No menu items!

அண்ணாமலை Vs ராதாரவி – மிஸ் ரகசியா

அண்ணாமலை Vs ராதாரவி – மிஸ் ரகசியா

“பொன்னியின் செல்வன் படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டீங்களா? நான் முதல் நாள் முதல் ஷோ பார்க்கப்போறேன். டிக்கெட் விலைதான் கொஞ்சம் காஸ்ட்லி. 500 ரூபா வரைக்கும் விக்கிறாங்க” என்றபடி வந்தாள் ரகசியா.

“நாடெங்கும் பெட்ரோல் குண்டுவீச்சு, மோதல்கள், போராட்டம்ன்னு நடந்துட்டு இருக்கு. உனக்கு சினிமா கேட்குதா?”

“அதைப்பற்றி கவலைப்படத்தான் முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும், போலீஸ் அதிகாரிகளும் இருக்காங்களே. அப்புறம் நான் வேற எதுக்கு கவலைப்படணும்?”

“ஓஹோ… அப்ப இதுபத்தி அரசு தீவிரமா விவாதிச்சுட்டு இருக்காங்கன்னு சொல்லு.”

“ஆமாம். தொடர்ந்து நாலஞ்சு நாளா நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு கோட்டை வட்டாரத்துல பெரிய அளவில் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருக்கு. ‘இது கொஞ்சம் சீரியசான விஷயம். நாம சாதாரணமா எடுத்துக்கக் கூடாது’ன்னு இதுபத்தி முதல்வர்கிட்ட தலைமைச் செயலாளர் எடுத்துச் சொல்லி இருக்கார். அதிலயும் இந்த பெட்ரோல் குண்டுவீச்சு இரவு நேரத்துல நடக்கல. பல இடங்கள்ல பட்டப் பகலில் நடந்திருக்குன்னு சுட்டிக்காட்டிய தலைமைச் செயலாளர், ‘இதை நாம தடுத்து நிறுத்தியே தீரணும்’னு சொல்லியிருக்கார். இதைத் தொடர்ந்து முதல்வரும் தலைமைச் செயலாளர் கிட்ட காணொளி காட்சி மூலமா போலீஸ் அதிகாரிங்ககிட்ட பேசச் சொல்லியிருக்கார். அவரும் இதுபத்தி போலீஸ் அதிகாரிகள்கிட்ட பேசியிருக்கார். அதுக்கு அப்புறமாத்தான் போலீஸ்காரங்க கைது நடவடிக்கையில தீவிரம் காட்டி இருக்காங்க. அதேநேரத்துல பெட்ரோல் குண்டு வீசுபவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி எச்சரிக்கை செய்தார். ஆனால், இதுவரை கைது செய்யப்பட்டவர்களை தமிழக போலீஸ் அந்தப் பிரிவில் கைது செய்யவில்லை.”

“இதுமாதிரி விஷயங்கள்ல ஈடுபடறவங்களை இரும்புக் கரத்தால அடக்கறதுதான் நாட்டுக்கு நல்லது.”

“முதல்வரும் அந்த எண்ணத்துலதான் இருக்கார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தால தமிழ்நாட்டுல பாஜக வலுவாயிடக் கூடாதுங்கிறதுலயும் அவர் உறுதியா இருக்கார். அதேமாதிரி கட்சியின் மூத்த தலைவர்கள் கிட்டயும் ஜாக்கிரதையா பேசணும்னு எச்சரிக்கை செஞ்சிருக்காரு.”

“அப்படி யாரை அவர் எச்சரிச்சு இருக்காரு?”

“அரசுப் பேருந்தில் பெண்கள் இலவசமா பயணம் செய்யலாங்கிற திட்டம் திமுகவுக்கு ஆதரவாக மக்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்குன்னு முதல்வர் ஸ்டாலின் பெருமையா சொல்லிட்டு இருந்தார். மக்கள் பேருந்தை ஸ்டாலின் பஸ்னு கூப்பிடறதாவும் பெருமைப்பட்டுட்டு இருந்தார். இந்த நேரத்துல் இலவச பேருந்து திட்டத்தை ஓசின்னு பொன்முடி சொல்லியிருக்கிறது பெரிய அளவுல அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கு. பொன்முடியோட இந்த பேச்சு வைரலாக, ‘அரசு கஜானாதானே செலவு செய்யுது. அறிவாலய கஜானா இல்லையேன்னு’ சிலர் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இதுபத்தி மீம்ஸ்கள் பரவ, டென்ஷனாகி இருக்கார் முதல்வர். பட்டியலின மக்கள் பிரதிநிதிகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் நிற்க வைத்தே பேசிய புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையானதிலும் முதல்வர் அப்செட். அதனால்தான் கவனமா இருங்கன்ற அந்த அறிக்கை.”

“ஆ.ராசா பேசுனதை லிஸ்ட்ல நீ சொல்லலையே… தை முதல்வர் கண்டுக்கலையா?”

