உலகிலேயே அதிக வயதானவர்கள் வாழும் நகரமாக ஜப்பானின் ஒகினாவா நகரம் உள்ளது. இந்த நகரைச் சேர்ந்த பலரும் 100 வயதைக் கடந்து வாழ்கிறார்கள். மற்ற ஊர்களைவிட இங்குள்ள மக்கள் எப்படி நீண்ட நாட்கள் வாழ்கிறார்கள் என்று World Economic Forum என்ற அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது.
ஒகினாவா நகர மக்கள் 100 வயதைக் கடந்து வாழ அவர்கள் கடைபிடிக்கும் 5 விஷயங்கள்தான் காரணம் என்று இந்த ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது World Economic Forum. அப்படி அவர்கள் கடைப்பிடிக்கும் 5 விஷயங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த 5 முக்கிய விஷயங்கள் இவைதான்…
வயிற்றை நிரப்பாதே:
ஒகினாவா நகர மக்கள் எப்போதும் வயிறு நிரம்ப சாப்பிடுவது இல்லை. என்னதான் பசி எடுத்தாலும் 80 சதவீத வயிற்றை மட்டுமே நிரப்புகிறார்கள். எப்போதும் பசித்திருந்தால் நீண்ட நாட்கள் நலமாக வாழலாம் என்பது அவர்களின் முக்கிய பாலிசி.
ஓய்வை விரும்பாதே:
ஒகினாவா நகர மக்கள் சும்மா இருப்பதை விரும்புவதில்லை. ஓய்வாக இருந்தால் தேவையற்ற சிந்தனைகள் வரும். இது நம்மை குழப்பிவிடும் என்பது அவர்களின் கருத்து. அதனால் எப்போதும் ஏதாவது வேலைகளை செய்து தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறார்கள். சுறுசுறுப்பாக இருப்பது மருத்துவ செலவைக் குறைக்கும் என்கிறார்களாம் ஒகினாவா மக்கள்.
கூட்டமாய் வாழுங்கள்:
ஒகினாவா மக்களை தனிமையில் பார்ப்பது அரிது. அவர்கள் எப்போதும் கூடமாக இருப்பதையே விரும்புகிறார்கள். பெரும்பாலும் கூட்டுக்குடும்பமாக வாழும் அவர்கள், பகல் நேரங்களில் சமூக அமைப்புகளை ஏற்படுத்தி ஒருவரோடு ஒருவர் கலந்து பேசுகிறார்கள். ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதுடன் செய்திகளையும் பரிமாறிக்கொள்கிறார்கள். மற்றவர்களுடன் கலந்து பேசுவதால் மனதில் இருக்கும் பாரம் குறையும். கவலைகளும் தீரும் என்பது அவர்கள் கண்டறிந்திருக்கும் உண்மை.
காலத்துக்காக கலங்காதே:
குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பது நல்லது என்றாலும், காலத்தையே கட்டிக்கொண்டு அழக்கூடாது என்பது அவர்களின் கொள்கை. நேரத்தோடு தொடர்ந்து போட்டி போட்டுக்கொண்டு இருந்தால் மன அமைதி போய்விடும். அதனால் தேவையற்ற நோய்கள் வரும் என்கிறாரகள் இந்நகர மக்கள்.
கடவுளை நம்பு:
உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஆற்றல் பிரார்த்தனைக்கு இருப்பதாக நம்புகிறார்கள் ஒகினாவா மக்கள். பிராத்தை ச்ய்யும் நேரத்தில் மனம் லேசாகி, உடல் நலனை மேம்படுத்தும் என்பது தங்கள் வாழ்க்கையில் அவர்கள் கண்டறிந்த உண்மை.