இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி 2018 செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க ஆளுனர் தாமதிப்பதால், அவரது ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல், இந்த வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ரவிச்சந்திரனும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்ததைப் போல, உயர் நீதிமன்றம் விடுவிக்க முடியாது எனக்கூறி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடாது – அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது. அதிமுக பெரிய கட்சியாக, வலுவான கட்சியாக தமிழகத்தில் உள்ளது” என்று கூறினார்.
மேலும், “டெல்லியில் ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜரானதற்கு தேவையில்லாத போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், தலைவர்கள் நடத்துகின்றனர். தமிழக காவல்துறை பணிக்கு ஆள்சேர்ப்பதில் அக்னி வீரர் பாணியை கொண்டு வர வேண்டும். சீரடிக்கு செல்லும் வழக்கமான ரெயில் சேவை ஏதும் நிறுத்தப்படவில்லை. தற்போது தனியார் ரெயில் சேவையை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இது தொடர்பாக டி.ஆர். பாலு சொல்லும் குற்றச்சாட்டு தவறானது” என்று அண்ணாமலை கூறினார்.
ஆன்லைன் ரம்மி – பெயிண்டர் தற்கொலை
சென்னை அடுத்த மணலி அறிஞர் அண்ணா முதல் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 37). இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி வரலட்சுமி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். நாகராஜ் கடந்த ஆறு மாதம் காலமாக ரம்மி விளையாடி, அதில் அதிக பணத்தை இழந்து கடன் சுமையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக நாகராஜ் மற்றும் அவரது மனைவி வரலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை எழுந்து பார்த்த போது நாகராஜ் அவரது அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய படி சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு: பிஹார், உபியைத் தொடர்ந்து மபி, ஹரியானா மாநிலங்களுக்கு பரவிய கலவரம்
இந்திய ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹாரில் நேற்றைய நாள் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடந்த நிலையில் இன்றும் பதற்றம் நீடிக்கிறது. இன்றும் 2 ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. ஹாஜிபுர் பரூனி ரயில்வே பாதையில், ஹொஹிதீன் நகர் ரயில் நிலையத்தில் ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆனால், நல்வாய்ப்பாக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
மேலும், அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக பிஹார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் இன்று பாஜக ஆளும் ஹரியாணா, மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. ராஜஸ்தானின் சில நகரங்களும் பதற்றம் நிறைந்தவையாக அறியப்பட்டுள்ளன.
முகமது நபி அவமதிப்பை கண்டிக்கிறோம்; பாஜக கட்சி நடவடிக்கையை வரவேற்கிறோம் – அமெரிக்கா கருத்து
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “இந்தியாவில் முகமது நபிகளை அவமதிக்கும் வகையில் பேசியவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதே வேளையில், அவர்களின் மீது அவர்கள் சார்ந்த பாரதிய ஜனதா கட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்ததை வரவேற்கிறோம்” என்று கூறினார்.
மேலும், “மனித உரிமைகள், மதச் சுதந்திரம், நம்பிக்கைகள் ஆகியன தொடர்பான விவகாரங்களில் நாங்கள் இந்தியாவுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க நாங்கள் இந்தியாவை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்’ என்றும் நெட் ப்ரைஸ் கூறினார்.
முன்னதாக, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது முகமது நபிகளை தரக் குறைவாக விமர்சித்தது சர்வதேச அளவில் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.