No menu items!

நியூஸ் அப்டேட்: பெட்ரோல் குண்டு வீச்சு – தமிழகம் முழுவதும் 16 பேர் கைது

நியூஸ் அப்டேட்: பெட்ரோல் குண்டு வீச்சு – தமிழகம் முழுவதும் 16 பேர் கைது

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பாஜக, இந்து மத அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடுகள் தொடர்புடைய இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இதையடுத்து, இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் வீட்டில் இன்று அதிகாலை மண்ணெண்ணை நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்றவைத்து வீசியது தொடர்பாக காதர்உசேன், சையத்அலி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் ஷெரிப்பாஷா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பொதுச் செயலாளர் முகமது ரஃபி மற்றும் இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில், முகமதுஆரிஸ், காஜா உசேன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரில் அமைந்துள்ள இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளில் கடந்த 22-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக முகமது ரபிக் (26), ரமீஸ் ராஜா (36), மாலிக் என்கிற சாதிக் பாஷா (32) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக மதுரை மேல அனுப்பானடி பகுதியில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கிருஷ்ணன் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக மதுரை சம்மட்டிபுரம் உசேன், நெல்பேட்டை சம்சுதீன் ஆகியோர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

இதுபோல் ஈரோட்டில் பாஜக பிரமுகருக்குச் சொந்தமான பர்னிச்சர் கடையில், டீசல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஈரோடு பிராமண பெரிய அக்ரஹார பகுதியைச் சேர்ந்த கலில்ரகுமான் (27), கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த சதாம் உசேன் (25), இந்திரா நகரைச் சேர்ந்த சாதிக் (27), இவரது தம்பி ஆசிக் அலி (23) ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். இதில், சதாம் உசேன் மட்டும் எஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

அதிமுக தலைமை கழகத்துக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் வருகை: நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை

அதிமுகவுக்குள் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட தலைமைப் பதவிக்கான போட்டியில் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கியுள்ளது. அடுத்த கட்டமாக விரைவில் கட்சி தேர்தலை நடத்தி எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென்று தலைமை கழகத்துக்கு வந்தார். இதுதொடர்பாக முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு நேற்று மாலையில் அவசர அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய நிர்வாகிகள் அவசர அவசரமாக புறப்பட்டு இன்று காலை சென்னை வந்தனர். காலை 10.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றார்கள். பின்னர் கூட்ட அரங்கில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள பொன்னையன், நத்தம் விசுவநாதன் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை. ரவி, ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, கே.பி.கந்தன், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் தேதி குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

80 எம்.எல்.க்கள் திடீர் ராஜினாமா: ராஜஸ்தான் காங்கிரஸில் உச்சக்கட்ட குழப்பம்

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் தேர்வாகும் பட்சத்தில் ராஜஸ்தானின் அடுத்த முதமைலச்சராக சச்சின் பைலட்டை தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் நகர்வுகள் மேற்கொண்டுவருகிறது. இதற்கு அசோக் கெலாட் ஆதரவாளர்கள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சச்சின் பைல்ட் மற்றும் அவருக்கு ஆதரவு தரப்பு யாரையும் முதலமைச்சராக்க கூடாது என அசோக் கெலாட் தரப்பு எம்எல்ஏக்கள் விடாபிடியாக இருப்பதால் ராஜஸ்தான் அரசியல் குழப்பம் தற்போது உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில், 80க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை சபாநாயகர் சிபி ஜோஷியை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர். சச்சின் பைலட்டை முதலமைச்சராக்க எதிர்ப்பு தெரிவித்தே எம்எல்ஏக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா குறித்து பாரபட்ச பார்வை: அமெரிக்க ஊடகங்களுக்கு ஜெய்சங்கர் கண்டனம்

ஐ.நா. சபையின் 77-வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். வாஷிங்டனில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் வாஷிங்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் அமெரிக்காவில் அதிகரிப்பதகாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘வாஷிங்டன் போஸ்ட்’ உள்பட பல செய்தி நிறுவனங்களை மறைமுகமாக விமர்ச்சித்து கண்டனம் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் தூதர் பங்கேற்பு

நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் ஏராளமான சிறிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி உள்ளனர். இதில் நித்யானந்தாவின் கைலாசா சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர் என்ற பெயரில் நித்யானந்தாவின் சிஷ்யைகளில் ஒருவரான விஜயபிரியா பங்கேற்றுள்ளார். முன்னதாக கைலாசா நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளதாக நித்யானந்தா ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...