No menu items!

நியூஸ் அப்டேட்: தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இடங்களில் ரெய்ட்

நியூஸ் அப்டேட்: தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இடங்களில் ரெய்ட்

தமிழ் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு, அலுவலகம் உள்பட சொந்தமான இடங்களில் கடந்த 2020ஆம் ஆண்டு வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அதில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. இந்நிலையில் அன்புச் செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மதுரையில் உள்ள அன்புசெழியனின் வீடு, அலுவலகம், திரையரங்கம் மற்றும் சென்னையில் உள்ள வீடு, அலுவலகங்களிலும் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோல் சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரபு, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா ஆகியோர் வீடு, அலுவலகம் மற்றும் சொந்தமான இடங்களிலும் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கணக்கில் வராத பணத்தில் சினிமா தயாரிப்பதாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலே செல்லும் கேபிள்கள் இல்லாத சென்னை: மாநகராட்சி திட்டம்

சென்னை மாநகராட்சியில் தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களின் கேபிள்கள் அனைத்தும் மேலே செல்லும் வகையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேபிள்களை அனைத்தையும் புதைவட கேபிளாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், “சென்னையில் 15 நிறுவனங்கள் OFC என்று அழைக்கப்படும் ஆப்டிக்கல் பைபர் கேபிள்களை மேலே கொண்டு செல்கின்றன. இதன் காரணாக பல இடையூறுகள் எற்படுகிறது. இதனால் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் மாநகராட்சியை புதுப் பொலிவாக மாற்றியமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த கேபிள்களை புதைவட கேபிளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டமும் தயார் செய்யப்பட்டுள்ளது.

பேருந்து சாலைகளில் தற்போது மேலே செல்லும் கேபிள்களை உடனடியாக புதைவட கேபிளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். உட்புற சாலைகளில் உள்ள கேபிள்களை ஆண்டுக்கு 20 சதவீதம் என்ற அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் புதைவட கேபிள்களாக மாற்ற வேண்டும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

இலங்கை, பாகிஸ்தான் போல இந்தியாவுக்குப் பொருளாதார நெருக்கடி வராது: ரகுராம் ராஜன்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 80-ஐ தொட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாய் மதிப்பு ரூ.82-க்கு கீழ் சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன், “இந்தியாவிடம் போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. நமது வெளிநாட்டுக் கடன்களும் குறைவு. சமீபத்திய ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 620.7 பில்லியன் டாலராக உள்ளது. ஜூலை 22ஆம் தேதிவரை இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 571.56 பில்லியன் டாலராக உள்ளது. எனவே, இலங்கை, பாகிஸ்தான் போன்ற பொருளாதார பிரச்சினைகள் நமக்கு இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

நள்ளிரவு அழைத்தபோது செல்லாததால் என்னுடன் நடிக்க ஹீரோக்கள் மறுத்துவிட்டனர்: மல்லிகா ஷெராவத் மீடூ

பிரபல நடிகை மல்லிகா ஷெராவத் பாலிவுட் முன்னணி ஹீரோக்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘என்னுடன் படத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் மறுத்துவிட்டனர். ஏனென்றால், அவர்களுடன் நான் சமரசம் செய்து கொள்ளவில்லை. தங்களால் கட்டுப்படுத்த முடியும் என்ற நடிகையைதான் ஹீரோக்கள் விரும்புகிறார்கள். எந்த நடிகை அவர்களுடன் சமரசம் செய்கிறாரோ அவருக்கே வாய்ப்பு. நான் அப்படி இல்லை. என்னுடைய ஆளுமை அப்படி இல்லை.

வேறொருவரின் பாலியல் ஆசைக்கு நான் ஆளாக விரும்பவில்லை. உட்காரு, எழு என்று ஹீரோ என்ன சொன்னாலும் செய்ய வேண்டும். ஒரு ஹீரோ உங்களை நள்ளிரவில் வீட்டிற்கு வரச் சொன்னால் நீங்கள் செல்லவேண்டும். அப்போது தான் நீங்கள் அந்த ஹீரோவின் நட்பு வட்டத்தில் இருப்பீர்கள். நள்ளிரவில் அவர் அழைக்கும் போது போகவில்லை என்றால் அந்த படத்தில் இருந்து நீங்கள் தூக்கி எறியப்படுவீர்கள். தங்கள் கட்டுப்பாட்டில், தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டு அட்ஜஸ்ட் பண்ணும் நடிகைகளை தான் அவர்களுக்கு பிடிக்கும். எனக்கு அது பிடிக்காது’’ என்று கூறியுள்ளார்.

மல்லிகா ஷெராவத் 2002இல் இந்தி திரையுலகில் நுழைந்தார். ஆனால், 2004ஆம் ஆண்டு வெளியான ‘மர்டர்’ படத்தின் மூலம்தான் பிரபலமானார். தமிழில் கமல்ஹாசனின் ‘தசவதாரம்’ படத்தில் நடித்துள்ளார். சிம்புவின் ‘ஒஸ்தி’ பட த்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

அமெரிக்கா ட்ரோன் தாக்குதலில் அல்-காய்தா தலைவர் அல் ஜவாஹிரி உயிரிழப்பு

ஒசாமா பின்லேடன் 2011இல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். அதன்பின் அல்-காய்தா அமைப்பை வழிநடத்தி வந்தவர் அல்- ஜவாஹிரி. அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அல்- ஜவாஹிரி, ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பதுங்கியிருந்தபோது ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”அல் ஜவாஹிரி பதுங்கியிருக்கும் இடத்தை அறிந்துவிட்டதாக தகவல் வந்ததும். அவரை அழிக்கும் ஆபரேஷனுக்கு நான் அனுமதி கொடுத்தேன். அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதால் அமெரிக்காவில் செப்டம்பர் 11இல் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 3000 பேரின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

எகிப்தின் கெய்ரோவைச் சேர்ந்தவர் அல் ஜவாஹிரி. செப்டம்பர் 11, 2001இல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலில் அல் ஜவாஹிரிக்கு முக்கிய பங்குண்டு என நம்பப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில் அவர் ஒசாமா பின் லேடனின் நம்பிக்கைக்குரிய 5 பேர் படையில் ஒருவராக இருந்தார். இந்திய விவகாரங்களில் வீடியோக்களில் தோன்றி அல் ஜவாஹிரி அவ்வப்போது பேசி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...