No menu items!

நியூஸ் அப்டேட்: தேசிய கட்சி தொடங்கினார் தெலுங்கானா முதல்வர்

நியூஸ் அப்டேட்: தேசிய கட்சி தொடங்கினார் தெலுங்கானா முதல்வர்

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். 2024ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை தமது தலைமையின் கீழ் ஒருகிணைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதற்காக இன்று பாரத ராஷ்டிரிய சமிதி என்ற புதிய தேசிய கட்சியை அவர் தொடங்கியுள்ளார். ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா பவனில் நடைபெற்ற விழாவில் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, தமிழ்நாட்டில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், “அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் அந்தந்த மாநில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து பாரத ராஷ்டிர சமிதி கட்சி போட்டியிடும்” என்று தெரிவித்திருந்தார். இதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவர் தங்க கவசத்தை பெறப்போவது யார்? ஓபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன் தனித்தனியாக மனு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2014-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, பசும்பொனில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அணிவிக்க ரூ.3.5 கோடி மதிப்பில் 13 கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட தங்க கவசத்தை அதிமுக சார்பில் வழங்கினார். இந்த தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவின் போது நினைவிடத்தில் உள்ள தேவர் சிலையில் பொருத்தப்படும். விழா முடிந்ததும் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவில் உள்ள லாக்கரில் கொண்டு வந்து தங்க கவசத்தை வைப்பது வழக்கம். இதற்குரிய முழு அதிகாரம் அதிமுக பொருளாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அதிமுக கட்சியில் நிகழ்ந்துவரும் குழப்பம் காரணமாக, இந்த ஆண்டு தேவரின் தங்க கவசத்தை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி ஓபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன் இருவரும் தனித்தனியாக மனுதாக்கல் செய்துள்ளனர்.

இதுபோல் 2017-ம் ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது மதுரை வங்கியில் இருந்து தங்க கவசத்தை பெறுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும், டி.டி.வி. தினகரன் தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இரு தரப்பினரும் வங்கிக்கு வந்து உரிமை கொண்டாடிய நிலையில் வங்கி அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திடம் தங்க கவசத்தை ஒப்படைத்து விழா முடிந்ததும் திருப்பி லாக்கரில் வைக்க ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக முயற்சி: அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மின் கட்டணத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக 200 யூனிட்-க்கும் குறைவான மின்சாரம் பயன்படுத்தும் மின் உபயோகிப்பாளர்கள் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதற்கான தொகையை மாநில அரசே ஏற்றுக்கொள்கிறது. இதேபோல் 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் மின் உபயோகிப்பாளர்களுக்கு டெல்லி அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி அரசின் மின் மானியத் திட்டம் குறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா நேற்று உத்தரவிட்டார்.

டெல்லி துணை நிலை ஆளுநரின் இந்த உத்தரவு குறித்து டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆம் ஆத்மியின் இலவச மின்சார உத்தரவாதத்தை குஜராத் மக்கள் மிகவும் விரும்புகின்றனர். அதனால்தான் டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக விரும்புகிறது. டெல்லி மக்களே எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் இலவச மின்சாரத்தை எந்த சூழ்நிலையிலும் நிறுத்த விடமாட்டேன். குஜராத் மக்களுக்கும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். குஜராத்தில் ஆம் ஆத்மி அரசாங்கம் அமைந்தால், அடுத்த ஆண்டு மார்ச் 1 முதல் உங்களுக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.

திருச்சியில் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து நவராத்திரி கொண்டாடிய அகோரிகள்

திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் ஜெய் அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் பயிற்சிபெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் நிர்வகித்து, பூஜைகள் நடத்தி வருகிறார். இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருவது வழக்கம்.

இந்நிலையில், இந்தாண்டு நவராத்திரி விழா தொடங்கிய நாள் முதல் சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெய் அகோரி காளிக்கு குருதி அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அகோரிகள் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு சிறப்பு யாகபூஜை நடத்தினார்கள். இதையடுத்து நள்ளிரவில் நடைபெற்ற மகா ருத்ரா யாகத்தின் போது அகோரி மணிகண்டன் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டு, ருத்ராட்ச மாலைகளை உருட்டியபடி மந்திரங்களை ஓதி நவதானியங்கள், பழவகைகள் உள்ளிட்ட பொருட்களை அக்னி குண்டத்திலிட்டு யாகபூஜை செய்தார். இந்த யாக பூஜையின் போது சக அகோரிகள் டமாராமேளம் இசைத்தும், சிவவாக்கியம் வாசித்தும், சங்கு ஊதியும் மந்திரங்களை ஓதினார்கள். இதில் ஆண் அகோரிகள், பெண் அகோரிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு: மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2022ஆம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கூறுகளை ஒன்றிணைத்து பொருட்களை உருவாக்குதல் மற்றும் உயிரியல்பு வேதியியல் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சிக்காக அமெரிக்காவை சேர்ந்த கரோலின் பெர்டோஸி, டென்மார்க்கை சேர்ந்த மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பேரி ஷார்ப்லெஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...