நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். இவருடன் மகள் பிரியங்காவும் சென்றிருந்தார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல்காந்தியிடம் கடந்த 13, 14, 15, 20 மற்றும் 21-ம் தேதிகளில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் சோனியா காந்தி அப்போது ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராவதை சில வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கு சோனியா காந்தி கடிதம் எழுதினார்.
இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக இன்று சோனியா காந்தி அமலாக்கத்துறை முன் நேரில் ஆஜரானார். இவருடன் மகள் பிரியங்கா உடன் சென்றனர். அமலாக்கத் துறை பெண் உதவி இயக்குனர் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோனியாவிடம் விசாரணை நடத்தினர். வரும் 25-ம் தேதி அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்திக்காக போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் கைது
சோனியா காந்திக்காக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீஸார் கைது செய்தனர்.
நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். பீகார் தலைநகர் பாட்னா உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இப்போராட்டங்களில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆளுநருடன் தமிழக பாஜக தலைவர்கள் சந்திப்பு
சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் இன்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆளுநரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. சந்திப்புக்கு பின்னர், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “200 பேருக்கு மேல், சட்டத்திற்கு புறம்பாக தீவிரவாதிகளுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உயர் அதிகாரியாக இருக்கக்கூடிய டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்டோரை பணியிலிருந்து நீக்கிவிட்டு, விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்துகிறது” என்றார்.
அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் மாயம்
அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் மாயமாகி உள்ளதாக அக்கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டதை அடுத்து சி.வி. சண்முகம் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளே ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தனர். அலுவலகம் முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன. அனைத்து அறைகளின் கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்தன. மேஜைகள், நாற்காலிகள் நொறுக்கப்பட்டு சேதம் அடைந்திருந்தன. கம்ப்யூட்டர்களும் உடைக்கப்பட்டு இருந்தன. கீழ் தளத்தில் முக்கிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளின் அலுவலக அறைகளில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. ஆண்டு மலர் மற்றும் பொன் விழா புத்தகங்களின் ஆவணங்கள், பைல்கள் சிதறி கிடந்தன.
இதுகுறித்து அதிமுக அலுவலக மேனேஜர் தர்மா கூறும்போது, அலுவலகத்தின் 3-வது மாடியில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பொருட்களை காணவில்லை. கம்ப்யூட்டரில் இருந்த ஹார்டு டிஸ்க், கணக்கு விவர ஆவணங்கள் அனைத்தும் மாயமாகி இருக்கிறது என்றார்.
இத்தாலி பிரதமர் ராஜினமா
பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியா டிராகி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2021-ம் ஆண்டு அதிபர் மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தாலியில் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால், பிரதமருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் இதனைக் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. அதேவேளையில், தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று மரியா டிராகி கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அந்நாட்டில் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது.