No menu items!

கழுதைப் புலிகளும் கட்டுக் கதைகளும் – நோயல் நடேசன்

கழுதைப் புலிகளும் கட்டுக் கதைகளும் – நோயல் நடேசன்

தென் ஆப்பிரிக்கா பயணம் – 5

மிருகங்களைப் பேசவைத்து குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட ஹோலிவுட் திரைப்படம் Racing With Stripes (2005). இத்திரைப்படத்தில் குதிரைகள், சேவல்கள், ஆடுகள் முதலானவையுடன் ஒரு இளம் வரிக்குதிரையையும் அதன் மீது பாசம் கொண்ட தாயற்ற இளம் பெண்ணும் முக்கிய பாத்திரங்களாக வருகிறார்கள்.

சூறாவளி திடீரென்று மையம் கொண்டதால், ஒரு சர்க்கஸ் குழு, அவசரம் அவசரமாக தாங்கள் தங்கிய இடத்தில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டுச் செல்கிறது. அந்தக் குழு அவசரத்தில் ஒரு சிறிய வரிக்குதிரைக் குட்டியை அங்கு அனாதரவாக விட்டுச் சென்று விடுகிறது. அந்த வரிக்குதிரைக் குட்டி ஓட்டப் பந்தயக் குதிரைகளை பழக்கும் நோலனால் கண்டெடுக்கப்பட்டு அவரது பண்ணை வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு ஏற்கனவே பல குதிரைகள் வளர்க்கப்படுகின்றன.

அந்தச் சிறிய வரிக்குதிரைக் குட்டியை நோலனின் மகள் சானிங்கிங் ஸ்ரைப்பி என்ற பெயரிட்டு பாசமுடன் வளர்க்கிறாள். அங்கு ஏற்கனவே வளரும் பந்தய குதிரைகளுக்கு ஸ்ரைப்பியை பிடிப்பதில்லை. பொறாமையுடன் எதிர்க்கின்றன. ஆரம்பத்தில் பந்தயக் குதிரைகளால் ஏளனம் செய்யப்படும்போது அதனை சவாலாக எடுக்கும் ஸ்ரைப்பி ரேஸ் ஓட நினைக்கிறது. ஆனால், தோற்கிறது. இறுதியில் சானிங்கின் வற்புறுத்தலில் நோலனால் பயிற்றுவிக்கப்பட்டு கெந்தக்கி ரேஸ் என்ற மிக பிரசித்தியான குதிரைப் பந்தயதில் வெல்கிறது.

இந்தப் படம் தென்னாப்பிரிக்காவில்தான் எடுக்கப்பட்டது. இதை ஏற்கனவே பார்த்திருந்ததால் எங்கள் தென்னாப்பிரிக்கப் பயணத்தில் வரிக்குதிரைகளைப் பார்த்தபோது ஞாபகம் வந்தது. இந்த பயணத்தில் நான் பார்த்த வரிக்குதிரைகள் எல்லாம் சோடியாகவே காட்டில் நின்றன. அருகில் சென்று பார்க்க முற்சித்தபோது ஆண் – பெண் வித்தியாசம் பெரிதாக வெளியே தெரியவில்லை. அருகில் நெருங்கிப் பார்த்தபோதுதான் பெண் உறுப்பு பின்பகுதியில் தெரிந்தது. ஆணின் குறி குதிரைக்கு இருப்பதுபோன்று பெரிதாகத் தெரியவில்லை. ஆண் வரிக்குதிரை, பெண்வரிக் குதிரையிலும் சற்றுப் பெரிதாக இருந்தது.

வரிக்குதிரையின் கோடுகள் எப்பொழுதும் வியப்பானவை. இடது வலது பகுதிகள் கண்ணாடி விம்பம்போன்று இருக்குமென நினைத்தேன். ஆனால், அப்படி இருக்கவில்லை. வேட்டையாடும் மிருகங்களின் கண்களில் இருந்து தப்புவதற்காக இந்தக் கோடுகள் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.

மேலும் இந்தக் கோடுகளின் தன்மையால் ஒட்டுண்ணி பூச்சிகளின் தாக்கம் குறைவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக் கோடுகள் நமது கைரேகை போல் தனித்தன்மையானவை.

வரிக்குதிரைகள் குதிரைகளைப்போல் நடக்கும். குதிரையைபோல் நின்றபடியே உறங்கும் தன்மையும் வரிக்குதிரைக்குண்டு. குதிரைபோல் வேகமாக ஓடாதபோதிலும் அதிக தூரம் ஓடுவதற்கான பலம் கொண்டவை. மேலும், எதிரியிடம் இருந்து தப்பிக்க குறுக்கு மறுக்காக ஓடக்கூடியது. முன்னங்கால்களால் எழுந்து தாக்கும் தன்மை, இவற்றை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றன.

