No menu items!

நியூஸ் அப்டேட்: ராகுல் நடை பயணம் – மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நியூஸ் அப்டேட்: ராகுல் நடை பயணம் – மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொள்கிறார். இதற்கான தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல்காந்தியிடம் வழங்கி நடை பயணத்தை தொடங்கி வைத்தார். அதை பெற்றுக்கொண்ட ராகுல் காந்தி, அங்கிருந்து நடை பயணத்தை தொடங்கினார்.

பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க இந்த நடை பயணத்தை 150 நாட்கள் ராகுல் காந்தி மேற்கொள்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பயணம் மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் – செப்.15இல் தொடக்கம்

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஓராண்டு நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்பதும் ஒன்று. இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15இல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதற்கட்டமாக காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படுகிறது. பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5,941 மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

திமுகவின் 10 எம்.எல்.ஏக்கள் அதிமுகவுடன் பேசி வருகின்றனர்:  இபிஎஸ் பேட்டி

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அதிமுக தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி. தொண்டர்கள் தான் இப்போது அதிமுக-வை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தொண்டர்களால் நடத்தப்படும் அதிமுக-வில் தலைவர்களுக்கு இடமில்லை. தினகரன், சசிகலாவுக்கு இடமில்லை என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். நானும் தொண்டன் என்ற முறையில்தான் இங்கு வந்திருக்கிறேன். தலைவர் என்ற முறையில் வரவில்லை. திமுகவின் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் என்னோடு பேசி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை ராகுல் பார்வையிட்டார்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி நடை பயணம் செல்கிறார். இதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து ராகுல் காந்தி கன்னியாகுமரி வந்தார். அங்கு அவர் பூம்புகார் படகுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார்.

சி.பி.. (எம்.எல்.) பொது செயலாளருடன் நிதிஷ் குமார் சந்திப்பு: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவு பற்றி ஆலோசனை

டெல்லி சென்றுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இந்த பயணத்தில் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரையும் சந்தித்து பேசி வருகிறார். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்த சந்திப்புகளில் ஆலோசிக்கப்பட்டன என கூறப்படுகிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளரான தீபன்கர் பட்டாச்சார்யாவை அவரது கட்சி அலுவலகத்தில் வைத்து நிதிஷ் குமார் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு பற்றி நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘தங்களது கைகளில் அதிகாரம் உள்ளவர்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதனை ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர். ஒவ்வொருவரும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பற்றி பேசி கொண்டிருக்கின்றனர். சில காலம் பொறுத்திருங்கள். அது நல்ல முறையில் நடக்க போகிறது” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...