தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேசுக்கு உரிய சிகிச்சைகளை மருத்துவர்கள் வழங்கி வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காந்தியும் அம்பேத்கரும்தான் இந்தியாவின் அடையாளம்; இது பாஜகவுக்கு ஏன் தெரியவில்லை? – சீமான்
சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவசிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “இந்தியாவின் அடையாளம் காந்தியும் அம்பேத்கரும்தான். எல்லோருக்கும் தெரிந்த இந்த விஷயம் நாட்டின் பிரதமருக்கு ஏன் தெரியவில்லை? பாஜகவுக்கு ஏன் தெரியவில்லை? இந்தியாவைத் தாண்டி வல்லபாய் படேலை யாருக்கு தெரியும். அப்படியிருக்கும்போது எதற்காக சிலை வைத்தீர்கள்? காந்தியை சுட்டுக்கொன்றதற்காக ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்து வைத்திருந்தார்கள். அந்த தடையை 16 மாதங்களில் நீக்கித் தந்தவர் வல்லபாய் படேல், அதற்கு நன்றிக்கடனாக சிலை வைத்துள்ளனர்” என்று கூறினார்.
குமரி அனந்தனுக்கு வீடு ஒதுக்கீடு
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் தான் வாழ்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில், வீடு வழங்கி, அதற்கான ஆணையினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று சென்னை தலைமை செயலகத்தில் குமரி அனந்தனிடம் வழங்கினார்.
கூடுதல் கட்டணம்; ஆம்னி பேருந்துகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், இன்று சென்னை எழிலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பண்டிகை காலங்களில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பின்னா செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இரண்டொரு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர் என்றார்.
நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது
பழம்பெரும் ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பிறந்த ஆஷா பரேக் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார். பிறகு 1959ல் ‛தில் தேக்கே தேகோ’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கன்காட், ஜப் பியார் கிசி சே ஹோதா ஹே, சய்யா, மெரி சூரத் தெறி ஆங்கன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஹிட் பட நாயகியாகவும், 1960-70 காலக்கட்டத்தில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் வலம் வந்தார். ஹிந்தி மட்டுமல்லாது பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் சினிமாவில் வலம் வந்த இவர் இந்திய திரைப்பட துறையின் தணிக்கை குழுவில் முதல் பெண் தலைவராக பதவி வகித்துள்ளார்.