No menu items!

நியூஸ் அப்டேட்: பாலியல் தொழில் சட்டபூர்வமானது – உச்ச நீதிமன்றம்

நியூஸ் அப்டேட்: பாலியல் தொழில் சட்டபூர்வமானது – உச்ச நீதிமன்றம்

பாலியல் தொழில் சட்டபூர்வமானது; போலீசார் அதில் தலையிடக்கூடாது. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிபதி எல். நாகேஸ்வரராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. அதில், “பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரிமை உண்டு. வயது மற்றும் ஒப்புதலின் அடிப்படையில் குற்றவியல் சட்டம் அனைத்து வழக்குகளிலும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். பாலியல் தொழிலாளி வயது முதிர்ந்தவர் மற்றும் சம்மதத்துடன் பங்கேற்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தால், போலீசார் தலையிடுவதையோ அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதையோ தவிர்க்க வேண்டும்.

எந்த தொழிலாக இருந்தாலும், அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கு உரிமை உண்டு என்று கூற வேண்டியதில்லை. பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ தண்டிக்கவோ துன்புறுத்தவோ கூடாது. தன்னார்வ பாலியல் தொழில் சட்டவிரோதமானது அல்ல, விபச்சார விடுதியை நடத்துவது மட்டுமே சட்டவிரோதமானது.

பாலியல் தொழிலாளியின் குழந்தை பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளது என்ற காரணத்திற்காக தாயிடமிருந்து பிரிக்கக் கூடாது. மனித ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தின் அடிப்படை பாதுகாப்பு பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு நீட்டிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

#Go Back Modi Vs #Vanakkam_Modi: டிவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் யுத்தம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வரும் ஒவ்வொரு முறையும் #GobackModi போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆவது வழக்கம். ஆனால், இந்த முறை மோடி வருவதற்கு முதல் நாளான நேற்றே இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது. இன்று காலையில் இருந்து இந்த ஹேஷ்டேக் அகில இந்திய அளவில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. மாலை 4.30 மணி அளவில் இந்த ஹேஷ்டேக்கில் சுமார் 3 லட்சத்து 57 ஆயிரம் ட்வீட்கள் பதிவிடப்பட்டிருந்தன. இதுபோல் #Goback_Modi என்ற ஹேஷ்டேக்கில் சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் ட்விட்டுகளும், #GobackFacistModi என்ற ஹேஷ்டேக்கில் சுமார் 95 ஆயிரம் ட்விட்டுகளும் பதிவிடப்பட்டுள்ளன.

இதற்குப் போட்டியாக பாஜகவினர் #Vanakkam_Modi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேகின் கீழ் மாலை 4.30 மணி அளவில் சுமார் 6 லட்சத்து 60 ஆயிரம் ட்வீட்கள் பதிவாகியிருந்தன.

பிரதமர் மோடி சென்னையில் வந்து இறங்கும் மாலை நேரத்தில் இந்த ஹேஷ்டேக் யுத்தம் உச்சம் தொடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் 11 திட்டங்கள் – முழு விவரம்

பிரதமர் மோடி இன்று சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு ரூ. 31,500 கோடி மதிப்பிலான 11 திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். அதில் 5 முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அந்த 5 திட்டங்கள் விபரம் வருமாறு:

1. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு ரூ. 598 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 3-வது ரெயில் பாதை.

2. மதுரை – தேனி இடையே ரூ.506 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதை.

3. எண்ணூர் – செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக ரூ. 8 49 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்கள்.

4. பெங்களூரு – திருவள்ளூர் பிரிவில் 271 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. 911 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்கள்.

5. இந்த நான்கையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் மோடி, கலங்கரை விளக்கம் செயல் திட்டத்தின் கீழ் அந்த சுற்று வட்டாரத்தில் குடியிருப்போருக்காக ரூ.116 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளையும் பயனாளிகளுக்கு ஒப்படைக்கிறார்.

இதே விழாவில் 6 புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அந்த 6 திட்டங்கள் விபரம் வருமாறு:

1. ரூ. 5,852 கோடி செலவில் துறைமுகம் – மதுரவாயல் இடையே அமைக்கப்படும் இரண்டடுக்கு மேம்பாலம்.

2. ரூ. 14.872 கோடி செலவில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைவு வழி சாலை.

3. பெங்களூருவில் இருந்து தர்மபுரி இடையே ரூ.3,471 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைத்தல்.

4. சென்னையில் ரூ.1,428 கோடியில் பல வகை வழிமுறைகளுடன் கூடிய சரக்கு பூங்கா அமைத்தல்.

5. சென்னை எழும்பூர், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, காட்பாடி ஆகிய 5 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்துதல்.

6. மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.724 கோடி செலவில் தனி பாதைகள் அமைத்தல்.

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை

ப. சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது. இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இன்று காலை 8 மணிக்கு கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தை மே 30-ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களில் கனமழை – சென்னைக்கும் மழை வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (மே 26) தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (27.05.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...