“ஆ.ராசா பேசுனதை முதல்வர் கேட்டதும் இது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும்னு கருத்து தெரிவிச்சாராம். கொஞ்ச நேரத்துல ஆ.ராசா அவரை சந்திக்க போயிருக்கிறார். அப்போ ஆ.ராசா அவருக்கு விளக்கம் கொடுத்திருக்கார். அவர் பேசுனதை பாஜக எப்படி திசை திருப்பி விடுதுனு சொன்னாராம். முதல்வர் உடனே சமூக ஊடகங்கள்ல ஆ.ராசா பேசுனது, மனுஸ்மிருதி இதையெல்லாம் பத்தி விளக்கமா போடுங்க. மக்களுக்கு புரிய வைங்கனு சொல்லியிருக்கார். அதுக்கப்புறம்தான் திமுக ஐடி செல் மூலமா மனுஸ்மிருதி பத்தி மத்தவங்க பேசுனதெல்லாம் வைரல் பண்ணியிருக்காங்க. முதல்வர் தான் சொன்னதை புரிஞ்சிக்கிட்டார்னு ஆ.ராசாவுக்கு சந்தோஷமாம்.”

“திமுக மாவட்ட செயலாளர் தேர்தல்கள் எந்த நிலையில இருக்கு?”

“கட்சிக்காரங்க மத்தியில மாவட்ட செயலாளர் தேர்தல் ரொம்ப அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதா சொல்றாங்க. குறிப்பா தஞ்சாவூர்ல பழனிமாணிக்கத்தை ஒதுக்கினதை அவரோட ஆதரவாளர்கள் அவ்வளவா ரசிக்கல. இப்ப புதுக்கோட்டையில ரகுபதியை மாவட்ட செயலாளார் ஆக்குற முடிவை பெரியண்ணனோட ஆதரவாளர்கள் ஏத்துக்கலயாம். புதுசா கட்சியில சேர்ந்தவங்களுக்காக ஏற்கெனவே கட்சியில பல வருஷம் இருந்தவங்களை ஒதுக்கறாங்கன்னு அவங்க புலம்பிட்டு இருக்காங்க. 22 மாவட்டங்கள்ல புது மாவட்ட செயலாளர்களை நியமிக்க திமுக தலைமை முடிவெடுத்து இருக்கறதா ஒரு பேச்சு இருக்கு. அது நடந்தா அதிருப்தி இன்னும் அதிகரிக்கும்னு சொல்றாங்க.”

“கொங்கு மண்டலத்துலயும் ஏதோ அதிருப்தின்னு கேள்விப்பட்டேனே?”

“ஆமா. செந்தில் பாலாஜி பொறுப்பாளரா இருந்து கொங்கு மண்டலத்துல கட்சியை வளர்க்கிறார்னு திமுக தலைமை நம்பிக்கையோட இருக்கு. ஆனா ‘அவர் தலைமையை ஏமாத்தறார். தலைமையும் அவரை நம்பி ஏமாந்து போகுது. கோவையில் அவர் செஞ்சதெல்லாமே துக்ளக்தனம்’னு அங்க இருக்கிற சில உடன்பிறப்புகள் மத்தியில பேச்சு வரத் தொடங்கி இருக்கு. ஏற்கெனவே கோவை மாவட்டத்துக்கு 5 மாவட்ட செயலாளர்கள்னு இருந்ததை செந்தில் பாலாஜி மூணா சுருக்கினாரு. இப்ப அந்த மாவட்டங்களுக்கு செயலாளரா அவர் சிபாரிசு செஞ்சிருக்கிறவங்களும் சரியில்லைன்னு கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க. குறிப்பா கோவை தெற்கு மாவட்டத்துக்கு தளபதி முருகேசன், வடக்கு மாவட்டத்துக்கு தொ.அ.ரவி, கோவை மாநகர மாவட்டத்துக்கு கார்த்திக்னு செந்தில்பாலாஜி சிபாரிசு செஞ்சிருக்காரு. இதுல கார்த்திக் ஏ.வ.வேலு கோஷ்டியில இருந்தவர். இப்ப செந்தில் பாலாஜி கோஷ்டியில இருக்கிற இவர், மதிமுகவுக்கு போய் திரும்பி வந்தவர்னு சொல்றாங்க. தளபதி முருகேசன், காங்கிரஸ், தேமுதிகன்னு பல கட்சிகள்ல ஒரு ரவுண்டு வந்தவர்னு சொறாங்க. தொ.அ.ரவி மேலயும் இப்படி பல கட்சிகளில் இருந்தவர்ங்கிற குற்றச்சாட்டு இருக்கு. இப்படி பல கட்சிகளுக்கு போய்ட்டு வந்தவங்களை மாவட்ட செயலாளர் ஆக்கிட்டு, கட்சிக்காக பல வருஷமா கஷ்டப்பட்டவங்களை ஒதுக்கலாமாங்கிற ஒரு குற்றச்சாட்டும் கட்சிக்காரங்க மத்தியில இருக்கு.”

“அவங்க சொல்றதும் சரிதானே?”

