தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் முதலமைச்சர் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்தையும் (இனிஷியல்) தமிழிலேயே எழுத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த அரசாணையை மேற்கோள் காட்டி பள்ளி கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், “மாணவ-மாணவிகள் தங்கள் பெயரை எழுதும்போது இனிஷியலையும் தமிழிலில் தான் எழுத வேண்டும். பதிவேடுகளிலும் அதை பின்பற்றவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று அதிமுக வழக்கு ஒத்திவைப்பு
அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து செயல்பட முடியாத நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். அதில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுவை பட்டியலிடும்படி, கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குறு கிருஷ்ணகுமார் வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்குத் தள்ளிவைத்தனர்.
சிறை தண்டனை நிறுத்தம்: தீர்ப்பை சட்டரீதியாக சந்திப்போம் என லிங்குசாமி அறிக்கை
நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், ‘எண்ணி ஏழு நாள்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. இந்த கடனை திருப்பிக் கொடுக்காதது தொடர்பான செக் மோசடி வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நேற்று இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. அதே சமயம், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை லிங்குசாமிக்கு வழங்கிய நீதிமன்றம் அதற்கு ஏதுவாக தண்டனையை நிறுத்தி வைத்தது.
இந்த தீர்ப்பு குறித்து இயக்குநர் லிங்குசாமி, ‘‘தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சட்ட ரீதியாகச் சந்திக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி உடற்கூராய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கலானது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியையடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவியொருவர், கடந்த மாதம் 13ம் தேதி அதிகாலை பள்ளியின் தரைதளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து, மாணவி இறப்புக்கு நீதி கேட்டு 17ஆம் தேதி பொதுமக்கள், இளைஞர்கள் பள்ளி முன் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாணவி இறப்பு தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து, பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், மாணவி உடல், கடந்த மாதம் 14ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பின் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணர் மற்றும் அரசு டாக்டர்கள் மூன்று பேர் கொண்ட குழு முன்னிலையில், கடந்த மாதம் 19ஆம் தேதி மறு பிரேத பரிசோதன செய்யப்பட்டது. இதன்பின் மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்ய, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. நீதிமன்ற உத்தரவுபடி, மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த ஜிப்மர் குழுவினர், அதற்கான அறிக்கையை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர்.
பின்லாந்து பெண் பிரதமர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை: பரிசோதனையில் தகவல்
பின்லாந்து நாட்டின் பெண் பிரதமர் சன்னா மரின். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது 34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளம் வயது பிரதமர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கிடையே சன்னா மரின் சர்ச்சை ஒன்றில் சிக்கினார். தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து சன்னா மரின் உற்சாகமாக பாடி, நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதில் அவர் போதை பொருளை உட்கொண்டு குத்தாட்டம் போட்டதாக விமர்சனம் எழுந்தது. இதையடுத்து சன்னா மரினுக்கு கடந்த 19-ந் தேதி போதை மருந்து சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் போதை மருந்து சோதனைகள் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் சன்னா மரின் போதை மருந்து உட்கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சன்னா மரினின் பிரதமர் பதவி தப்பியுள்ளது.