நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதால் எதையும் சாதிக்க போவதில்லை. மானவர்கள் எந்த நிலையிலும் தன்னம்பிக்கை இழக்க கூடாது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் என சட்ட போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும் நீட் தேர்வு இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஹைடெக் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மனரீதியாகவும் அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது.
எந்த சூழலிலும் மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்க கூடாது. உயிரை மாய்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட வேண்டாம். அதனால் நீங்கள் ஒன்றும் சாதிக்க போவதில்லை. மாறாக பெற்றோருக்கும் இந்த சமூகத்துக்கும் நீங்கள் கவலையை கொடுத்துவிட்டு செல்கிறீர்கள் என்பதே உண்மை.
நீட் தேர்வை ரத்து செய்ய ஒட்டுமொத்த கட்சிகள் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைக்கு ஜனாதிபதி வரை கொண்டு சென்று இருக்கின்றோம். சமீபத்தில் கேரளா வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவிடமும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று கூறினார்.
ஓபிஎஸ்ஸை அதிமுக தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் – ஈபிஎஸ்
விரைவில் கட்சியின் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணி தொடங்கும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, ராயப்பேட்டை பகுதியிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு, சுமார் 72 நாட்களுக்கு பிறகு ஈபிஎஸ் இன்று சென்றார். பின்னர், அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிறகு செய்தியாளர் சந்திப்பின்போது, “பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் நீதிமன்றம் சென்றுவிட்டதால், பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் பணி தடைபட்டது. விரைவில் கட்சியின் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணி தொடங்கும்” என்று கூறினார்.
ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டால் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்விக்கு, “ஓபிஎஸ் மன்னிப்புக் கேட்டால், எப்படி ஏற்றுக்கொள்வார்கள் தொண்டர்கள். கட்சியின் உயர்ந்த பொறுப்பில் இருந்த ஒருவரே கொள்ளைக் கூட்டத்துக்கு தலைமை தாங்குகிற மாதிரி ரவுடிகளுடன் போலீஸ் பாதுகாப்புடன் வந்து அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்கிய காட்சியை நாட்டு மக்களே பார்த்தனர். இப்படிப்பட்டவர்களை தொண்டர்கள் எப்படி மன்னிப்பார்கள்” என்று கூறினார்.
நீட் தேர்வு முடிவுகள்; தற்காலிக பின்னடைவை கண்டு அஞ்ச வேண்டாம்; ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்
2022 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்றிரவு வெளியானது. அதனைத் தொடர்ந்து, நீட் தேர்வில் வெற்றி பெற்ற மற்றும் வெற்றி பெறாத மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் ராஜ் பவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளனர்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
“நீட் தேர்வில் பல பெரிய மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் வெற்றி பெறாத தேர்வாளர்கள் தற்காலிக பின்னடைவை மேம்பட்ட உத்திகள், வலுவான உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் போராடி வெற்றி பெறவும், மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்கள் கேட்டுக் கொண்டார்”.
18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி கோயம்புத்தூர்,திருப்பூர் தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியில் சில பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள முதல்வரை சந்தித்து ஓணம் வாழ்த்து கூறினார் தொல். திருமாவளவன்
விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான் தொல். திருமாவளவன் கேரள முதல்வர் பினராயி விஜயனை அவர் இல்லத்திலேயே சந்தித்து ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தொல். திருமாவளவன், ‘ஓணம் வாழ்த்துத் தெரிவிக்க முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க விருப்பம் தெரிவித்தோம். 15 நிமிடங்களில் அனுமதியளித்தார் முதல்வர். அவருடைய துணைவியாரை வரவழைத்து அறிமுகம் செய்தார். என்னைக் கண்டதும் ஹேப்பி ஓணம் என்று கூறினார். நாங்கள் கேரள அரசியல் மற்றும் தமிழக அரசியல் நிலை குறித்து பேசினோம்” நன்றி’ பதிவிட்டுள்ளார்.