No menu items!

நியூஸ் அப்டேட்: சென்னையில் பள்ளி மாணவிகளில் 10-ல் ஒருவருக்கு பாலியல் தொல்லை

நியூஸ் அப்டேட்: சென்னையில் பள்ளி மாணவிகளில் 10-ல் ஒருவருக்கு பாலியல் தொல்லை

சென்னையில் அரசு பள்ளிகளில் மாணவிகள் எந்த மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது பற்றி சென்னை மருத்துவக் கல்லூரி குழுவினர் ஒரு ஆய்வை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளார்கள். 9, 10, 11-ம் வகுப்புகளில் படிக்கும் 300 மாணவிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவில், சென்னையில் 10-ல் ஒரு பள்ளி மாணவி பாலியல் தொல்லைகளை அனுபவிப்பது தெரியவந்துள்ளது.

பொதுவாக பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக 13 சதவீத மாணவிகள் தெரிவித்து உள்ளார்கள். அவர்களில் 72 சதவீதம் பேர் உடல் ரீதியாகவும், 44 சதவீதம் பேர் பாலியல் ரீதியாகவும் தொல்லைகளை அனுபவிப்பதாக தெரிவித்து உள்ளார்கள். 18 சதவீத மாணவிகள் உடல் ரீதியாகவும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாவதாக தெரிவித்து உள்ளார்கள். மாணவிகளை துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர்கள் குழுவினர் சுட்டிக் காட்டி உள்ளார்கள்.

அதிமுக – அமமுகவை இணைக்க டெல்லியில் முயற்சி: டி.டி.வி. தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “அதிமுகவையும் அமமுகவையும் இணைப்பதற்கு டெல்லியில் சில நலம் விரும்பிகள் முயற்சி மேற்கொண்டது உண்மைதான். திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்துக்கு நான் சம்மதித்தேன். எடப்பாடி பழனிசாமியிடம் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் கிடையாது. ஆனால், அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் முதலமைச்சர் வேட்பாளராக அவரை களம் இறக்கக்கூடாது என்று தெரிவித்தேன். அவரை முன்னிலைபடுத்தினால் அதிமுக வெற்றி பெறாது என்றேன்.

எடப்பாடி பழனிசாமியை எந்தவிதத்திலும் நம்ப முடியாது. சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தபோது அவர் தமிழகத்துக்கு வந்து செல்ல அனுமதி கொடுக்க மறுத்தார். அந்த அளவுக்கு அவர் கொடூரமாக நடந்து கொண்டார். ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்த்தது மிகப்பெரிய தவறாகும். அதை அவர் இப்போதுதான் உணருகிறார். எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் நாங்கள் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன” என்று கூறியுள்ளார்.

சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம்: கேரள அரசு அறிவிப்பு

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில், உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் பிரசாதம் போன்றவற்றை மலையாள பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று தேவசம் போர்டு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் சமதர்மத்துக்கு எதிராக உள்ளது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கேரள அரசிற்கும் மனித உரிமை ஆணையத்திற்கும் புகார்கள் செய்யப்பட்டது.

இதனையடுத்து, சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள அரசின் இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் பாரட்டி வருகின்றனர்.  

பிஹார் முதல்வராக நிதிஷ் குமார், துணை முதல்வராக தேஜஸ்வி பதவியேற்பு

பாஜக கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமார் பிஹார் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பிஹார் முதல்வராக அவர் பதவியேற்பது இது 8-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் குமாரைத் தொடர்ந்து மாநிலத்தின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக பிஹாரில் ஜே.டி.யு. – பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது முதல் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு ஜே.டி.யு. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் கூட்டம் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நிதிஷ் குமார், “பாஜக நமது கட்சியை அவமதித்துவிட்டது. ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க முயற்சி செய்தது. எனவே, பாஜக உடனான கூட்டணியை முறிக்கிறோம். முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று அறிவித்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு சென்ற நிதிஷ் குமார், ஆளுநர் பாகு சவுகானிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

நீ என் தங்கச்சி: தூய்மைப் பணியாளருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வடிவேலு

நடிகர் வடிவேலு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலுக்கு நேற்று மதியம் 3 மணி அளவில் சென்றார். அம்மனை தரிசனம் செய்த பின்னர் கோயிலில் உள்ள அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தார். இதனிடையே, வடிவேலு வந்துள்ள தகவல் தெரிய வரவே அவரை மக்கள் சூழ்ந்து கொண்டனர். பின்னர், அவருடன் சிலர் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, சிலர் செல்ஃபி எடுத்தனர்.

அப்போது, கோயிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரை வடிவேலு திடீரென அழைத்தார். அந்த பெண் வடிவேலுவைப் பார்த்ததும் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். உடனே அந்தப் பெண்ணை தூக்கிவிட்ட வடிவேலு, ‘நல்லா இருப்பீங்க’ என வாழ்த்தினார். தொடர்ந்து அந்த பெண்ணை “நீ என் தங்கச்சி” எனக்கூறியபடி, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவை சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...