No menu items!

நியூஸ் அப்டேட்: ராகுல் நடைபயணம் – ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

நியூஸ் அப்டேட்: ராகுல் நடைபயணம் – ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் நடைபயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து நடை பயணத்தை தொடங்கும் அவர், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 48 நாட்கள் 3,700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.

முன்னதாக செப். 7ஆம் தேதி காலை சென்னை வரும் ராகுல் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வரும் அவர், காந்தி மண்டபம் அருகே மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இக்கூட்டத்தில் ராகுல்காந்தியின் நடைபயணத்தை திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் – சசிகலா, விஜயபாஸ்கர் மீது விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 22.09.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்தும் அதைத் தொடர்ந்து 05.12.2016 அன்று அவரது மரணம் வரையிலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணை செய்ய நீதிபதி அ.ஆறுமுகசுவாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது.  இந்த ஆணையம் தன் அறிக்கையை 27.08.2022 அன்று அரசிடம் ஒப்படைத்தது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையின் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. வி.கே. சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அப்போதைய தலைமை செயலாளர் இராம மோகன ராவ் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட ஆணையம் பரிந்துறை செய்துள்ளது. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், அதன்பின்னர் அதற்கான விவர அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவியை ஆசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதற்கு ஆதாரமில்லை உயர்நீதிமன்றம் கருத்து

கனியாமூர் பள்ளி மாணவி ஜூலை 13ஆம் தேதி மர்ம மரணம் அடைந்தது குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்ன சேலம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை ஜூலை 17ஆம் தேதி கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு ஆக.26-ம் தேதி விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் விரிவான விவரங்கள் தற்போது  வெளியாகியுள்ளது.

அதில், “மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து, பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய துரதிஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். `மாணவியை நன்கு படிக்க வேண்டும்’ என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது. வேதனையானதும்கூட. நன்றாக படிக்க வேண்டும் என்று மாணாக்கருக்கு ஆசிரியர்கள் உத்தரவிடுவது என்பது ஆசிரியப் பணியின் ஒரு அங்கம். மாணவியை ஆசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை. அதேநேரம் படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு: சாலை விபத்துகளில் முதலிடம்; உயிரிழப்பில் 2ஆவது இடம்

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) 2021 அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் 2021இல் நடந்த 4.22 லட்சம் சாலை விபத்துகளில் 1.73 லட்ச உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 24,711 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 16,685 பேர் உயிரிழந்துள்ளனர்.

2020இல் 3,68,828 ஆக இருந்த சாலை விபத்துகள் 2021இல் 4,22,659 ஆக அதிகரித்துள்ளது என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ல் மிக அதிகமாக சாலை விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டில் 57,090 சாலை விபத்துகளும், மத்தியப் பிரதேசத்தில் 49,493 விபத்துகளும், உத்தரப் பிரதேசத்தில் 36,509 விபத்துகளும், மகாராஷ்டிராவில் 30,086 விபத்துகளும், கேரளாவில் 33,501 விபத்துகளும் நடந்துள்ளன.

உலக பணக்காரர்கள் பட்டியல்: மூன்றாவது இடத்தை பிடித்தார் அதானி

உலக பணக்காரர்கள் சொத்து விவரங்கள் குறித்த ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், இந்திய தொழில் அதிபரான கவுதம் அதானி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் உய்ட்டன் நிறுவன தலைவர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது தற்போதைய சொத்து 137.4 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில், அமெரிக்கா தொழில் அதிபர் எலோன் மஸ்க் 251 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். 153 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2வது இடத்தில் நீடிக்கிறார். 91.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 11வது இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...