தெளிவான செவிப்புலனும் கூர்மையான பார்வையும் கொண்டது மட்டுமல்லாமல் இரவில் இருட்டில் கூர்ந்து பார்க்கக்கூடிய திறனும் இருப்பதால் இவை வேட்டை மிருகங்களிடம் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்கின்றன.

வரிக்குதிரை தோலின் கவர்ச்சியால் மனிதர்கள் அவற்றை வேட்டையாடுகிறார்கள்.
குருகர் காட்டில் பல தடவை வரிக்குதிரைகளை பார்த்துவிட்டு ஜோகன்னஸ்பேர்க்கில் மிகவும் பிரசித்திபெற்ற காணிவொரூஸ் என்ற பிரபலமான அசைவ உணவகம் சென்றேன். அங்கு பெரும்பாலும் மான் இனங்கள், வரிக்குதிரை மற்றும் முதலை முதலானவற்றின் வதக்கிய இறைச்சியை பரிமாறினார்கள். இரும்புக் கம்பியில் ஆட்டையும் மாட்டையும் குத்தி வாட்டிய இறைச்சியை கொண்டு வந்தபோது என்னால் சுவைக்க முடிந்தது. ஆனால், மான் வகைகள் வந்தபோது மறுத்தேன். கடைசியில் மிகவும பெரிய தொடையொன்றை பரிசாரகர் கொண்டுவந்தபோது என்ன என்று கேட்டேன். ‘வரிக்குதிரை’ என்றார். அப்போது ஏற்கனவே உண்ட ஆடும் மாடும் வெளியே வருவதான உணர்வு வரவும் அந்த உணவு விடுதியின் பாத்ரூம் நோக்கிச் சென்றேன்.

ஆட்டையும் மாட்டையும் உணவாக ஏற்க முடியுமானால், நம்மால் ஏன் வரிக்குதிரையின் மாமிசத்தையும் உண்ணமுடியாது?

எல்லாம் பழக்கதோசம்தான்.

வரிக்குதிரை எந்தளவு மனிதர்களை கவர்கிறதோ அந்தளவு மனிதர்கள் மத்தியில் நல்ல பெயரில்லாத மிருகம், கழுதைப்புலி. இது ஒட்டக சிவிங்கிகள் போல் ஆப்பிரிக்க காடுகளில் மட்டும் பார்க்கக் கூடிய மிருகமும்கூட. ஆசியாவின் சில பகுதிகளில் முன்பு இருந்தாலும் தற்பொழுது அரிதாகிவிட்டது. இந்தியா, ஆப்கானிஸ்தான், துருக்கியில் சிறிய அளவில் கோடுகள் கொண்ட கழுதைப்புலிகள் உள்ளன. ஐரோப்பா மத்திய கிழக்கில் இல்லாமல் போய்விட்டது.

இரவுவேளைகளில் மட்டும் வேட்டைக்குத்திரியும் கழுதைப்புலியை குருகர்வனத்தில் பகல்நேரத்தில் கண்டது அதிசயமே. அதைவிட அதிர்ஷ்டம் அதைபோட்டோ எடுக்க முடிந்தது.

புள்ளிகள்கொண்ட கழுதைப் புலியை தனியாக மதியத்தில் காணமுடிந்தது. எந்த தயக்கமும் இல்லாது பாதையோரத்தில் பயணித்துக் கொண்டிருந்தது.

பிரவுண், புள்ளி, கோடுகள் என மூன்று விதமான கழுதைப்புலிகள் உள்ளன. இதில் பிரவுண் நிறமுள்ள கழுதைப்புலிகள் தனியாக வேட்டையாடும்.

புள்ளிகள் கொண்ட கழுதைப்புலிகள் மிகவும் விசித்திரமானவை. ஆண் விலங்கிலும் உடல் பலமானது பெண் விலங்கு. அதைவிட முக்கியமானது பெண் விலங்கில் மற்றைய விலங்குகள் போன்று யோனி அல்லது பெண்குறி இல்லை. அதற்குப் பதிலாக ஆண் விலங்கின் குறிபோல் ஆறு அங்குலங்கள் நீளமான குறியுள்ளது. பெண் கழுதைப்புலிகளின் இந்தக் குறி உண்மையில் பரிணாமத்தில் ஓரு விபத்து. வரப்பிரசாதமில்லை.

இரண்டு விறைப்பான ஆண்குறிகள் போன்ற அமைப்புகள் உடலுறவில் ஈடுபடுவது இலகுவானது அல்ல. எனவே, பல சிறிய அத்தியாயங்களாக விட்டு விட்டு உடலுறவு ஏற்படும். உறவின்போது பெண்குறி சட்டைக் கையைப்போல் மடிக்கப்பட்டு ஆண் குறிக்கு இடம்விடவேண்டும். அதாவது இரண்டு நீளமான குழாய்கள் ஒன்றுக்குள் ஒன்று செருகுவது போன்ற கைங்கரியம்.

