இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் தங்களால் இயன்ற நிதியை வழங்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் வழங்கும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழக மீனவர்களுடன் அண்ணாமலை சந்திப்பு
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, யாழ்ப்பாணத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை சந்தித்துப் பேசினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இலங்கை ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை அவர் சந்திக்க விரும்பினார். இதற்கு அவர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறைக்குச் சென்று தமிழக மீனவர்களை அவர் நேரில் சந்தித்தார். அப்போது அவர்களுக்கு வழங்குவதற்காக உணவு மற்றும் உடைகள் கொண்டு சென்றார். அவற்றை மீனவர்களிடம் நேரில் வழங்கினார்.
உயிரே போனாலும் தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம் – மதுரை ஆதீனம்
“உயிரே போனாலும் தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்துவோம்” என்று மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் கூறியுள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி வரும் மே 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆதீனத்தை பல்லக்கில் அமரவைத்து, பக்தர்கள் சுமந்து செல்வது வழக்கம். இந்நிலையில் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இதற்கு தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள், ஆதீனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வராக பொறுப்பேற்கும்போது ரகசிய பிரமாணம் எடுப்பதுபோலத்தான், பட்டினப்பிரவேசமும் பாரம்பரியமாக நடந்து வருகிறது. அதை தடுத்து நிறுத்துவது வருத்தமளிக்கிறது. முறைப்படி நடப்பதை தடுக்கக்கூடாது. திருஞானசம்பந்தர் பல்லக்கை திருநாவுக்கரசர் சுமந்தார். நான் அந்த மடத்தின் சிஷ்யன். தருமபுரத்தில் நான் படித்துள்ளேன். தருமபுரம் ஆதீனம்தான் எனக்கு சோறு போட்டு வளர்த்தது. அந்த ஆதீனப் பல்லக்கை நானே தோளில் சுமப்பேன். என் உயிர் போனாலும் பரவாயில்லை, நடத்தியே தீர்வோம்” என்றார்.
காவல் நிலையத்தில் இரவில் விசாரணை செய்யக்கூடாது – டிஜிபி உத்தரவு
காவல் நிலையங்களில் இரவு நேரங்களில் கைதிகளிடம் விசாரணை நடத்தக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 2 விசாரணைக் கைதிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்நிலையில் அனைத்து மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு, “விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது. கைது செய்யப்பட்டவர்களை மாலை 6-மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும்” என்று வாய்மொழியாக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
புடினுக்கு புற்றுநோய் சிகிச்சை?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதனால் சிறிது காலத்திற்கு அதிகாரத்தை, தனது நம்பிக்கைக்குரிய நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் நிகோலய் பத்ருஷேவிடம் அவர் ஒப்படைக்க உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே நேரத்தில் நீண்ட நாட்களுக்கு தனது அதிகாரத்தை ஒப்படைக்க புடின் விரும்பவில்லை. அதனால் நாட்டின் அதிகாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் பத்ருஷேவின் கைகளில் இருக்காது என்று கூறப்படுகிறது.