அரசு மடாலயங்களை அழைத்து பேசும் போது அவர்களுக்கான இருக்கைகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்பது பக்தையாக எனது கோரிக்கை. காவி ஆன்மீகத்தை குறிக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் காவி தமிழகத்தில் பெரியது. வலியது.
நான் இவர்கள் அணியும் காவியையும் , தேசிய கொடியில் உள்ள காவியையும் எல்லா காவியையும்தான் சொல்கிறேன். ஆதீன மடங்களுக்கு நம்மால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும்.” என்றார்.
பெட்ரோல் விலை விவகாரம் – பிரதமருக்கு முதல்வர் பதில்
பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி முலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், “பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
தமிழக சட்டசபையில் இன்று இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு சரிந்தபோது, அதற்கேற்றாற்போல பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்காமல், அந்த எண்ணெய் விலை வீழ்ச்சியால் கிடைத்த உபரி வருவாய் முழுமையும் தனதாக்கிக் கொண்டது மத்திய அரசு.
சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்பதால் வரிகளைக் குறைத்து வேடம் போட்டது மத்திய அரசு.
மாநில அரசு தேர்தல்கள் முடிந்த பின்பு, அடுத்த வாரம் முதல் மடமடவென விலையை முன்பு இருந்ததை விட உயர்த்தியது. மத்திய அரசு குறைப்பதற்கு முன்பாகவே, பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியைக் குறைத்தது தமிழக அரசு. இவையனைத்தும் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். யார் பெட்ரோல் விலையைக் குறைப்பதில் உண்மையிலேயே முனைப்பு காட்டுகிறார்கள்; யார் பெட்ரோல் விலையைக் குறைப்பது போல நடித்து பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள் என்பதை மக்களுடைய முடிவிற்கே நான் விட்டு விடுகிறேன்” என்றார்.
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீப்பிடித்த கட்டிடத்தை இடித்துவிட்டு ரூ.65 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதைத் தொடர்ந்து நடந்த விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ கட்டிடத்தை இடித்துவிட்டு திட்டமதிப்பீடு தயார் செய்யுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே தீப்பிடித்த கட்டிடத்தை இடித்துவிட்டு ரூ. 65 கோடியில் புதிய கட்டிடம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.
கோயம்பேட்டில் ரூ.2 கோடியில் பணியாளர்கள் ஓய்வுக்கூடம், சிறுண்டியகம் திறப்பு
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பணியாற்றிவரும் தினக்கூலி பணியாளர்களின் பயன்பாட்டிற்காக கோயம்பேட்டில் 5,419 சதுர அடி கட்டடப் பரப்பளவில் 2 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.