இதனூடாகவே சிறு நீர் கழிப்பதும் குட்டிபோடுவதும் இலகுவான காரியமல்ல. அப்படி குட்டிபோடும்போது நுனிப்பகுதி கிழிந்துவிடுகிறது. இந்தக் குறியின் அடிப்பகுதியில் தோல்களிலான மடிப்பு உள்ளது. இது ஆண் விலங்கின் விதைபோன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.

பிறக்கும்போது பெண் குட்டி நீளமான குறியுடன்தான் பிறக்கிறது. இதனால் ஆண் குட்டியையும் பெண் குட்டியையும் இளம்பருவத்தில் பிரித்தறிவது கடினம். வயதாகிய பின்பு குறியில் சில வித்தியாசமும் பெண் விலங்கில் முலைகள் தோன்றுவதாலும் கண்டறியலாம். பெண் விலங்குகளே கூட்டத்தில் தலைமைத்துவத்திற்கு வருகிறது.

கழுதைப்புலிகள் நாய்கள் போன்ற உடல் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் உண்மையில் பூனை வகைகளுக்குதான் நெருக்கமானவை.

கழுதைப்புலிகள் மற்றைய மிருகங்களின் மிச்ச சொச்சத்தை உண்பவை என்று சொல்லப்பட்டாலும் அது முற்றிலும் உண்மையல்ல. பிரவுன் கழுதைப்புலிகள் மிகவும் திறமையாக வேட்டையாடும். அதேநேரத்தில் மற்றைய மிருகங்களின் வேட்டையைப் பறித்து உண்பதுடன் சிறிய பறவைகள், தவளைகள் மற்றும் ஊர்வன என்பவற்றையும் உண்ணும். இதைவிட இரவில் தூங்கும் மிருகங்களையும் வேட்டையாடும். கறையான் புற்றுகளை தோண்டி கறையான்களை ருசித்து உண்ணும்.

புள்ளிகள் உள்ள கழுதைப்புலிகள் உடல் பலமுள்ளவை. கூட்டமாக சேர்ந்து உணவு தேடும். அப்பொழுது சிங்கங்களைக் கண்டாலும் பயப்படாது. ஆனால், கூட்டம் குறைந்தால் சிங்கங்களின் உணவு மிச்சத்திற்காக காத்திருக்கும். பகலிலும் பார்க்க இரவில் துணிவாக வேட்டையாடும்.

காட்டினுள்ளே வாகனத்தில் சென்றபோது இருமுறை புள்ளிகள் கொண்ட கழுதைப்புலிகளைக் கண்டேன். மிருக வைத்தியரான எனக்கு அவற்றின் உடல் அமைப்பு அதன் தேவைக்கேற்ப விருத்தியடைந்துள்ளது தெரிந்தது. உடலின் முன்பகுதி முக்கியமாக தோள் பகுதி பருத்து விருத்தியடைந்து, தொண்டை மற்றும் நெஞ்சுப்பகுதி அகலமாக விரிந்து இருப்பதால், பிராணவாயுவை கூடுதலாக உள்ளெடுத்து, வேட்டையின்போது பாய்ந்து தாக்கும் வலிமை பெறுகிறது. அதேவேளையில் பின்பகுதி இடுப்பு பின்னங்கால் ஒடுங்கி மெலிந்துள்ளது. முன் கால்களும் பாதங்களும் பெரிதாகவும் உறுதியாகவும் இருப்பதால் உணவை தேடுவதற்கும் அவற்றை இழுத்துக்கொண்டு பலதூரம் பாதுகாப்பான இடத்தைநோக்கி நடப்பதற்கும் ஏற்றதாக அதன் உடல் அமைப்பு இருக்கிறது.

ஏனைய மிருகங்களிலும் பார்க்க கழுதைப்புலிகளின் பற்கள் உறுதியானவை. மற்ற மிருகங்களுக்கு எலும்பிலிருந்து தசையையும் கிழிக்கவே பற்கள் இருக்கின்றது. ஆனால், கழுதைப்புலிகளில் எலும்புகளையும் உடைத்து தின்பதற்கான வலுவுள்ள பற்கள் அமைந்துள்ளன.

ஓநாய்கள் போல் ஆப்பிரிக்காவில் இறந்தவர்களது உடலையும் புதைத்த சடலங்களையும் கழுதைப்புலிகள் உண்டதாக வரலாறு உண்டு. முக்கியமாக பஞ்சம், வரட்சியான காலத்தில் இவ்வாறு நடந்திருக்கிறது. குழந்தைகள், மாடுகள், செம்மறிகளை கழுதைப்புலிகள் உண்பதாக உருவகிக்கப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல.

ஆப்பிரிக்காவில் மந்திர தந்திர விடயங்கள் செய்வதற்கு கழுதைப் புலிகளின் உடல்பகுதியைப் பாவிக்கிறார்கள். எனவே, மனிதர்களால் கழுதைப்புலிகளுக்கும் ஆபத்து உள்ளது.


முற்றும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...