அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று முடிந்த பரப்பான நிலையில், ஓ. பன்னீர்செல்வம், அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத், வழக்கறிஞரும் எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதில் பங்கேற்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் அழைத்துள்ளனர். அதற்காக டெல்லி செல்கிறேன்” என்று கூறினார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் சார்பில் மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அதிமுகவின் சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொண்டு, கட்சி தலைமைப் பதவியை மாற்றம் செய்வதற்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக வரும் ஜூலை 11-ம் தேதி சட்ட விரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழுவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது. சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொண்டு கட்சியின் தலைமைப் பதவியை மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி இன்று தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், வைகைச் செல்வன்,எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர் பதவியே அதிமுகவில் இல்லை – சி.வி. சண்முகம்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், முன்னாள் ஒருங்கிணைப்பாளர் தற்போது பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் தற்போது மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம் என்றும் குறிப்பிட்டு பேசினார். இதன் மூலம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டுவிட்டதாக சி.வி. சண்முகம் சூசகமாகத் தெரிவிக்கிறாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி
குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எம்.பி., ஈஷான் ஜாப்ரி உட்பட 68 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக, அப்போது குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது, சதி திட்டம் தீட்டியதாக, உயிரிழந்த ஈஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். ஆனால், இதுகுறித்து விசாரணை நடத்திய சிறப்பு விசாரணை குழு, நரேந்திர மோடி உள்ளிட்ட 63 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அறிவித்தது. இதை எதிர்த்து, ஜாகியா தொடர்ந்த வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது.
பின்னர், 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
கோடநாடு வழக்கு விசாரணை: 29-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதனையொட்டி சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திபு என்பவர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வருகிற 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சபரிமலை சாமி தரிசனத்திற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை
சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று, திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, “கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி கேரள அரசால் தொடங்கப்பட்டது. அதனை கேரள போலீசார் நிர்வகித்து வந்தனர். இதையடுத்து தரிசன முன்பதிவு செயல்பாடுகள் முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஆணை பிறப்பிக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் தேவஸ்தானம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் தேவஸ்தானத்திற்கு ஆதரவான தீர்ப்பை கேரள ஐகோர்ட்டு வழங்கியது. இதைதொடர்ந்து சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு செயல்பாடுகள் இனி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வராத பட்சத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும்” என்று கூறினார்.