No menu items!

நியூஸ் அப்டேட்: ஓபிஎஸ் அழைப்பு – இபிஎஸ் மேல்முறையீடு

நியூஸ் அப்டேட்: ஓபிஎஸ் அழைப்பு – இபிஎஸ் மேல்முறையீடு

ஜூலை 11இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவர் ஆதரவு பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது. ஜூலை 23ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ‘அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதை கருத்தில் கொண்டு இரட்டை தலைமைக்கு எங்கள் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கிறோம். அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயாராகவே உள்ளோம்’ என்றார்.

இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ள போதிலும்கூட, அவரது அழைப்பை இபிஎஸ் கண்டுகொள்ளவில்லை. நேற்றைய தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும் என  நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.

அதிமுக அலுவலக சாவி வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஈபிஎஸ்., ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு தொடர்பாக வருவாய் துறை மற்றும் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயம்

அரசின் நல உதவிகள், மானியங்களைப் பெறுவதற்கு, ஆதார் அட்டை இல்லாத நபர்கள், அரசு வழங்கிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சமர்ப்பித்தால் போதுமானது என்ற நிலை தற்போது உள்ளது. ஆதார் சட்டப்பிரிவு 7-ல் இதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதில் யுஐடிஏஐ சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஆதார் அட்டை இல்லாதவர் இனி அரசின் நல உதவிகளைப் பெற வேண்டுமென்றால், முதலில் அவர் ஆதார் அட்டைப் பெறுவதற்கு விண்ணப்பித்து ஆதார் பதிவு எண்ணைப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்ப ஒப்புகைச் சீட்டுடன், அவரிடமுள்ள ஏதேனும் ஒரு அரசு அடையாள அட்டையை சமர்ப்பித்தால் மட்டுமே இனி அரசு நல உதவிகள், மானியங்கள் அவருக்குக் கிடைக்கும்.

மேலும், அரசிடமிருந்து சான்றிதழ்கள் பெறுவதற்கும் ஆதார் அவசியம் என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் டெல்லிக்கு முதலிடம்

உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 2வது இடத்தில் உள்ளது. நைஜீரியாவின் கனோ நகரம் மூன்றாம் இடத்தில் உள்ளாது.

இந்த அறிக்கையை வெளியிட்ட ஹெச்இஐ அமைப்பின் மூத்த விஞ்ஞானி பல்லவி பன்ட் கூறுகையில், “இந்த பட்டியலுக்காக உலகம் முழுவதும் 7000 நகரங்களின் காற்று மாசு அளவு திரட்டப்பட்டன. உலகில் நகரமயமாதல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்களின் உடல் உபாதைகளும் அதிகரிக்கின்றது. உலக நாடுகள் ஆரம்ப நிலையிலேயே தலையிட்டு இப்பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டும்” என்றார்.

முன்னதாக, ‘எந்தவொரு பெரிய நகரமும் அல்லது நாடும் தங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான காற்றை வழங்குவதில்லை’ என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: உலக சுகாதார நிறுவனத் தலைவர் எச்சரிக்கை

உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், “ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நம்மிடம் கொரோனா தடுப்பு முறைகள் இத்தனை இருந்தும் 15 ஆயிரம் உயிரிழப்பு என்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாதது. கடந்த 4 வாரங்களில் இறப்புவிகிதம் 35% அதிகரித்துள்ளது.

நாம் எல்லோரும் கொரோனா வைரஸ் பரவலால் அயர்ந்துவிட்டோம். பெருந்தொற்று காலம் நீண்டுகொண்டே செல்வதால் சோர்வடைந்துள்ளோம். ஆனால், வைரஸ் சோர்வடையவில்லை. அதனால், நாம் தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிடக் கூடாது. தயவு செய்து நீங்கள் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். இரண்டு தவணை செலுத்திவிட்டிருந்தால் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...