“சென்னையில் ராயபுரம் பகுதியில் இளைய அருணாவை தூக்கிவிட்டு அந்த இடத்தில் ஐட்ரீம் மூத்தியை செயலாளராக நியமிக்க சிபாரிசு செய்துள்ளாராம் சேகர்பாபு. கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிட்டு மாவட்ட செயலாளர் நியமனம் செய்யப்படுவதாகவும் கட்சிக்காரர்களிடையே புகார் உள்ளது.”

“பாஜக செய்தி ஏதும் இருக்கா?”

“நடிகர் ராதாரவி சமீபத்துல கமலாலயத்துக்கு போயிருக்கார். அப்ப அங்க இருந்த அண்ணாமலை, அவர்கிட்ட, ‘கொஞ்சம் பார்த்து பேசுங்க. நீங்க பாட்டுக்கு ஏதாவது சொல்லிட்டு போயிடுறீங்க. அப்புறம் அதுக்கு பல பேர் எங்ககிட்ட விளக்கம் கேக்கறாங்க. பதில் சொல்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கு’ன்னு அட்வைஸ் பண்ணியிருக்கார்.”

“அதுக்கு ராதாரவி என்ன சொன்னாராம்?”

“அவருக்குத்தான் இதுமாதிரி யாராவது சொன்னா பிடிக்காதே. ‘எனக்கு நீ பாடம் சொல்லித் தர்றியா?’ன்னு பதிலுக்கு அண்ணாமலையைப் பார்த்து சத்தம் போட ஆரம்பிச்சு இருக்கார். நிலைமை கையை மீறி போறதுக்குள்ள அங்க இருந்த சிலர் ராதாரவியை தனியா கூட்டிட்டு போயிருக்காங்க.”

“அதுசரி.”

“ஆ.ராசாவை கண்டிச்சு தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்னு அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்புக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு. ஜெயிலுக்கு போறது, வழக்குகளை சந்திக்கிறதுலாம் தொண்டர்களுக்கு பெரிய பிரச்சினையா மாறிடும்னு சொல்லியிருக்காங்க. அதனால கோயம்புத்தூர்ல கண்டன போராட்டத்தை மட்டும் நடத்திட்டு சிறை நிரப்பும் போராட்டத்தை கண்டுக்காம விட்டிருக்கார் அண்ணாமலை.”

“அண்ணாமலை ரூட்ல கட்சிக்காரங்களே போறதில்லை போல?”

“அண்ணாமலையோட அரசியல கட்சிக்காரங்க ஏத்துக்கல. பாஜகவினரை கைது செய்யும் காவல்துறையினர் கஷ்டப்படுவாங்க, அவங்களுக்கு ஓய்வுதியம்லாம் கிடைக்காதுன்ற மாதிரி சமீபத்துல அண்ணாமலை மிரட்டல் தொனில பேசியிருந்தார். அதை கட்சியின் பழைய தலைவர்கள் ரசிக்கவில்லை. ஒரு ஐபிஎஸ் அதிகாரி இப்படிலாம் பேசலாமா? கட்சியோட இமேஜ் என்னாகிறதுனு கேக்குறாங்க”

“நயினார் நாகேந்திரன் முதல்வரை புகழ்ந்து பேசிக்கிட்டு இருக்காரே… கட்சி மாறப் போறாரா?”

“ஆமா திருநெல்வேலில நடந்த ஒரு விழாவுல முதல்வரையும் மருத்துவத் துறை அமைச்சரையும் பாராட்டியிருக்கிறார். ‘என் தொகுதிக்கு 4 நல்லது நடக்கணும்னா இப்படியெல்லாம் பேசித்தானே ஆகணும்’ன்னு சொல்றாராம் நயினார் நாகேந்திரன். ஆனா அவருக்கு பாஜகவுல உரிய மரியாதை கிடைக்கலங்கிற வருத்தம் இருக்கு. கட்சி மாறுவதற்கு பொருத்தமான நேரம் பார்த்துக்கிட்டு இருக்கார்னு கூட இருக்கிறவங்க சொல்றாங்க.”

“கட்சி மாறினா எம்.எல்.ஏ. பதவி போயிடும். என்ன செய்வார் பாவம். வருத்தத்திலேயே இருக்க வேண்டியதுதான்.”

“நயினார் நாகேந்திரன் மாதிரி சினிமா வட்டாரத்திலேயும் ஒருத்தர் வருத்தத்துல இருக்கிறார்.”

“யாரது?”

“நம்ம அரவிந்த் சாமிதான். மணிரத்னத்தின் சிஷ்யனான அவரை பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவும் கூப்பிடலையாம். அது சம்பந்தமான விழாக்களுக்கும் அழைப்பில்லையாம். அவர் கூடவே இருந்தேன் என்னை ஒதுக்கிட்டாருனு க்ளோஸானா ஆட்கள்கிட்ட சோகமா புலம்பிக்கிட்டு இருக்கிறாராம். பாவம்” என்று கூறி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...