No menu items!

நியூஸ் அப்டேட்: மீண்டும் ரெப்போ ரேட் உயர்வு – வங்கிக் கடன் வட்டி அதிகரிக்கும்

நியூஸ் அப்டேட்: மீண்டும் ரெப்போ ரேட் உயர்வு – வங்கிக் கடன் வட்டி அதிகரிக்கும்

ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த புதன் கிழமை (3-8-2022) தொடங்கியது. மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்தக் கூட்டம் இன்று முடிவடைந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர்  ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டின் பணவீக்கத்தை குறைக்கவும், பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரெப்போ ரேட் விகிதத்தை 0.50 சதவீதம் அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளதாக அறிவித்தார்.

முன்னதாக சமீபத்தில், ரெப்போ ரேட் விகிதம் இரண்டு முறை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து வங்கிகளில் வீடு, வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் பெற்றிருந்தவர்களின் கடன் வட்டி விகிதம் அதிகரித்தது. தற்போது மீண்டும் ரெப்போ ரேட் உயர்வதால் வாடிக்கையாளர்களுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு ஆங்கில கேள்வித்தாள்: மத்திய பல்கலை. தேர்வு குளறுபடியால் மாணவர்கள் பாதிப்பு

இந்தியா முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஒரே நேரத்தில் 590 மையங்களிலும், இந்தியாவிற்கு வெளியே பிற நாடுகளில் 22 மையங்களிலும் நேற்று தொடங்கி 5 தினங்களுக்கு நடைபெறுகிறது. தமிழகத்தில் 30 மையங்களில் நேற்று நுழைவுத் தேர்வுகள் தொடங்கி காலை, மாலை என நடைபெற்றது. இம்மையங்களில் ஒன்றான திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட தேர்வில் வினாத்தாள்கள் ஒரு மணி நேரம் காலதாமதமாக வெளியானதுடன், தமிழில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்வித்தாள் வெளியாகி உள்ளது.

இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் போன்ற தேர்வுகளைத் தமிழ் வழியில் எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்கள் ஆங்கில வினாத்தாள் வழங்கப்பட்டதால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள், ‘தமிழ்வழியில் நுழைவுத் தேர்வு எழுதும் வகையில் தயார்ப்படுத்தி வந்தோம். ஆனால், ஆங்கில கேள்வித்தாளால் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளோம். எனவே, தமிழில் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும்’ என தெரிவித்தனர்.

இந்நிலையில், “தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டுக்கல், திருவாரூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 5 மையங்கள் மற்றும் ஜார்கண்ட், மகாராஷ்டிராவில் தலா நான்கு மையங்கள், அருணாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் தலா இரண்டு மையங்கள், டெல்லியில் ஒரு மையத்தில் நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் ஆகஸ்ட் 12 முதல் 14ஆம் தேதி வரை நடத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுங்கள்: அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், அவரவர் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி நாட்டுப் பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் வடமேற்குப் பகுதியில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், “கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பெய்துவரும் மழை அடுத்த 2 தினங்களில் படிப்படியாகக் குறையும். இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வேகமாக பரவும் குரங்கம்மை: அமெரிக்காவில் சுகாதார அவசரநிலை பிரகடனம்

அமெரிக்காவில் இதுவரை 7,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், குரங்கம்மை மிக வேகமாக பரவி வருவதால் அங்கு சுகாதார அவசர நிலையை அரசு அறிவித்துள்ளது.

அதிகமான குரங்கம்மை தொற்று தன்பாலின உறவில் ஈடுபடும் ஆண்களையே பாதித்துள்ளது தெரியவந்துள்ளதால் தன்பாலின உறவில் ஈடுபடுபவர்கள் பார்ட்னர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி இருந்தது. இதை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் உள்ள சுமார் 17 லட்சம் தன்பாலின உறவு கொள்பவர்களை அந்நாட்டு அரசு கண்காணித்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...