No menu items!

ஒற்றுமை நடை பயணம் – சாதிப்பாரா ராகுல் காந்தி?

ஒற்றுமை நடை பயணம் – சாதிப்பாரா ராகுல் காந்தி?

இரண்டாவது நாளாக ராகுல் காந்தியின் நடைப்பயணம் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்திய ஒற்றுமை பயணம் என்றழைக்கப்படும் இந்தப் பயணம் 12 மாநிலங்கள் வழியே 5 மாதங்கள் தொடரப் போகிறது.

2024ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில் இந்தப் பயணம் துவக்கப்பட்டிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

திமுகவுக்கும் காங்கிரசுக்கும் உறவு சரியில்லை, அதனால்தான் அரவிந்த் கெஜ்ரிவாலை அழைத்து திட்டங்களை துவக்குகிறது திமுக அரசு என்ற கருத்துக்கள் எழுந்த நிலையில் ராகுலின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை துவக்கி வைத்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தேசியக் கொடியை ராகுல் காந்தியிடம் எடுத்துக் கொடுத்து அவரை ஆரத் தழுவிக் கொண்டார் ஸ்டாலின். அந்தக் காட்சி இந்த இருவருக்குள்ளும் கட்சிகளின் உறவைத் தாண்டி உணர்ச்சிப்பூர்வமான உறவு இருப்பதை வெளிக் காட்டியது.

கட்டியணைத்தது அவர்கள் அன்பின் ஒரு அறிகுறி என்றால் ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு அன்பின் மற்றொரு அறிகுறி. அந்தப் பதிவில்.’ Today, my brother
@RahulGandhi has begun a journey to retrieve India’s soul, to uphold the lofty ideals of our republic and to unite our country’s people with love. There can be no better place than Kumari, where the Statue of Equality stands tall, to start At a time when communal polarisation and vicious hate campaigns are engulfing the minds of people, India’s grand old party has undertaken an arduous task to unshackle India from oppression. I wish the #BharatJodoYatra to succeed in its goal of reinventing our glorious republic.’ என்று குறிப்பிட்டிருந்தார்.

‘என் சகோதரர் ராகுல் காந்தி’ என்று அவர் அழைத்ததும் நாட்டில் மதவாதமும் வெறுப்பு அரசியலும் சூழ்ந்துக் கொண்டிருக்கையில் இந்த ஒற்றுமை பயணம் அவசியமானது என்று அவர் குறிப்பிட்டிருப்பதும் திமுக எந்தத் திசையில் உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

காங்கிரஸ் இன்று மிகவும் பலவீனமாக இருக்கிறது. சமீபத்தில் அதன் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சியின் தலைமை மீது கடுமையான விமர்சனங்களை வைத்து காங்கிரசை விட்டு விலகினார். அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்பதில் சிக்கல் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் காங்கிரஸ் தலைமைக்கான தேர்தல் நடக்க உள்ளது. ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ஏற்க மறுக்கிறார். 2014, 2019 என இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை அடைந்திருக்கிறது. பாஜகவின் பலம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தச் சூழலில் ராகுல் காந்தியின் பயணம் காங்கிரஸ் கட்சியிலும் நாட்டின் அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

காங்கிரசுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்க மறுக்கும் ராகுல் காந்தி இந்தப் பயணத்தை மட்டும் தன்னை முன்னிறுத்தி நடத்துவது சரியா என்ற விமர்சனம் இப்போது எழுப்பப்படுகிறது. நியாயமான கேள்விதான். காங்கிரசின் முகமாக இருக்க விரும்பும் ராகுல் காங்கிரசின் தலைமையை ஏற்க வேண்டும் என்பதுதான் சரி.

இப்போதைய பாதயாத்திரை ராகுல் மீது வைக்கப்படும் இந்த எதிர்பார்ப்புக்கு விடையளிக்குமா என்பது சந்தேகமே. அவரது தந்தை ராஜீவ் காந்தியும் விருப்பமில்லாத அரசியல்வாதியாக அரசியலுக்குள் நுழைந்தார். 1984ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று பிரதமரானார். ஆனால் அத்தனை பெரிய வெற்றியை அவரால் அடுத்து வந்த 1989 தேர்தலில் பெற இயலவில்லை.

