ஜி-7 மாநாட்டை நிறைவு செய்துவிட்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டு சென்றார்.
ஜெர்மனியில் 48-வது ஜி7 மாநாடு நேற்றும் இன்றும் நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்நிலையில், ஜி7 மாநாட்டை நிறைவு செய்த பிரதமர் மோடி, ஜெர்மனியில் இருந்து இன்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டு சென்றார். அமீரகம் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவு, வர்த்தகம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஒவைசி ஆதரவு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒவைசி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ஜனாதிபதி தேர்தலில் மஜ்லிஸ் கட்சி வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்காளிப்பார்கள். யஷ்வந்த் என்னுடன் தொலைபேசியில் பேசினார்’ என்று கூறியுள்ளார். அசாதுதின் ஓவைசி கட்சிக்கு 2 எம்.பி.க்களும், 14 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
ஈபிஎஸ்க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், உயர்நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்து அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் ஜூலை 11-ல் பொதுக்குழு கூடும் என அறிவித்தும் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கையெழுத்திட்டு ஒப்படைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் சண்முகம் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணா நீர் திறப்பை நிறுத்த தமிழக அதிகாரிகள் கோரிக்கை
கிருஷ்ணா நீர் திறப்பை வரும் 1-ம் தேதி முதல் நிறுத்த ஆந்திர அரசுக்கு தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி ஆகும். இதில் தற்போது 1,383 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. எனினும் பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமிக்க அதிகாரிகள் விரும்பவில்லை. மேலும் ஏரியில் உள்ள நீர் திறப்பு மதகுகளை சீரமைத்து தண்ணீர் சேமிப்பை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதேபோல் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியிலும் போதுமான தண்ணீர் உள்ளது.
இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறப்பை வருகிற 1-ம் தேதி முதல் நிறுத்த தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். அடுத்த கட்டமாக செப்டம்பர் மாதத்தில் தண்ணீரை திறந்து விடும்படி கூறி உள்ளதாக தெரிகிறது.