No menu items!

நியூஸ் அப்டேட்: நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது

நியூஸ் அப்டேட்: நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது

இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீட் நுழைவு எழுதியவர்கள், neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் உள்ளிட்ட சுயவிபரங்கள் பதிவுசெய்து, தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி, எம்சிசி நீட் யுஜி கவுன்சிலிங் அட்டவணையை வெளியிடுகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகள் மற்றும் நர்சிங் மற்றும் ஆயுஷ் போன்ற இளங்கலைப் படிப்புகளில் சேர தகுதி பெறுகிறார்கள். ஆயுஷ் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தனியாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்த் உள்துறை அமைச்சராக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சூலா பிரேவர்மென் நியமனம்

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து முந்தைய போரிஸ் ஜான்சன் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல் பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில் இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக சூலா பிரேவர்மென்னை பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார்.

சூலா பிரேவர்மென், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் ஆவார். இவரது தாய் உமா தமிழ்நாட்டை சேர்ந்தவர். 1960ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்திலாந்தில் குடியேறினார். அப்போது இங்கிலாந்தில் குடியேறிய கென்யாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவரை உமா திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் சூலா பிரேவர்மென். போரிஸ் ஜான்சன் அரசில் அட்டர்னி ஜெனரலாக சூலா பிரேவர்மென் பணியாற்றி வந்தார். பர்ஹம் தொகுதி எம்.பி.யான சூலா பிரேவர்மென் கடந்த 2018-ம் ஆண்டு ரெயல் பிரேவர்மென் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வெறுப்பு அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன் – ராஜீவ் நினைவிடத்தில் ராகுல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார். இதற்கான தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் இருந்து விமானம் மூலமாக ராகுல்காந்தி நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து இன்று காலை காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கும், நினைவிடத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிட நுழைவு வாயில் பகுதியில் காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில், “வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன். அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன். அன்பு வெறுப்பை வெல்லும். நம்பிக்கை பயத்தை வெல்லும். ஒன்றாக, நாம் வெல்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

மோடி, ஷேக் ஹசீனா முன்னிலையில் இந்தியாவங்கதேசம் இடையே 7 ஒப்பந்தம்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் ஷேக் ஹசீனாவும் சந்தித்துப் பேசினர். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் இரு தலைவர்கள் முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இந்நிகழ்ச்சிக்குப்பின் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் மோடி, “ஆசியாவிலேயே இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தில் இந்தியாவின் மிகப் பெரிய நட்பு நாடாக தற்போது வங்கதேசம் உள்ளது. இந்தியா – வங்கதேச எல்லைவழியாக 54 நதிகள் ஓடுகின்றன. இவை இருநாட்டு மக்களுக்கும் வாழ்வாதாரமாக உள்ளன. குஷியாரா நதி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக முக்கிய ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம்” என்று கூறினார்.

ஓணம் கொண்டாட்டம்: கேரளாவில் 5 நாட்களில் ரூ. 324 கோடிக்கு மது விற்பனை

கேரளாவில் மது விற்பனையை அரசின் பெவ்கோ நிறுவனம் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகை மது விற்பனை தொடர்பாக தெரிவித்துள்ள மாநில மது விற்பனை கழகத்தின் நிர்வாக இயக்குனர் யோகேஷ் குப்தா, “கேரளாவில் கடந்த ஆண்டு ஓணப் பண்டிகைக்கு மது விற்பனை ரூ.561 கோடிக்கு மட்டுமே நடந்தது. ஆனால், இந்த ஆண்டு பண்டிகை தொடங்கிய முதல் 5 நாளிலேயே விற்பனை ரூ. 324 கோடியை தாண்டிவிட்டது. எனவே, இந்த ஆண்டு ஓண பண்டிகைக்கான மது விற்பனை ரூ. 700 கோடியை தாண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம். மேலும் இந்த ஆண்டு மாநிலம் முழுக்க 96 மது விற்பனை கூடங்கள் புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகள் மூலம் மது விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...