ராகுலின் தாய் சோனியா காந்தியும் விருப்பமில்லா அரசியல்வாதிதான். கணவர் ராஜீவின் மறைவுக்குப் பிறகு 6 வருடங்கள் கழித்து 1997ல்தான் காங்கிரஸ் உறுப்பினரானார். ராஜீவுடன் பல அரசியல் பயணங்களை மேற்கொண்டிருந்தாலும் அவர் அதிகாரப்பூர்வமாக அரசியலில் நுழைந்தது 1997ல்தான். அதன்பிறகு 7 ஆண்டுகள் கழித்துதான் காங்கிரஸ் 2004ல் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. பத்தாண்டுகள் ஆட்சியில் நீடித்தது. ராகுல் அதிகாரபூர்வமாய் அரசியலுக்குள் வந்ததும் இந்த ஆண்டுதான்.

அரசியல் என்பது 24 மணி நேர வேலை. சாப்பிடுவது, தூங்குவது, பேசுவது, படிப்பது எல்லாமே அரசியலாக இருந்தால்தான் பெரிய வெற்றிகளைப் பெற முடியும். விருப்பமில்லா அரசியல்வாதிகளால் வெற்றிகளை காண முடியாது. இதை ராகுல் காந்தி உணர வேண்டும். 5 மாதம் நடை பயணம், பிறகு ட்விட்டர் பதிவுகளில் மட்டும் அரசியல் என்றிருந்தால் காங்கிரஸ் இதை நிலையில்தான் நீடிக்கும். இத்தனை உழைப்பும் வீண் தான்.

இப்படி தலைமைச் சிக்கல் காங்கிரசின் மிகப் பெரிய சவாலாக இருக்கக் கூடிய நிலையில் காங்கிரசுக்கு இருக்கும் மற்றொரு பெரிய சவால் மாநிலக் கட்சிகளின் வளர்ச்சி. எங்கெல்லாம் காங்கிரஸ் கோலோச்சிக் கொண்டிருந்ததோ அங்கெல்லாம் மாநிலக் கட்சிகள் பலம் பெற்று காங்கிரசை ஓரங்கட்டிவிட்டன.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானாவில் சந்திரசேகரராவ், கர்நாடகத்தில் குமாரசாமி, மகராஷ்டிராவில் சிவ சேனை, பஞ்சாப்பிலும் டெல்லியிலும் ஆம் ஆத்மி….இப்படி காங்கிரஸ் வெற்றிகரமாக இருந்த இடங்களில் மாற்றுக் கட்சிகள் முன்னுக்கு வந்துவிட்டன.

காங்கிரஸ் இப்போது ஆட்சியிலிருப்பது இரண்டே மாநிலங்களில்தாம். சத்திஸ்கரிலும் ராஜஸ்தானிலும். தமிழ்நாடு, பீகார், மேகாலாயா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி நடக்கிறது.

இது மட்டுமல்லாமல் எதிர்க் கட்சி வரிசையில் மமதா பானர்ஜி, நிதிஷ் குமார், சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு பிரதமர் கனவு இருக்கிறது. இவர்கள் தங்கள் மாநிலங்களில் செல்வாக்கு மிக்கவர்கள்.

இந்த தடைகளையெல்லாம் தாண்டி ராகுல் பிரதமர் வேட்பாளாராகவும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சியாகவும் உருவாவது என்பது மிகப் பெரிய சவால்.

ஆனால் இவர்களுக்கெல்லாம் இல்லாத சில வசதிகள் ராகுல் காந்திக்கு இருக்கிறது. அகில இந்தியாவும் அறிந்த பெயர், முகம். நேரு பரம்பரை. அவரது பாட்டி இந்திரா காந்தியும் தந்தை ராஜீவ் காந்தியும் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கும் நாடு முழுவதும் அலுவலகங்கள் இருக்கின்றது. தொண்டர்கள் இருக்கிறார்கள்.

இந்தப் பலங்கள் பிரதமராக விரும்பும் பல தலைவர்களுக்கு கிடையாது.

’வெறுப்பு அரசியலால் தந்தையை இழந்தேன், ஆனால் என் நாட்டை இழக்க விட மாட்டேன்’ என்று நடை பயணத்தின் துவக்க நாளில் ராகுல் குறிப்பிட்டிருக்கிறார். மிகவும் உணர்ச்சிகரமான அந்த உரையின் அர்த்தம் மக்களை நேரடியாக சென்றடைய வாய்ப்பிருக்கிறது.

இந்த உணர்சிகரமான பேச்சுக்கள் அடுத்த 150 நாட்களும் தொடருமா? காங்கிரசுக்கு பலத்தை கூட்டுமா? காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமையை உருவாக்குமா? மாற்று சக்தியாக காங்கிரஸ் உருவாகுமா?

கேள்விகள் பல உள்ளன.

பதில்களுக்கு காத்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...